Tamil Sanjikai

அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜி‌.எல்.இன் சி.இ .ஓ.வான சுந்தர் ராமசாமி, தமிழ்நாட்டில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வாக்களிக்க தனி விமானத்தில், பாதுகாவலர்களோடு இந்தியா வருகிறார். அப்போது சுந்தரின் வாக்கை முகம் தெரியாத யாரோ ஒருவர் போட்டு விட கோபத்தில் சட்ட ரீதியான அணுகுமுறையின் மூலம் நீதி மன்றம் சென்று தனக்கான வாக்கைக் கைப்பற்றி, ஜெயித்த ஆளும் கட்சியின் பதவியேற்பு விழாவை ஒத்தி வைக்கிறார். சுந்தருக்கு நிகழ்ந்தது போன்றே தங்களுடைய ஓட்டைக் காவு கொடுத்த சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோர் சட்டத்தை அணுகி வழக்கு தொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் மறுதேர்தலுக்கு உத்தரவிடுகிறது. இதன் பின்புலத்தில் சுந்தர் இருக்கிறார். இது ஆளும் கட்சிக்கு நெருக்கடியையும், சுந்தர் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. சுந்தர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும்கட்சியை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார். என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

சமகாலத்தில் தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் தேக்கத்தையும், முரண்பாடுகளையும், மக்கள் பிரச்சினையையும் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் இயக்குனர் முருகதாஸ் மற்றும் படக்குழுவினர்.

சமூக அக்கறையோடு உருவாக்கப்படும் எந்த ஒரு படைப்புக்கும் எதிர்வினை வருவது போலவே சர்கார் படமும் கதைத் திருட்டுப் பிரச்சினையில் சிக்கி வெளிவந்திருக்கிறது.

அட்டகாசமான மேக்கிங். யார் சொன்னால் எடுபடும் என்கிற ரீதியில் யோசித்தால் இந்தக்கதையை யார் எழுதியிருந்தாலும் முருகதாசின் மேக்கிங் ஸ்டைலில் பட்டை தீட்டப்பட்டிருப்பதால் ஜொலிக்கிறது.

இந்தக் கதையின் நாயகன் ஒரு சாமானியனாக இல்லாதிருக்கும் பட்சத்தில் கதையை முன்னோக்கி நகர்த்த முடியாது என்பதால் விஜய்யின் கதாபாத்திரத்தை கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் தாக்கத்தோடு உருவாக்கியிருக்கிறார்கள். பாத்திரத்தின் பெயரும் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் என்பதை ஜி‌.எல் என்று சுருக்கமாக வைத்திருக்கிறார்கள். விஜய் கதைக்குப் பொருத்தமான பாத்திரத் தேர்வு. டயலாக் டெலிவரி, நடனம், உடைகள், சண்டை போன்றவற்றில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

முதல்வர். மாசிலாமணியாக பழ.கருப்பையா வில்லத்தனம் காட்டியிருக்கிறார். கம்முனு இடம்பெற்ற பாடல்களைப் போலவே கீர்த்தி சுரேஷ் தேவையற்ற திணிப்பு. வரலெக்ஷ்மி வழக்கம்போல முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கிறார். ராதாரவி ஜம்முனு நடித்திருக்கிறார். யோகி பாபுவை வீணடித்திருக்கிறார்கள்.

டெக்னிக்கல் டீமைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நிறைவுதான் என்றாலும் கூட கத்தி, துப்பாக்கி படங்களின் சாயல் எல்லா டிபார்ட்மெண்டுகளிலும் துருத்திக் கொண்டு நிற்கிறது.

49P எனப்படும் தேர்தல் விதியைக் கையில் எடுத்துக் கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்கள். ஒரு குடிமகனின் வாக்கு, அவரல்லாமல் வேறு ஒருவரால் அளிக்கப் படுமாயின் அதைத் திரும்பப் பெறுவது குறித்த விதி. இப்படி ஒரு மாஸ் களத்தைக் கையில் வைத்துக் கொண்டும், விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டும் பரபர திரைக்கதையைக் கோட்டை விட்டதுதான் ஏன் என்று புரியவில்லை.

அமெரிக்காவில் இருந்து அத்தனை பெரிய கார்ப்பொரேட் மான்ஸ்டர் என்ற அடைமொழியோடு, பிரைவேட் ஜெட்டில் அடியாட்களோடு வந்திறங்கி தனது ஓட்டு திருடப்பட்டது என்று தெரிந்து கோபத்தில் ஜெத்மலானி என்னும் மிகப்பெரிய வழக்கறிரோடு உரையாடி, முகநூல் அதிபர் மார்க் சுக்கர்பெர்க்கோடு ஸ்கைப்பில் முகமுகமாக பேசிக்கொண்டு போகும்போது அப்படியே தூக்கி உட்கார வைத்து விடுகிறார்கள். கார்ப்பொரேட் மான்ஸ்டர் அவர்கள் இப்போது கலக்குவார் என்று நிமிர்ந்து பார்த்தால் தன்னுடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டவனோடு உட்கார்ந்து சுண்டகஞ்சி குடித்துக் கொண்டு ஆடிப்பாடுகிறார்.

ஒரு காட்சியில் சுந்தரின் செக்கியுரிட்டி ஒருவர் சொல்வார். நாங்கள் இங்கே இல்லாவிட்டாலும் உங்களை யாரும் தொட முடியாது என்று சொல்லும்போது நாம் விஜய்யின் மாஸ் ஹீரோயிசத்தை நினைத்துக் கொள்வோம். ஆனால் உண்மையில் அந்த டயலாக் சொல்வது இந்திய நாட்டின் அமெரிக்கப் பிரஜையை இந்தியாவாலேயே தொட முடியாது என்பதுதான். பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையின் மீதான அமெரிக்காவின் நிலைப்பாட்டோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் நலம்.

வழக்கம்போல ஆட்சியாளர்களோடு சவால் விட்டுவிட்டுக் கொண்டு , ஐ.ஐ.டி மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு அனல் பறக்க சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார் விஜய். சண்டைக்காட்சிகள் நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஃபைட்டும் அனல் பறக்கிறது. ஆனால் 49p என்றொரு கனமான, சட்ட ரீதியிலான ஒரு அணுகுமுறையைக் கையாள முடிந்த ஒரு அறிவாளி, தன்னோடு மோத வரும் அடியாட்களை இத்தனை அனாயாசமாக மடக்கி, நெளித்து, வளைத்து , உருட்டிப் பிசைந்து போடுகிறார் என்றால் இது விஜய்க்காக மட்டுமே புனையப் பட்ட கதை என்று நாம் அறிந்து கொள்ள முடியும். பாவம் அடிபட்டவர்கள். படத்தில் வால்வோ, ரோல்ஸ்ராய்ஸ் , ரேஞ்ச்ரோவர், அவ்டி வகையறா கார்களைப் பறக்க விட்டிருக்கிறார்கள். படம் ஒரு கட்டத்தில் பிரசார நெடியில் விக்கித்து நிற்கிறது.

ஜெயமோகனின் வசனங்கள் இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம். மீத்தேன், கூடங்குளம், ஹைட்ரோ கார்பன் என்று சமீபத்திய அவலங்களை பேசிவிட்டு அதற்கு ஒரு தீர்வு நான் தருவேன் என்று ஒரு முழு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். விஜயும் தனது லைம்லைட்டைப் பயன்படுத்தி சிறப்பாகச் செய்து தன்னுடைய அரசியல் வருகையைச் சூசகமாக சொல்லியிருக்கிறார். கமலும், ரஜினியும் அரசியலுக்கு வருவதை ஏற்கும் போது விஜயை ஏற்கக் கூடாதா என்ன ? ஆனாலும் விஜய் தனது சின்ன வயதைக் கருத்தில் கொண்டு அரசியல் வருகை குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது அவசியம்.

ஒரு காட்சியில் ஆளும்கட்சி மாநாடு நடந்து கொண்டிருக்கும். அதில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொல்வார் , மரமில்லை என்றால் மழை பொழியாதாம் ! அப்போ கடலில் எப்படி மழை பெய்கிறது ? என்று சொல்லிவிட்டு  சிரிப்பார். இப்படி போகிற போக்கில் தற்போதைய விஞ்ஞானிகளைப் பகடி செய்துவிட்டு, அடுத்த காட்சியில் அந்த நபர் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர் என்று சொல்கிறார் ஆளும்கட்சி தலைவர். இது ஒரு சுய பகடியோ என்று எண்ணத் தோன்றுகிறது.  

அதேபோல பத்திரிகையாளர்கள் ஒரே விதமான விஷயத்தை இரு அர்த்தம் தருவதாக விளங்கிக் கொள்கிறார்கள் என்பது போன்ற காட்சியமைப்பு விஜயுடனான அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு காட்சியில் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் உங்களிடம் கேள்வி கேட்கவில்லையா இயக்குனர் அய்யா ? 

படத்தின் பல காட்சிகளில் வாக்குக்குப் பணம் வாங்கியவர்கள் , பணம் வாங்கியவர்கள் என சொல்கிறார்கள். அதுவும் கூட அடித்தட்டு மக்களின் மேலேயே இந்தப் பொதுக் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது.  பொதுமக்கள் தாங்கள் வாக்குக்குப் பணம் வாங்கியதால் கையில அடி !. இலவசம் வாங்க ஓடியதால் கால்ல அடி ! என்று சொல்லுமிடங்கள் அனைத்தும் தமிழக அடித்தட்டுமக்களை எல்லாம் ஏதோ பிச்சைக்காரர்களைச் சித்தரிப்பது போல இருக்கின்றன. இது ஒரு எதிர்மறையான தாக்கத்தையே உண்டு பண்ணுகிறது.

இலவசமாகக் கிடைத்த பொருட்களைக் குப்பையில் தூக்கி வீசும் காட்சி ஒருசோற்றுப் பதம். ஆனாலும்கூட இங்கே குடிமக்களுக்கு இலவசமாய்க் கிடைக்க வேண்டிய கல்வி , மருத்துவம்  போன்ற அடிப்படை விஷயங்கள் அரசால் தார்மீக ரீதியாகவே இலவசமாகக் கிடைக்க வேண்டியவை என்பதை இந்த இலவச மறுப்புக் கருத்தாக்கங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அதைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய கடமை இயக்குனருக்கு இருக்கிறது.

 வரலெட்சுமிக்கு கோமளவல்லி என்று பெயர் வைத்து, பச்சைப்புடவை கட்டி விட்டு, பயங்கர வியூகங்கள் வகுத்து, தனது தந்தையையே அரசியல் கொலைக்கு ஆட்படுத்தி, அவரது திட்டங்கள் தவிடுபொடியாகி சிறைக்குச் செல்வது யார்யாரையோ நினைவு படுத்துகிறது. ஆனாலும் தயாரிப்பு தரப்பில் இருந்து பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரம் ஒரு தனிமனித எள்ளலாக இருப்பது உறுத்துகிறது. கோமளவல்லி என்பது யாரென்று எல்லோருக்கும் தெரியும். அதையே திரைப்படத்தில் வரும் செய்திக் காட்சிகளில் ‘கோமலவள்ளி’ என்று ஸ்க்ரோலிங்க் நியூஸ் ஓடுவது ஒரு இயக்குனராக அவரது மாண்பைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. ஒருவேளை அந்தக் கோமளவல்லி இன்று உயிரோடிருந்தால் படம் வெளியாயிருக்குமா என்று தெரியவில்லை. இந்தத் தனிமனித இழிவுபடுத்தலைத் தவிர்த்திருக்கலாம்.

வாட்ஸ் ஆப் கலாச்சாரத்தில் ஒவ்வொரு கொலைகளையும் கொடூரங்களையும் ஃபார்வேர்டு மட்டும் செய்துவிட்டு , அடுத்த பதற வைக்கும் செய்தி வந்தவுடன் பழைய சம்பவங்களை மறந்து போகும் இந்தக் காலச் சூழ்நிலையையும், மனிதர்களையும் நெற்றி பொட்டில் அறைந்து அருமையாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

திருநெல்வேலி கந்துவட்டி தற்கொலையை நியாபகப் படுத்தியதற்கு நன்றி. படத்தில் நிறைய அரச பயங்கரவாதங்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறார். கிளைமாக்ஸும் வித்தியாசமாக இருக்கிறது. இன்றைய அரசியல் இருக்கும் ஒவ்வாமை நிலையைக் கூறி அதற்கான விடை இப்படி இருந்தால் நன்றாய் இருக்கும் என்பது வெகுஜன விருப்பமாய் அமைந்திருப்பது ஆறுதல். அந்த இடத்தில் விஜயைப் பொருத்திப் பார்த்தால் இது விஜய்க்கான ஒரு விளம்பரப் படம் மட்டுமே !

ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் கச்சிதம். பாடல்கள் ஏமாற்றமே ! விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சி மற்றும் சுண்டக்கஞ்சி குடிக்கும் காட்சிகளில் மட்டும் சட்டப்பூர்வ எச்சரிக்கை வாசகத்தை வைத்திருப்பது போல , போன் பேசிவிட்டே விஜய் வண்டி ஓட்டும் காட்சிகளிலும் ‘செல்ஃபோன் பேசியபடி வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு’ என்னும் வாசகத்தை சேர்த்திருக்கலாம்.

சர்கார் திரைப்படம் சமகாலத்தில் பேசப்பட வேண்டிய அரசியலைப் பேசுகிறது. இளைஞர்களுக்கு பிடிக்கும். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே இது வருண் ராஜேந்திரனின் கதைதான் என்றால் வாழ்த்துக்கள் வருண். உங்களது அடுத்த படம் அறம் படத்தை விடவும் சிறப்பாக இருக்கட்டும்.

அதுசரிங்க முருகதாஸ் அண்ணே ! அது எப்பூடி அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர் இந்தியாவுல ஓட்டு போட முடியும் ? கொஞ்சம் கூகுள் சுந்தர் பிச்சைக்கிட்ட கேட்டு சொல்லுங்கோ ! வணக்கம் ....

0 Comments

Write A Comment