கறி விருந்தில் ஏற்படும் சண்டை, தொடர் கொலையில் முடிய, கொல்லப்பட்டவனின் மனைவி, கொன்றவர்களின் குடும்பத்திலுள்ள கடைசி வாரிசு வரையில் வேரறுக்க முயற்சி செய்வது வரையில், காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவன் ரெண்டெ முக்கால் மணிநேரம் காதில் ரத்தம் வழிய காத்துக் கிடப்பதே சண்டக்கோழி இரண்டாம் பாகம்.
சண்டக்கோழி முதல் பாகத்துக்கும், இரண்டாம் பாகத்துக்கும் கதையின் ஓட்டத்தில் இருக்கும் சம்பந்தம் கூட படத்தின் ஓட்டத்தில் இல்லை. விஷால் மற்றும் ராஜ்கிரண் தவிர்த்து வேறு யாரும் இரண்டாம் பாகத்தில் இல்லை.
ஏழு ஊர் மக்கள் சேர்ந்து நடத்தும் கோயில் திருவிழாவில் , ஆட்டுக்கறி பரிமாறும்போது ஏற்படும் சண்டையில் கறி பரிமாறியவர் கொல்லப்படுகிறார். அதைத் தொடர்ந்து கொல்லப்பட்டவரின் சொந்தக்காரர்கள் சேர்ந்து கொலை செய்த ஊர் முக்கியஸ்தரை அவரது மனைவியின் கண்ணெதிரே கொலை செய்கிறார்கள். அப்போது இறந்து போனவரின் மனைவி தன் கணவரைக் கொன்றவரின் வாரிசுகளை ஒட்டு மொத்தமாக அழிப்பதாகச் சபதமிடுகிறாள். அதைத் தொடர்ந்து வரிசையாக அந்தக் குடும்பத்தில் உள்ள வாரிசுகள் ஈவு இரக்கமின்றி கொல்லப் படுகிறார்கள். ஏழு வருடங்களாக திருவிழா நடக்காமல் இருக்கிறது. ஒரே ஒருவனைத் துரத்துகிறார்கள். அவன் பெயர் அன்பு.
அன்பு கொல்லப்பட்டு விடாமல் அந்த ஊரின் பெரும்புள்ளியான துரை அய்யாவும், அவரது மகனும் பாடுபடுகிறார்கள். இந்தக் கதைச் சுருக்கத்தை முதல் இருபது நிமிடங்களிலேயே சொல்லி விடுவதால், அந்த கடைசி வாரிசைச் சுற்றித்தான் கதை நகரும் என்பதும், எதிரிகளால் விஷாலையும் , ராஜ்கிரனையும் தாண்டி அவனைக் கொல்லவே முடியாது என்பதும் நமக்குத் தெரிந்து விடுவதாலும், அதற்கு மேல் அந்தப்படத்தை உட்கார்ந்து பார்க்க வைக்கும் Energetic Elements காட்சிகள் அமைக்கப் படாததாலும் பார்வையாளர்களுக்கு ஒருவித அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது.
ஒரு கரிசல் காடு லொக்கேஷன், ஒரு நான்கு ராட்சத மின்விசிறிகள், மூன்று லாரி புழுதி மற்றும் குப்பைகள், ரோப் கட்டிய நான்கு கிரேன்கள் , பத்து லாரி பந்தல் கால்கள் , இருபது லாரி உதிரிப் பூக்கள், ரெண்டாயிரம் ஜூனியர் ஆர்டிஸ்டுகள் , நிறைய வசன பேப்பர்கள், கொஞ்சூண்டு கல்நெஞ்சம் இவையெல்லாம் சேர்ந்து ஒரு திரைப்படம் உருவாகக் காரணமாயிருந்திருக்கிறது.
விஷாலுக்கென்று ஒரு தனி Templateஐ உருவாக்கி வைத்து அதில் கொஞ்சம் வசனங்கள் தூவி , ஆய் ! ஊய் ! என்று கத்தவைத்து நம்மைக் கதற வைத்திருக்கிறார்கள். தன்னுடைய இரண்டாவது படத்திலிருந்து இருபத்தி நான்காவது படம் வரைக்கும் ஒரே ஹேர் ஸ்டைல், கேட் அப் மற்றும் மேனரிசத்தில் வலம் வந்த ஒரே ஆள் விஷால்தான். இயக்குனர் பாலா படம் மட்டும் விதிவிலக்கு.
படத்தின் துவக்கத்தில் இருந்தே தொடரும் திருவிழாக் காட்சிகள் கடுப்பேத்துகின்றன. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஐயா ! ஐயா ! என்று ஒரு பத்தாயிரம் தடவை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஐயா வேடத்துக்கு ராஜ்கிரண் நன்றாகப் பொருந்தியிருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் அந்தப் படத்தைக் கற்பனை செய்யவே முடியாது. அவர் வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் சுரத்திருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகள் கொஞ்சம் நிம்மதி என்றாலும் கூட திசைகாட்டி மாதிரி சுற்றும் அவரது வாய் எடுபடவில்லை. விஷால் பின்னால் அலைந்து டிரைவர் ! டிரைவர் ! என்று சொல்லித் திரியும் காட்சிகள் ரசிக்கவில்லை. மீரா ஜாஸ்மின் இடத்தில் கீர்த்தி சுரேஷைப் பொருத்தவே இயலவில்லை.
ராஜ்கிரணும், கீர்த்தி சுரேஷும் பேசிக் கொள்ளும் இடத்தில், பாலு வாழ்க்கைல வந்த அந்தப் பொண்ணு ! என்று மீரா ஜாஸ்மின் தொடர்பான வசனங்களின் வாயிலாக முதல் பாகத்துக்கு முடிச்சு போட முயன்றிருக்கிறார் இயக்கினர். டீட்டெயில் சொன்னால் Duration பிரச்சினை வந்துவிடும் அபாயம் இருப்பதால் அதிலும் பின்னணி இசையே வருகிறது.
காமெடி டிராக்கும் இல்லை , கதையிலும் காமெடி இல்லையென்பதால் கஞ்சா கருப்பும், ராமதாசும் தேவையேயில்லாமல் பேசும் வசனங்களுக்கெல்லாம் சிரித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
யுவனின் இசையில் இரண்டு பாடல்கள் நலம். பின்னணி இசை சுமார் ரகம்.
சண்டைக்காட்சிகள் மட்டும் ரசிகர்களுக்கு ஆசுவாசம் தருகிறது. விஷாலை தியேட்டரிலேயே கலாய்க்கிறார்கள். ‘செல்லமே’ படத்தில் பார்த்த அந்த கியூட் விஷாலைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது.
லால் மற்றும் ஹரீஷ் பேரடி ஆகிய அற்புதமான இரண்டு நடிகர்களைக் கொண்டு வந்து , சீரழித்து பொங்கல் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேரின் நடிப்பு எப்படி இருக்குமென்பது மலையாளப் படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
வரலட்சுமியை எத்தனை நாட்களுக்கு இப்படி அலங்கோலமான வேடத்தில் பார்க்க முடியுமோ என்று தெரியவில்லை. சரத்குமாராய் முனி படத்தில் பார்த்தது போல இருக்கிறது.தேவையில்லாமல் ஒரு அப்பாவியைக் கொல்ல ஏழு வருஷங்கள் அலைந்து திரிகிறார்கள். லாஜிக் சுத்தம் ! எப்படி அத்தனை பேரைக் கொன்று விட்டு ஜாலியாகத் திரிய முடியும் ? கொலை செய்தவர்கள் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போனார்கள் என்ற செய்தி எங்கும் காட்டப் படவில்லை. போதாக்குறைக்கு ஒரு சிறுவனின் கையில் அரிவாளைக் கொடுத்து வெட்ட வைத்து அதைப் பார்த்து அந்தத் தாய் பெருமிதப்படும் காட்சியை வைத்துத் தொலைத்திருக்கிறார்கள். நல்லாருங்க சாமி ! ஒரே சண்டையில் திருந்த வேண்டிய பெண்ணை கிளைமாக்ஸ் வரை கொண்டு சென்றதுதான் வரலாறு. ஒரு பெண் காட்டுத் தனமாகக் கத்திக் கொண்டு கொலைவெறியில் சுத்துவது போன்றெல்லாம் எத்தனை நாளைக்கு படத்தில் காட்டுவீர்கள் ?
பெரிய பெரிய மீசைகள் வைத்துக் கொண்டு போயும் போயும் ஆட்டுக்கறிக்காகவா கொலை செய்வார்கள் ?
ஆனந்தம் என்றொரு அசாத்தியமான குடும்பப் படத்தையும், ரன், சண்டக்கோழி என்ற செம்ம ஆக்ஷன் படங்களையும் கொடுத்தவர் இயக்குனர்.லிங்குசாமி என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். என்னாச்சி சார் ?
சண்டக்கோழி 2 – ஷாட் ஃபிலிமுக்கான கண்டெண்டில் நீட்டமாக இழுத்து, உருக்கி, கூர்மையாக்கி, திரையரங்க மேற்கூரையில் ரசிகர்களின் தலைக்கு நேராகத் தொங்க விடப்பட்ட கத்தி.
0 Comments