Tamil Sanjikai

சைக்கோ அனாலிசிஸ் த்ரில்லர் படம் ஒன்றை இயக்குவதற்காக கேஸ் ஸ்டடிகள் செய்து ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டே தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கிறான் அன்பு எனும் இளைஞன். வாய்ப்பு கிடைக்காமல் இறுதியாக குடும்பத்தினரின் வற்புறுத்தலின் நிமித்தம் அக்காவின் கணவர் மூலம் போலீசில் சேர்கிறான்.

அந்த சமயத்தில் தொடர்ச்சியாக பதினைந்து வயதுக்குட்பட்ட பள்ளிச் சிறுமிகள் கடத்தப் பட்டு இரண்டு நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப் படுகிறார்கள். போலீஸ் துப்புத் துலக்க முயற்சித்து தோல்வியடைகிறது. நிழலில் திரைப்படமாக எடுக்க நினைத்த சப்ஜெக்ட் நிஜத்தில் கைகூடுகிறது.

அந்த சிறுமிகள் கடத்தப் படுவதற்கு முன் அவர்களது வீட்டில் ஒரு பரிசுப் பொருள் பெட்டி வைக்கப் படுகிறது. தலைமுடி பிடுங்கப் பட்டு, வாய் கிழிக்கப் பட்டு, கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் பொம்மை ஒன்றின் தலைமட்டும் அந்தப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுமிகளும் அவ்வாறே கொல்லப்படுவதை தன்னுடைய கேஸ் ஸ்டடி தந்த அறிவினால், உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கிறான் அன்பு. அதை வழக்கம் போல தங்களுடைய ஈகோ காரணமாக நிராகரிக்கிறது உயர்மட்ட காவல்துறை.

ஒரு கட்டத்தில் தன்னுடைய சொந்த அக்காவின் மகள் கடத்தப்பட்டு கொல்லப்படும் போது அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு கொலையாளியைக் கண்டுபிடிக்கிறான் அன்பு. இதுதான் கதை.

பலநாட்களுக்குப் பின் தமிழ் சினிமாவில் வந்திருக்கும் முழுமையான சைக்கோ த்ரில்லர் படம்தான் ராட்சசன். முண்டாசுப்பட்டி திரைப்படத்தை எழுதி இயக்கிய ராம்குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முதல் படத்தின் காமெடி ஜானரில் இருந்து ஒரே குதியில் குதித்து அதன் எதிர்க்களமான சைக்கோ அனாலிசிஸ் தியரியில், தனது ரெண்டாவது படத்தில் முத்திரை பதித்திருக்கிறார். வாழ்த்துக்கள் ராம்குமார்.

படத்தின் வேகம் ஒரேயடியாக ஆடியன்சை வெலவெலத்துப் போக வைக்காமல் அதே சமயம் அந்த டெம்போ குறையாமல் அமர வைத்திருப்பதே திரைக்கதையின் சுவாரசியமான உத்தி. கொடூரமாகக் காட்சிகள் அமைக்காமல் இயல்பாகவே கதை நகரும் போதே திக்கென இருக்கிறது.

விஷ்ணு விஷால் கதைக்கு ஏற்ற தேர்வு. தன் அக்காவின் மகள் பிணமாகக் கிடக்கும் போது அதைத் தன் மாமா பார்த்துவிடாமல் தடுப்பது, உயரதிகாரிகள் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் மேலும் மேலும் உயிர்பலிகள் நிகழும் போது தவிப்பது, ஒவ்வொரு சிக்கல்களிலும் அதன் ஆதார முடிச்சை நோக்கி நகர்வது என்று நிறைவாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனுக்கு ஜோடி வேண்டுமே என்கிற அடிப்படையில் சும்மா வந்து போகிறார் அமலா பால். கொலை செய்யப் படுகிற சிறுமிகள் படிக்கும் பள்ளியில் அவருக்கு ஒரு டீச்சர் வேலையும் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.

பொதுவாக சைக்கோ அனாலிசிஸ் படங்களில் குடும்ப செண்டிமெண்ட் ஒன்று மட்டும்தான் தவிர்க்க வேண்டியதும், தவிர்க்க இயலாத ஒன்றாகவும் இருக்கும். தவிர்த்தால் படமானது வெகுஜனத்தை விட்டு வெகுதூரம் வந்து, target audience எனப்படும் குறிப்பிட்ட ரசிகர்களிடம் சிக்கிக் கொள்ளும். குடும்ப செண்டிமெண்டைத் தவிர்க்காவிட்டால் படம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே வட்டமடித்து, லாஜிக் பார்க்கத் தோன்றாமல் பயணிக்கும். இங்கும் அதுதான் நடந்திருக்கிறது. படம் ஒரு குறிப்பிட்ட பள்ளி , குறிப்பிட்ட நபர்கள், ஒரே மாதிரியான சம்பவங்கள் என்று நகர்வது, படம் முடிந்த பின்பே தோன்றுகிறது. ஆனாலும் இந்த விஷயங்கள் எல்லாம் ரசிகர்களை நெருட வைக்காமல் கடகட வெனப் பயணிப்பதில்தான் திரைக்கதையின் சாமார்த்தியம் மிளிர்கிறது.

Saw, I Saw the Devil, Hills have Eyes, Wrong Turn போன்ற படங்களை எல்லாரும் பார்த்துவிட முடியாது. அதற்கென தனியாக target audience உண்டு.

ஒரு இரண்டரை மணிநேரப் படத்தால் உங்களை ஒரே இடத்தில் உட்கார வைத்துவிட முடியுமானால் அதுவே இக்காலத்தில் வெற்றிப்படம் ஆகும். நிறைய பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் ஒன்று என்னும் இந்த காலச் சூழ்நிலையில் ஒரு சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் சவால் இருக்கிறது. அப்படி எடுத்துக் கொண்டால் ராட்சசன் ஹிட் படம்.

சம்பந்தமே இல்லாமல் ஒரு வினோதமான உருவத்தையுடைய பெண்ணொருவர் ஒரு பள்ளியில் வந்து மேஜிக் செய்யும் போதே அவருக்கும் அந்த படத்துக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது என்பது தெரிந்து போகிறது. அதைச் சமன் செய்ய அந்த காமுக ஆசிரியர், மாணவி ஒருத்தியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தும் காட்சியை வைத்திருப்பார் இயக்குனர். காட்சியமைப்பில் அந்தக் காட்சியானது அந்த ஆசிரியரின் வக்கிரத்தை வெளிக்காட்டியிருக்கும்.

கொலையாளியாக வரும் கேரக்டர் இருமுகன் படத்தின் வில்லன் ‘லவ்’ கேரக்டரை நினைவூட்டுகிறது. முக்கியமான அந்த கதாபாத்திரத்தை மட்டும் மெருகேற்றியிருந்தால் படம் வேறு தரத்தில் இருந்திருக்கும். அந்த ஃபிளாஷ் பேக் காட்சிகளில் இருக்கும் அழுத்தத்தை அந்த கதாபாத்திரங்களின் தோற்றம் நிறைவு செய்யவில்லை.

ஜிப்ரானின் இசை வெலவெலக்க வைத்திருக்கிறது. ஒரு பேய்ப்படத்தின் பேக் ரவுண்ட் ஸ்கோர் மாதிரி சிலிர்க்க வைத்திருக்கிறார். சின்ன சின்ன Folie சப்தங்கள் கூட திகில் ஊட்டுகின்றன.

சாதாரணமாகவே சிரிக்க வைக்கும் ராமதாசை அழவைத்திருக்கிறார்கள். அவரது மகளாக நடித்திருக்கும் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவளது கண்கள் மட்டுமே சில இடங்களில் நடித்திருக்கிறது.

காளி வெங்கட், நிழல்கள் ரவி, ராதாரவி என்று படத்தில் நிறைய பேர் செத்துப் போகிறார்கள். கதாபாத்திரப்படி சூசன் ஜார்ஜ் எரிச்சலூட்டுகிறார். வினோதினி வைத்தியநாதன் என்னும் நல்ல நடிகையை வீணடித்திருக்கிறார்கள். ஆனாலும் அவர் தன்னுடைய மூக்கை விடைத்தபடி , மேலுதட்டை தூக்கி , புருவத்தைச் சுருக்கி , துறுதுறுப்பாக வைத்துக் கொள்ளும் மேனரிசத்தை மாற்றினால் நல்லது. ஆண்டவன் கட்டளை வக்கீல் கேரக்டருக்கு அது ஓகே வினோதினி!

கிளைமாக்ஸ் வெகு நீளம். இடைவேளைக்கு அப்புறம் கதையின் முடிச்சை அவிழ்த்துவிட்டால் அடுத்த இருபது நிமிடத்தில் படத்தை முடித்து விடவேண்டும். வில்லனின் வீடு இயல்பை விட்டு மீறி கலர் கலர் விளக்குகளாகவும், ஓய்ந்துபோன பியானோ வாசிப்புமாக ஆங்கிலப் படங்களின் தாக்கம் அதிகம். கிளைமாக்ஸ் மாஜிக் சண்டைக் காட்சி லாஜிக் மீறல். சீட்டுக் கட்டுகளை வைத்து கொலை செய்வது கதையை ஃபேண்டசி வகையறாவுக்கு முன்னெடுக்கிறது.

எது எப்படியோ ராட்சசன் திரையில் மிரட்டியிருக்கிறான். வாழ்த்துக்கள் !

 

 

0 Comments

Write A Comment