Tamil Sanjikai

கல்லூரி ஒன்றிற்கு ஹாஸ்டல் வார்டனாக வரும் காளி அங்கு போக்கிரித்தனங்கள் செய்துகொண்டும், ராகிங் மற்றும் ரவுடித்தனங்கள் செய்து கொண்டும் திரியும் மாணவன் மைக்கேலை தட்டிக்கேட்கிறார். அந்தக் கல்லூரியிலுள்ள கேண்டீன் மற்றும் போக்குவரத்து வசதிகளை டெண்டர் எடுத்து நடத்தி வரும் ஒரு பெரும்புள்ளியின் மகனான மைக்கேல் காளியை வஞ்சம் தீர்க்க நினைக்கிறார்.

இந்நிலையில் தன்னுடைய சிறுவயது காதலி அனுவுக்காக ஆஸ்திரேலியாவில் இருந்து அந்தக் கல்லூரியில் படிப்பிற்காக வரும் அன்வர் தன்னுடைய காதலுக்காக காளியிடம் உதவி கேட்கிறார். அதை ஏற்றுக்கொண்டு அனுவின் வீட்டிற்கு செல்லும் காளி அங்கு அனுவின் அம்மா மங்களத்தின் மீது மையல் கொள்கிறார். மங்களம் விவாகரத்து பெற்றவர். காளி மங்களத்திடம் அன்வரின் மீதான அனுவின் காதலை ஏற்றுக் கொள்ளச் செய்து வெற்றியும் காண்கிறார்.

இந்நிலையில் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் அனு, அன்வரை மைக்கேல் கும்பல் மிரட்டி தாலி கட்ட சொல்லி, அதன் பின்பு அவர்களை கழுதையின் மீது ஏற்றி அதை வீடியோ எடுத்து யூ-டியுபில் இடுவதாகவும் இல்லையென்றால் அனுவைத் தன தங்கையாக ஏற்றுக் கொண்டு அன்வர் செல்லவேண்டும் என்று மிரட்டுகிறது. அப்போது அங்கு வரும் காளி, மைக்கேல் கும்பலைத் துவைத்து தொங்கவிடுவதை வீடியோ எடுத்து யூ-டியுபில் இடுகிறார்கள் மாணவர்கள்.

இந்த வீடியோவை உத்திர பிரதேசத்தில் உள்ள இனம் மற்றும் மதத் தீவிரவாத ரவுடிக்கும்பல் ஒன்று பார்வையிடுகிறது. அந்தக் கும்பலில் முக்கியமானவன் ஜித்து. அவனும் அந்த வீடியோவைப் பார்க்கிறான்.

வீடியோவை லட்சக்கணக்கானோர் இணையதளத்தில் பார்வையிட்டதைக் கண்டு அவமானமடையும் மைக்கேல் தன் அப்பாவிடம் சொல்லி காளியை அடிக்க ஆளனுப்ப, வழக்கம்போல காளி அந்த அடியாட்களையும் வெளுத்து விட்டு, நேராக மைக்கேலின் வீட்டுக்கு வந்து மைக்கேலின் அப்பாவுடைய அள்ளையில் ரெண்டு போட்டுவிட்டுச் செல்கிறார்.

இதனால் கோபமடையும் மைக்கேலின் அப்பா காளியைக் கொல்ல ஆளனுப்ப, மைக்கேல் குறுக்கிட்டு, கொலை செய்ய வேண்டாம் என்றும், ரெண்டு அடி மட்டும் கொடுத்தால் போதும் என்று கோரிக்கை வைக்கவே மைக்கேலின் அப்பா அதற்கு சம்மதிக்கிறார்.

அந்த ரவுடிக்கும்பல் ராத்திரியில் கல்லூரி வளாகத்தில் புகுந்து , மின்சாரத்தை அணைத்துவிட்டு, பயங்கர ஆயதங்களால் அங்கிருப்பவர்களை கொலைவெறியில் தாக்கத் துவங்குகிறார்கள். மைக்கேல் குழம்பி , யார் உங்களை ஆயுதமெடுத்து வரச் சொன்னது? என்று கேட்க , மைக்கேலுக்கும் வெட்டு விழுகிறது.

இடையில் புகுந்து தடுக்கும் காளி மைக்கேலிடம், உங்கள் ஆட்கள் எத்தனை பேர்? என்று கேட்க, மைக்கேல் ஆறு பேர் ! என்று சொல்ல அங்கு ஆயுதங்களோடு வேறு நிறைய பேர் இருக்கிறார்கள். திகைக்கும் காளி, அங்கு வந்தவர்கள் தன்னைக் கொல்ல வரவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார். மேலும் அவர்கள் அன்வரைக் கொலை செய்ய வந்தவர்கள் என்று தெரிந்து பதைபதைக்கிறார். வந்தவர்கள் யார் ? அவர்களை யாரனுப்பியது? அவர்கள் ஏன் அன்வரைக் கொலை செய்ய வேண்டும்? காளிக்கும் , அன்வருக்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதுதான் அதிரடியான மிச்சக்கதை.

Blood flavoured revenge story டைப் கதைதான் என்றாலும் அட்டகாசமான மேக்கிங்கில் செம்மையாக விளையாடியிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜை ஒரு சிறந்த டைரக்டர் வரிசையில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். அதிகப்படியான ஸ்டார் வேல்யு உள்ள நட்சத்திரங்களை அசாத்தியமாகக் கையாள்வது கார்த்திக்குக்கு எளிதாக வசப் பட்டிருக்கிறது.

மொத்தக் கதையையும் ரஜினியின் தோளில் ஏற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதை தெனாவட்டாகச் சுமந்திருக்கிறார் ரஜினி. சூப்பர் ஸ்டார்னா சும்மாவா? மனிதர் பின்னியிருக்கிறார். அவரது வயதுக்கேற்ற கதாபாத்திரமாதலால் உறுத்தலில்லை. சிம்ரனைக் கண்டதும் காதல் வயப்படுவதும், மனைவி த்ரிஷாவையும், மகனையும் பறிகொடுத்துவிட்டு குமுறுவதும், சண்டைக்காட்சிகளில் தெறிக்கவிடுவதும் எதிரிகளிடம் சவால் விட்டு டயலாக் பேசுவதுமாக மனிதர் அசத்துகிறார்.

முதல் பாடல் காட்சி முடிந்ததும், ராகிங் செய்யும் மாணவர்களின் ‘வாருங்கள் அடிமைகளே’ என்னும் போஸ்டரைக் கிழித்து விட்டு மூன்றாமாண்டு மாணவர்களிடம் சொல்வார். புதுசா வர்றவங்ககிட்ட இப்படியெல்லாம் சொல்லி கடைசிவரைக்கும் அடிமையா வச்சிருக்குரத காலேஜில இருந்தே ஸ்டார்ட் பண்றீங்களா? என்கிற ரீதியிலான ஒரு கேள்வியை ரஜினியின் சுய சோகமாகவே இன்றைய அவரது அரசியல் சூழலில் பார்க்க முடிகிறது. கார்த்திக் சுப்பராஜுக்கும் இந்தச் சமூகத்தின் மீது ஒரு கோபமிருக்கிறது. ஆனால் யார் மீதெல்லாம் கோபம் இருக்கிறது என்பதை அவரால் சொல்ல முடியவில்லை அல்லது செய்ய முடியவில்லை என்பதை உத்திரப் பிரதேசத்து காட்சிகளில் புரிந்து கொள்ளலாம்.

விஜய் சேதுபதி அண்ட் கோ காதலர் தினத்தன்று கலாச்சாரக் காவலர்களாய் மாறி காதல் ஜோடிகளைத் தடி கொண்டு தாக்குவது, அவர்களுக்கு மந்திரம் ஓதி கல்யாணம் செய்து வைப்பது, ஆண்டி- இந்தியன் என்று சொல்வது, கடைசியில் அவரைக் கொல்ல வருபவர்களிடம் பீஃப் இல்லடா! என்னோட மாடுகள்தான்! என்று சொல்வது, ஒரு காட்சியில் நவாசுதீன் வீட்டு முன்பு நடக்கும் போராட்டக் காட்சியில், அந்தப் போராட்டத்தைத் தலைமை தாங்கும் நபர் அசப்பில் மே பதினேழு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியைப் போலவே இருப்பதும், ஒரு காட்சியில் அந்த நபரை அடித்துத் துவைத்து நிலக்கரி தொழிற்சாலையில் வேகவைப்பது, இறுதியில் ரஜினி விஜய் சேதுபதிக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு, அதற்கு ராமாயணத்தில் இருந்து வாலியின் கதையை உதாரணமாகச் சொல்வது என்று ஏகப்பட்ட தத்துபித்துவங்கள். Why கார்த்திக் Why?

விஜய் சேதுபதி குறைவான காட்சிகளில் வந்தாலும் செம்ம ஸ்கோரிங். கெத்தாகவே வந்து போகிறார். விஜய் சேதுபதி! ரஜினியிடம் மாட்டிக் கொண்டு சிகரெட் கேட்குமிடத்தில் நக்கல். அதே சிகரெட்டை ரஜினி பற்ற வைத்து, உடம்புக்கு நல்லதில்ல! என்று சொல்லி விஜய் சேதுபதிக்கு கொடுப்பார். ஏற்கனவே ஒருதலைமுறை முழுவதும் புகைப்பழக்கத்திற்கு ஆளானதற்கு ரஜினிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு அவர்மீது உண்டு. விஜய் சேதுபதிக்கு பேட்ட இன்னுமொரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை. அளவாய், அழகாய், அருமையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். நல்லவேளை கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தில் விஜய் செதுபதியைக் கொல்லவில்லை. இதுதான்! அல்லது இவ்வளவுதான் விஜய் சேதுபதி! என்று எந்த டெம்ப்ளேட்டுகளுக்குள்ளும் சிக்காமல் இருக்கிறீர்கள். வாழ்த்துகள்!

நவாசுதின் சித்திக்கி அற்புதமான நடிகர். வில்லன் கதாபாத்திரத்தில் கச்சிதம். உடல்மொழியும், நடிப்பும் அவரைத் தமிழ்த் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் எனத் தோன்றுகிறது.

பாபி சிம்ஹா அழகாய் இருக்கிறார். ஆனால் அவரது முதல் குறும்படத்தில் இருந்தே ஒரே விதமான முகபாவனைகள் சலிப்பூட்டுகின்றன. அவர் நடித்த ஒரே படம் ஜிகிர்தண்டாதான்.

சசிகுமார் கொஞ்சம் வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் ஒரு தசாப்தத்தையே தக்கவைத்துக் கொண்ட சிம்ரனும் , வைத்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவும் வரும் இடங்கள் கொஞ்சமே என்றாலும் சிம்ரனை ரசிக்க முடிகிறது. த்ரிஷா பாவம்!

குரு சோமசுந்தரம், உதிரிப் பூக்கள் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மேகா ஆகாஷ், சனந்த், மாளவிகா மோகனன், முனிஸ்காந்த், விவேக் பிரசன்னா, மலையாள நடிகர் மணிகண்டன் என்று எல்லாருமே சிறப்பு.

படத்தின் பக்க பலம் பின்னணி இசைதான். சும்மா துள்ளிக் குதிக்கிறது. பாடல்கள் ஏற்கனவே கேட்ட மெட்டுகள்தான் என்றாலும் ஏழு சுவரங்களில் இருந்துதானே அத்தனைப் பாடல்களும் உருவாகின்றன. பாடல்களும் அதிர வைக்கின்றன.

திருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் குளிர்ச்சியூட்டுகின்றன. லைட்டிங்கில் ஒவ்வொரு ஃப்ரேமும் ஓவியம். ரிச்சான லைட்டிங்கில் படம் முழுக்கவே அத்தனை ஃபில்லிங். சண்டைக்காட்சிகளில் கேமரா தடதடக்கிறது. பீட்டர் ஹெயினும் சண்டைக் காட்சிகளில் உழைத்திருக்கிறார்.

ஃபிளாஷ் பேக் காட்சிகளில் வரும் செட் பிராப்பர்டிகளில் ஒருவித குழப்பமான உருவாக்கம் தெரிகிறது. திருட்டுத் தனமாக மணல் அள்ள புத்தம் புது ஜேசிபி வண்டிகள் நிற்கிறது. ரஜினி பழைய மாடல் பென்ஸ் வைத்திருக்கிறார். ரஜினி தப்பிப் போகும் ரயில் பெட்டி அரதப் பழசாகத் தெரிகிறது. நீதிமன்றத்தின் வெளியே லேட்டஸ்ட் மஹிந்திரா வாகனம் நிற்கிறது. இருபது ஆண்டு இடைவெளியைக் காட்ட கொஞ்சமாவது மெனக்கெட்டிருக்க வேண்டாமா?

சண்டைக்காட்சிகள், கொஞ்சம் லாஜிக்கல் கோட்டை விடுதல்களை எல்லாம் விட்டுவிட்டுத்தான் படம் பார்க்க முடியும். ஏனென்றால் இது ரஜினிப் படம். சமகாலத்தில் ரஜினி மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்லது வெறுப்புகளையெல்லாம் தூக்கி வைத்துவிட்டு பார்த்தால் பேட்ட மாஸ் என்டர்டெயின்மென்ட் படம்.

ரஜினியின் பேட்ட! ரசிகர்களுக்கு வேட்ட!

0 Comments

Write A Comment