Tamil Sanjikai

நீங்க, நீங்களாவே இருந்து , நான் நாயாவே இருக்கணும்’னு நீங்க நினைக்கிற வரைக்கும் இங்க எதுவும் மாறாது சார்! என்று பரியன் ஜோவின் அப்பாவிடம் சொல்லிவிட்டு விடை கொடுப்பான். அப்போது கேமரா வைட் ஆங்கிளில் இருந்து ஜூம் இன் போய், அவர்கள் குடித்து விட்டு வைத்த இரண்டு காலி டீ கிளாஸ்களில் வந்து நிற்கும். அத்தோடு படம் முடிகிறது.

ஒரே கடையில் வாங்கப்பட்ட இரண்டு தேனீர்க் குவளைகள், அதைக் குடிக்கும் இருவேறு மனோபாவம் கொண்ட மனிதர்கள், அந்த இரண்டு குவளைகளுக்கு இடையில் இருக்கும் தூரம், அந்த இடைவெளியில் கிடக்கும் பூ. குவளையை விட்டுச் செல்லும், குவளைக்குச் சம்பந்தமில்லாத தற்காலிக பயனாளிகள். சுதந்திரத்துக்குப் பின்னும் மாறாத இரட்டை குவளைகள். இந்த ஒற்றைக் கவிதைக் காட்சிக்கே இயக்குனர்.மாரி செல்வராஜுக்கு ஒரு பூந்தோட்டத்தைப் பரிசாகத் தரலாம். வாழ்த்துக்கள் சகோதரனே !

தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் மேய்ந்த வேற்றுசாதிக்காரனின் பசுவை, ஒரு மேல்சாதி மனோபாவம் ( மனநோய் ) கொண்ட ஒருவன், தன்னோடு கூட ஐந்தாறு பேரைச் சேர்த்துக் கொண்டு, அந்தப் பசுவை உயிரோடு கட்டி வைத்து, அதன் தோலை உரித்து, கதறக்கதறக் கொலை செய்த மகானுபாவர்கள் வாழ்ந்த உன்னத தேசம் தமிழ்நாடு.

அறுவாடா ! வீரம்டா ! பாசம்டா ! என்று வெற்றுக் கூச்சல் தமிழ் சினிமாக்களுடைய அண்டர்வேயரின் நாடாவைக் கழற்றியிருக்கிறான் பரியேறும் பெருமாள்.

ஒடுக்கப்பட்டவனின் மீதுள்ள வன்மத்தைத் கட்டவிழ்க்க , அவன் வளர்க்கும் நாயைத் தண்டவாளத்தில் கட்டிவைத்துக் கொலை செய்யும் அறிவிலிகளுக்கும், அதே நாயைத் ரத்தமும்,சதையுமாகத் தூக்கிக் கொண்டு போய், சகல மரியாதைகளோடு அடக்கம் செய்யும் மனிதர்களுக்கும் இடையிலான வாழ்வியலை படமாக்கியிருக்கிறார்கள்.

உன் ஒருவனது கல்வியைத் தடை செய்து விட்டால், உன்னுடைய அடுத்த தலைமுறையை முடக்கி விடலாம் என்பதுதான் இங்கே எழுதப்படாத சித்தாந்தம். ஒடுக்கப்பட்ட இனத்தின் பிள்ளையான பரியன், அநேகம் தடைகளுக்கு மத்தியில் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரியில் வக்கீலுக்குப் படிக்கச் செல்கிறான். அங்கே அவன் மீது அன்பு செலுத்தும் ஜோதிலட்சுமி என்னும் பெண்ணின்பால் அவனுக்கு ஏற்படும் துன்பங்களும், அவனது சொந்த சாதியின்பால் அவன் சந்திக்கும் இன்னல்களும்தான் படத்தின் களம்.

திருநெல்வேலியின் வறண்டு போன நிலத்தை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் கலாச்சாரத்தை அதன் உண்மை முகம் வாடாமல் ஆவணமாக்கியதற்கு இயக்குனருக்கு சபாஷ்!

நாயின் மீது ரயில் மோதுவதிலிருந்து, அடுத்தடுத்ததாக போகிற போக்கில் ஆணவக் கொலைகள் செய்யும் முதியவர், தன்னுடைய மகளின் அழைப்பை ஏற்று, தங்கள் வீட்டுவிழாவுக்கு வந்த ஒரு சகமனிதனை சகட்டு மேனிக்கு அடித்துத் துவைத்து, அவனது முகத்தில் சிறுநீர் கழித்து, அவனைக் கொல்லத் துடிப்பது, தன் சக மாணவனின் தகப்பனை அரைநிர்வாணமாக ஓடவிட்டு பெருங்குரலெடுத்துச் சிரிக்கும் இந்த சாதித்திமிர் தமிழர்கள் என்று ஒவ்வொரு காட்சியையும் பதைபதைப்போடு பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒருவன் இத்தனை கஷ்டப்பட்டு, தன்னுடைய கல்வியைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலைக்கு அவனது சுயசாதியே காரண கர்த்தாவாய் இருக்கிறது என்பதை எப்பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் கூட அதுதானே உண்மை நிலை. சட்டக் கல்லூரியில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் , ராகிங் உட்பட அப்படியே தோலுரித்திருக்கிறார்கள்.

தலையைத் துண்டாக்கி, ரவுத்திரத்துக்கு வகுப்பெடுக்கும் ஏனைய சாதித்திமிர் படங்களுக்கு மத்தியில் ஒருவனை, அவனது அடக்குமுறையின் மீதான கோபத்துக்கு வடிகாலாய், அவன் தனக்கான ஆயுதங்களைக் கையிலெடுக்காமல் கல்வியையே இறுதி செய்து கொள்கிறான் என்பதுதான் இயக்குனர் கடந்து வந்த இயலாமையின் இறுமாப்பு.

உருவத்தில் பார்க்க ஒன்று போலவே இருந்தாலும் கூட நெற்றித் திலகம் , மீசை, உடை, தலைப்பாகை, நூல், ஆயுதங்கள் என்று சின்னச் சின்ன அடையாளங்களின் மூலமே இன்னும் சாதி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே நம் தமிழினத்தின் மீது மிச்சமிருக்கிற அவமானத்தின் அடையாளம்.

மண்வெட்டி பிடித்த கையால், வாள் பிடித்த கை என்னுடையது! என்று பரியன் முறுக்கும்போது மறைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வரலாறு கண்முன் வந்து நிற்கிறது.
இட ஒதுக்கீடு இருந்தால் மட்டும் படித்து விட முடியுமா ? என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் ஒற்றைக் கேள்வி.

ஏல! நீயும் , எம்மகளும் ஒண்ணா படிச்சா , நீயும் நானும் ஒண்ணாலே ? உன்னையும் கொன்னு, எம்மகளையும் வெட்டிப் போட்டுருவானுவல! என்று கண்ணீர் சிந்தும் தகப்பனையும் பதிவு செய்யத் தவறவில்லை. இதன் மூலம் சாதி என்பது ஒரு கும்பல் மனப்பான்மை என்று சொல்லி விட்டு, கடைசிக் காட்சியில் தன்னைக் கொல்ல வரும் வில்லனின் காரின் கண்ணாடியில் கல்லெறிந்து உடைத்து, காரின் பானட்டின் மீது ஏறி, முன்கண்ணாடி ஓட்டையின் வழியாக அந்தக் கும்பல் மனப்பான்மையின் முகத்தில் காறித் துப்பியிருக்கிறான் பரியன்.

படம் அழகாகவே பயணிக்கிறது. ஜோதிலக்ஷ்மி உண்மையான தமிழ்ப்பெண்ணின் மறுஉருவம். ஒரு குறிப்பிட ஆதிக்கசாதியைச் சார்ந்த பெண்ணாக அவளைப் பார்க்க இயலவில்லை. அத்தனை ஆழமாக நேசிக்கும் ஒரு பெண்ணின் குடும்பம் அத்தனை அக்கிரமங்களைச் செய்கிறது என்பதுதான் சாதியின் வடிவம். ஜோ என்பவள் எல்லா மனிதனுக்குமான ஆதார சுருதி. ஜோவாக வரும் ஆனந்தி மனதை விட்டு நீங்காத அன்பின் வடிவம்.

ஜோவின் தகப்பனிடம் பரியன், உங்க பொண்ணு குடுத்து வச்சவ சார் ! அவளால எங்கே வேணும்னாலும் நினைச்சத பேச முடியிது, ஆனா அது என்னன்னு நான் புரிஞ்சிக்கிரதுக்குள்ள ரத்தம் , சதைன்னு என்னைய எங்கேயோ கொண்டு போயிட்டீங்களே சார் ! என்று நா தழுதழுக்குமிடத்தில் உருக்கம்.

ஒவ்வொரு Pre-Planned Execution எனப்படும் ரகசியக் கொலைகளுக்குப் பின்னும், அந்தக் கொலையின் பொத்தாம்பொது எஃப்.ஐ.ஆரின் அடிப்படையிலான தினசரி தலைப்புச் செய்திகளைக் காட்டும் பொது பகீர் என்றிருக்கிறது.

நான் யார் ? என்னும் பாடல் மற்றும் அதன் காட்சி வடிவமைப்பானது கீழ்வெண்மணி, மாஞ்சோலை படுகொலை, இளவரசன் கொலை , ரோஹித் வெமுலா கொலை என்று நிறைய வலிமிகுந்த அடையாளங்களைச் சுமப்பது காலம் கடந்த வேதனை.

சுய சாதிப்பற்று என்பது தங்கள் முதுகில் வேகமாக விழுந்த ஒரு அறையின் பிரதிபலிப்பு, அது எல்லா சாதிக்காரர்களும் அனுபவித்ததுதான் என்றாலும் அடிவாங்கியவன் யாரைத் திருப்பி அடிக்கிறான் என்பதில்தான் இங்குள்ள அரசியல் பயணிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமல்லாது எல்லா சாதிய வடிவங்களும் தங்களுக்குக் கீழான இன மக்களை வதைப்பதுதான் காலம்காலமாக இங்கே நிகழும் அவலம். ஒவ்வொரு சாதிக்காரன் கதறும் போதும் அவனது மேல்சாதிக்காரனின் மீதான கோபம் மற்றும் வலியை தன்னுடைய கீழ்சாதிக்காரனின் மீது தணித்து ஆறுதல் அடைந்து கொள்கிறது இந்தச் சாதீயச் சமூகம்.

டாஸ்மாக்கில் குடிக்கும் போது, ஆதிக்க சாதி மாணவனான ஆனந்த் ( யோகி பாபு ) பரியன் கேட்டுப் போய்விடக் கூடாதே! என்ற நல்ல எண்ணத்தில், பெப்சியில் கொஞ்சூண்டு சரக்கு ஊற்றி, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, நகர்ந்து போய் மீண்டும் பெப்சியில் கலக்கும் இடைவெளியில் பரியனின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஐயர் பரியனுக்கு மதுவை ராவாகக் குடிக்கக் கொடுக்கும் அந்தக் காட்சி, வரலாறு தெரியாதவர்களுக்கு தேவையற்ற பிராமண சமுதாயத்தின் மீதான தாக்குதல் என்றே தோன்றும். ஆனால் அதில்தான் உண்மையான அரசியல் தந்திரம் ஒளிந்திருப்பதாக வரலாறு அறிந்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதிலும் கூட சாமானியர்கள் சாராயத்துக்காக தங்கள் உடைமைகளை வழங்கியது, ஆதிக்க சாதி மாணவன் ஆனந்த் பரியனை நேசிப்பது, மதுபானக் கடைகளில் மட்டுமே நிலவும் சமத்துவம் என்று இந்த சமூகம் பல்வேறு தளங்களில் இயங்குவதை எள்ளலும், வலியுமாக, சரிசமமாக பேலன்ஸ் செய்வதில்தான் இயக்குநரின் திறமை வெளிப்பட்டிருக்கிறது.

கல்லூரியில் தகராறு செய்த பரியனுக்கு ஆதரவாக , அவன் அனுபவிக்கும் பிரச்சினைகளைத் தானும் அனுபவித்ததாக அவனது பிரின்சிபால் வாயிலாகக் கூறி , காலம் காலமாய் தொடரும் அந்தப் பிரச்சினைகளை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதிலும் அந்தப் பிரின்சிபால் , உனக்கு என்ன தோணுதோ அதைச் செய் ! என்று பரியனிடம் கூறிவிட்டு, அவனது டீச்சரிடம், ரூமுக்குள்ள போயி தூக்குல தொங்குறத விட , அவனுக்கு முடிஞ்சத செய்யட்டும்! என்று சொல்வது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் கூட பரியனின் பார்வையில் இருந்து பார்க்கும் போது அந்த வாக்கியங்கள் அவனுக்கான வருடலாகவே இருக்கிறது.

படிக்காதவர்கள்தான் சாதி பார்ப்பார்கள் என்று சொல்லிவிட்டு, ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறை மாணவர்களை இந்த சாதிய மனப்பான்மை தின்று ஏப்பம் விடுவதை நம் எதிர்கால சந்ததிகளின் அச்சமாகவே உணர முடிகிறது.

கல்விதான் உண்மையான ஆயுதம் ! கத்தி அல்ல ! என்பதை இயக்குனர் உரக்கச் சொல்லியிருக்கிறார். பரியேறும் பெருமாளாக வரும் கதிர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு சாயலில் நடிகர்.விஷாலை ஞாபகப்படுத்தினாலும் அழகாக இருக்கிறார். வாழ்த்துக்கள் கதிர்.

கருப்பியாக வரும் நாய் வரும் காட்சிகளிலெல்லாம் ஒரு வித அசூயை வந்து தொற்றிக் கொள்கிறது. முதல் காட்சியில் தன்னை நோக்கி வரும் ரயிலை வெறுமையோடு பார்க்கும் அந்த நாயை பாதாம் முடிந்த பின்னரும் மறக்க முடியவில்லை. தண்டவாளத்தில் கிடக்கும் பரியனை நாயின் ஆத்மா வந்து காதில் நக்கி உசுப்பிவிடும் காட்சியில் நம்முடைய மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டு மறைந்து போகிறது. அது வரும்போது பின்னணியில் இசைக்கும் ஒலி காதைக் கடந்து மூளையைக் குடைவதைத் தடுக்க முடியவில்லை. சந்தோஷ் நாராயணன் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். பறையிசைக் காட்சியில் ட்ரம்மையும், மேற்கத்திய இசைக்கருவிகளையும் அதிரவிட்டு, கலந்து அடிக்கும் அந்த யுத்தி நன்றாக இருக்கிறது. சில இடங்களில் பின்னணி இசை மெட்ராஸ் படத்தை நினைவூட்டுகிறது என்றாலும் கூட சுவையாகத்தானிருக்கிறது.

கொலைகாரராக வரும் கராத்தே வெங்கடேஷ் அதிர்ச்சியடைய வைக்கிறார். பரியனின் அப்பாவாக நடித்திருக்கும் கரகாட்டக் கலைஞர் தங்கசாமிக்கு கொஞ்சம் கேமரா அச்சமிருந்தாலும் கூட அந்த அரைநிர்வாணக் காட்சியில் பதற வைத்திருக்கிறார்.

பண்ணப் பழகடா ! பச்சைப் படுகொலை ! என்று பாரதிதாசன் பொதுவாக யாருக்கு சொன்னாரோ அவர்களே தங்கள் சக மனிதர்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சாதீயத் தமிழர்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொண்டிருக்கும் துரோகம்.

பரியனுக்கு பொய்த் தந்தையாக கல்லூரியில் நடிக்க வரும் சண்முகராஜன் அந்த ஒரே காட்சியில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். யோகிபாபு கிடைத்த இடத்தில் சிக்சர் அடிக்கிறார். அதிலும் அவர் சொல்லும் ‘தமிழ்’னா மட்டும் ஏண்டா தலையில அடிச்சிக்கிறீங்க? என்று சொல்லும் டயலாக்கில், இயக்குனரின் அரசியல் நையாண்டி ஒளிந்து கொண்டிருக்கிறது.

படம் கூறும் அரசியல் , படத்தில் வரும் குறியீடுகள் என்ற வழக்கமான கிளிஷேக்களைத் தூக்கி தூரமாக வைத்து விட்டால், இந்தப்படம், கரி ( அடுப்புக்கரி ) பிடித்த, சாதீய அமிலம் தோய்ந்த இந்த அழுக்குச் சமூகத்தில் ஒரு மதக்கரியாக ( மதம் கொண்ட யானை ) உருவெடுத்திருக்கும் ஒரு ஆவணம். தனது சொந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லி , தன்னுடைய கண்ணீரை செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

பரியனைப் போலவே பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர் ஒதுக்கீட்டில் அநீதியும், காட்சிகள் குறைக்கப் பட்டும் வதைக்கப் படுகிறான். நன்பாலைக் கலந்தீமையால் திரிக்க முயற்சிப்பதும் ஒருவகையான சாதீய வன்முறைதான். தியேட்டர் கொடுக்காவிட்டால் படம் நாசமாய்ப் போய்விடும் என்று தமிழ்சினிமாவின் சாதிமேதாவிகள் நினைத்தால் அதுதான் உங்கள் துருப்பிடித்த எண்ணம். பால் கெட்டுப் போகலாம் ! பரியேறும் பெருமாள் வெறும் பச்சைத் தண்ணீர் ! கலக்கக் கலக்கத் தெளிந்து கொண்டேயிருப்பான்.

பரியேறும் பெருமாள் ஒரு பச்சை மாமிசம்! ஒரு உயிரை, உயிரோடு உரிக்கத் துவங்குபவனுக்குத் தெரியும் தன்னுடைய செயல் அந்த உயிரை வதைக்கும் என்பது. ஆனாலும் கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவகாருண்யம் குறித்து எப்படிப் பேசுவது? கசாப்புக்கடைகள் எப்போதும் மூடப்படுவதில்லை என்பது தெரிந்த பரி ( குதிரை ) பெருமாளாய் உருவெடுத்து கசாப்புக்கடைக்காரர்களின் மனசாட்சியிடம் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறான். வாழ்த்துகள் பா.ரஞ்சித்! மாரி.செல்வராஜிக்கு சுவர் கொடுத்து சித்திரம் படைத்திருக்கிறீர்கள்!

பத்திரிக்கைகள் கொண்டாடுகின்றன... மகிழ்ச்சி! நீங்க நீங்களாவே இருந்துகிட்டு, நாங்க நாயாவே இருக்கும் வரைக்கும் இங்கு எந்த மாற்றமும் வராது சார் என்று பரியன் ஜோவின் அப்பாவிடம் சொல்லாமல், நீங்க என்னை நாயா நினைக்குற வரைக்கும், நானும் உங்கள நாயாத்தான் நினைப்பேன்! என்று மட்டும் சொல்லியிருந்தால் பரியன் பரணுக்குப் போயிருப்பான். அவன் தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கண்டு கொதித்து, வீறுகொள்ளாமல் தன்னை ஒரு நாயாகத் தரமிறக்கி உங்கள் முன்வைத்த கோரிக்கையினால்தான் பரியனை ஊடகங்கள் கொண்டாடுகிறது என்பதுதான் உண்மையான ஊடக நிலைப்பாடு.. இல்லையென்றால் காலா ரஞ்சித்துக்கு நிகழ்ந்தது மாரி செல்வராஜுக்கு நிகழ்ந்திருக்கும்...

 

 

 

0 Comments

Write A Comment