Tamil Sanjikai

மும்பையில் ஒரு வழக்கில் சிக்கி , நான்கு வருடங்கள் தண்டனை பெற்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மூன்று சிறுவர்களை சந்திக்க ராஜா எனும் இளைஞன் வருகிறான். கோபமான மனநிலையிலிருக்கும் அந்தச் சிறுவர்களிடம் தன்னுடைய கடந்த காலத்தில் தான் சந்தித்த கஷ்டங்களையும் அதற்குப் பின்னான மேன்மையையும் ராஜா எடுத்துரைக்கிறான். ராஜாவின் வாய்ஸ் ஓவரில் விரிகிறது படம்.

இயக்குனர் கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பக்கிரி. தனக்குத் தகப்பனே கிடையாது என்று தன்னுடைய தாயால் சொல்லி வளர்க்கப்படுகிற சிறுவன் ராஜா தானொரு ஏழை எனத் தெரிந்து கவலையடைகிறான். தான் மேலும் ஏழையாக நீடித்திருப்பது குறித்த எண்ணம் அவனைப் பல்வேறு ஏமாற்று வேலைகளைச் செய்யத் தூண்டுகிறது. தெருவில் வித்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறான். அவன் வளர்ந்ததும் தன்னுடைய தகப்பன் ஒரு மாயாஜாலக் காரன் என்றும் அவன் பாரீஸ் நாட்டுக்காரன் என்பதும் அவனது அம்மாவுக்கு அவன் எழுதிய கடிதம் மூலம் அறிந்து கொள்கிறான். மேலும் சிறுவயதிலிருந்தே அவனுக்கு பாரீஸ் நாட்டு பொருட்கள் மீது தீராத ஆசையாக இருக்கிறது.

தன்னுடைய தாயை அழைத்துக் கொண்டு பாரீஸ் செல்லவேண்டும் என்பதே அவனுடைய ஆசையாய் இருக்கும் பட்சத்தில் அவனது தாய் ஒருநாள் திடீரென மரித்துப் போகிறாள். அவளது உடலை எரித்து அந்த அஸ்தியை எடுத்துக் கொண்டு நூறு யூரோ போலி நோட்டுடன் பாரீஸ் செல்கிறான். அங்கு அவன் மிகவும் விரும்பிய ஃபர்னிச்சர் கடையில் போய் அங்கு மேரி என்றொரு இளம்பெண்ணைச் சந்திக்கிறான். சந்தித்த மாத்திரத்தில் அவள் மீது இனம்புரியாத காதல் வந்து, அவளிடம் தன் கையிலிருக்கும் தன் தகப்பனைக் குறித்த செய்தித்தாள் பிரசுரம் ஒன்றை கொடுத்துவிட்டு மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிப் பிரிகிறான்.

தங்குவதற்கு இடமில்லாமல் அந்த ஃபர்னிச்சர் கடையிலேயே ஒரு பீரோவில் திருட்டுத் தனமாக இரவில் தங்குகிறான் ராஜா. அந்த பீரோவை கொஞ்சம் பேர் வந்து தூக்கிச் சென்று போய் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு அந்த லாரி இங்கிலாந்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

திடீரென விழித்துக் கொள்ளும் ராஜா தன்னோடு கொஞ்சம் சோமாலியர்கள் பயணிப்பதை அறிந்து கொண்டு அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். அப்போது வழியில் குடியேற்ற அதிகாரிகள் சோதனையில் மாட்டிக் கொள்கிறான். அப்போது அங்குள்ள தூதரக அதிகாரி , ராஜாவையும் அவனது கூடே வந்த மற்றவர்களையும் ஸ்பெயின் நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

இந்நிலையில் பாரீசிலிருக்கும் மேரி ராஜாவைத் தேடி ஈஃபில் டவரில் காத்திருக்கிறாள்.

ஸ்பெயினிலும் அவர்களை ஏற்ற மறுத்து அகதிகளைப் போலவே ஏர்போர்ட்டில் தங்க வைக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்து நடிகை ஒருத்தியின் தனி விமானத்தில் ஒளிந்து கொண்டு இத்தாலிக்கு வருகிறான். வரும் வழியில் தான் சந்தித்த ஒரு மனிதரைப் பற்றிய கதையை தன்னுடைய சட்டையில் எழுதி வைக்கிறான். இந்த விஷயம் அந்த நடிகைக்குத் தெரிய வரவே அந்த சட்டையை அந்த நடிகையின் விவாகரத்தான கணவனிடம் ஏமாற்றி விற்கிறார்கள். விஷயம் தெரிந்து ராஜாவைக் கொல்ல வருகிற ஆளிடமிருந்து தப்பித்து ஒரு பாராசூட்டில் ஏறுகிறான்.

அந்த பாராசூட் பாரீசை நோக்கி போகும் வழியில் எரிபொருள் தீர்ந்து கடலில் போய்க்கொண்டிருக்கும் கப்பலில் போய் இறங்குகிறது. அந்தக் கப்பலில் உள்ளவர்கள் தனுஷிடமிருந்து அந்தப் பணத்தை பிடுங்கிவிட்டு லிபியாவில் இறக்கி விடுகிறார்கள். ராஜா என்ன ஆனான் ? அந்தப் பணம் அவனுக்குக் கிடைத்ததா ? ராஜாவில் காதலி என்னவானாள் ? என்பதே பக்கிரி படத்தின் மிச்சக்கதை.

ராஜாவாக தனுஷ் நடித்திருக்கிறார். தனுஷ் ஒரு திறமையான நடிகர் என்பது எல்லாரும் அறிந்ததே என்பதால் முதலில் சிறுவயது தனுஷாக நடித்திருக்கும் சிறுவனை பாராட்டியே ஆகவேண்டும். சிறப்பான நடிப்பு. தன் தாயிடம் தானொரு ஏழையா என்று கேட்டு கொதிப்பது, இவர்தான் என் அப்பாவா ? என்று போகிற வருகிறவர்களைக் காட்டிக் கேட்பது, தான் ஜெயிலில் தள்ளப்பட்டதும் அந்த போலீஸ் காரனைத் திட்டி கலாட்டா செய்வதும், தன்னோடு சிறையிலிருக்கும் மனிதருக்கு இரண்டு கண்களும் தெரியாது என்றறிந்து கலங்குவதுமாக பையன் சிக்சர் அடித்திருக்கிறான்.

எல்லா கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்பதால் அந்த மொத்தப் பெருமையும் இயக்குனருக்கே சென்று சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமுமே அத்தனை அழகு. ஐந்தாறு நாடுகளைப் பார்த்த திருப்தி.

படமும்கூட ஒருவித பரிதாபத் தன்மையோடும் நற்செயல்களோடும், ஒரு ஃபேண்டசி தன்மையோடும் நகர்வதால் லாஜீக் குறித்த கேள்விகள் தேவையற்ற ஒன்று என்று நினைக்கத் தோன்றுகிறது. அதையும்கூட இயக்குனர் சாமார்த்தியமாக கிளைமாக்ஸில் சமன்படுத்தியிருக்கிறார்.

தனுஷ் கலக்கல் கதாபாத்திரம். நிறைவாகச் செய்திருக்கிறார். அந்த ஃபர்னிச்சர் கடை சீன் , தூதரக அதிகாரிகளிடம் வழக்கு போடுவதும், மெரிக்கு முத்தம் கொடுப்பதும், நடிகையோடு நிகழும் சம்பவங்கள் என்று காட்சிக்குக் காட்சி மெல்லிய நகைச்சுவையோடும் தனுஷின் சிக்ஸர்கள் படம் நெடுகிலும் இருக்கின்றன.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என்று எல்லா இடங்களையும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். கதையும் கூட எந்த வன்முறையுமின்றி இயல்பாக நகர்கிறது. ஒருசில காட்சிகள் மற்றும் வசனங்கள் இல்லாதிருந்திருந்தால் குழந்தைகள் உட்பட எல்லாருக்குமான படமாக இருந்திருப்பான் பக்கிரி.

பக்கிரி அழகான முயற்சி !

0 Comments

Write A Comment