இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் மிகவும் நேசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கார நந்தகோபாலன் குமாரன் எனும் இளைஞன் அடித்துப்பிடித்து அரசியலில் வரும் சூழலில் அவன் சந்திக்கும் துன்பங்கள்தான் NGK திரைப்படத்தின் கதை.
இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் NGK. முதலில் புதுப்பேட்டை என்றொரு சிறந்த படத்தை இயக்கிய செல்வராகவன்தான் இந்தப்படத்தை இயக்கினார் என்பதை நம்பமுடியவில்லை.
சமகால அரசியலைப் பேசினால் படம் ஓடிவிடும் என்ற வியாபார யுக்தியின் அடிப்படையில், ஆர்வக்கோளாறில் ரசிகர்களின் பர்சிலிருக்கும் பணத்தைப் பிடுங்கி வைத்துக் கொள்ளலாம் என்று எண்ணிதான் இந்த படத்தைத் தயாரித்திருப்பது போலத் தெரிகிறது.
எம்.டெக் முடித்துவிட்டு ஆர்கானிக் விவசாயம் செய்யும் சூர்யாவின் மனைவி கீதாவாக சாய் பல்லவி. முகத்தில் சிவப்புப் பருக்களும் சிரித்த முகத்தோடும் காதல் செய்யும் மனைவியைக் கவனிக்காமல் தெரு, ஊர், பஞ்சாயத்து ஆபீஸ், கலெக்டர் அலுவலகம் என்று சுற்றி கொண்டிருக்கும் சூர்யாவிடம் லோக்கல் வியாபாரிகள் வந்து தகராறு செய்து விவசாய நிலத்தை அழிக்கிறார்கள்.
ஒரு கவுன்சிலரின் சொல்லைக் கேட்டு நடுங்கும் கலெக்டரைக் கண்டு வியந்து அரசியலுக்கு வந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ வீட்டு கக்கூஸ் முதற்கொண்டு கழுவி எம்.எல்.ஏவுக்கு விதவிதமாக சமைத்து போட்டு அந்த எம்.எல்.ஏ வின் தவிர்க்க முடியாத வலது கையாக மாறி எதிர்க்கட்சியின் ஐ.டி மற்றும் மீடியா விங்கின் அலுவலகம் வரை வந்து நிற்கிறார்.
அங்கு ஒட்டு மொத்த இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகளின் தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அதிமேதாவியான வானதி என்னும் இளம்பெண்ணிடம், ஒரு ப்ராஜெக்ட் பற்றி மட்டும் பேசும் சூர்யா அந்தப் பெண்ணின் கண்களுக்கு ஒரு மிகப்பெரிய அறிவாளியாகக் காட்சியளித்து, எம்.எல்.ஏ விடமிருந்து விலகி தங்களுடைய பி.ஆர் பிரிவில் வேலைக்குச் சேர்ந்து கொள்ளுமாறு கோரப்படுகிறார். அதை மறுத்து மீண்டும் எம்.எல்.ஏவோடு விசுவாசியாகத் திரும்பச் செல்கிறார் சூர்யா.
அடுத்த காட்சியில் வானதியிடமிருந்து அழைப்பு வரவே அங்கே கையில் ஒரு சூட்கேசோடு செல்லும் சூர்யாவிடம் அந்தப் பெண் ஆளுங்கட்சி முதல்வர் குறித்த ரகசியத்தை விசாரிக்குமாறு வேண்டவே உடன்படுகிறார் சூர்யா. அடுத்த காட்சியில் வீட்டிற்கு வரும் சூர்யாவின் மீதிருந்து பெண்கள் பூசும் சென்ட் வாசனை வரவே சாய் பல்லவி சந்தேகப்படுகிறார். அதாவது அதற்கு முந்தின நாள் வானதியோடு படுக்கையை பகிர்ந்து கொண்ட சூர்யா அதே டீ-சர்ட்டோடு கிளம்பி ஸ்ரீ வில்லிபுத்தூர் வரைக்கும் வந்திருக்கிறார். செல்வராகவன் டச் !
நல்லவேளை அதற்கான காரணங்களையும், காட்சிகளையும் காண்பிக்கவில்லை. ஆளுங்கட்சி முதல்வரே வந்து ஆலோசனை கேட்கும் அளவிலுள்ள ஒரு பெண்ணான வானதி ஒரே நாளில் சூர்யாவிடம் மொத்தமாய் விழுந்து விடுவதெல்லாம் செல்வராகவனுக்கு மட்டுமே நேரும் துன்பங்கள்தான்...
அதிலும் பரம்வீர்சக்ரா விருந்து பெற்றார் என்கிற ஒற்றைக் காரணத்துக்காக, ரிட்டையர்டு ஆன சூர்யாவின் அப்பா நிழல்கள் ரவி ட்ரேஸ் பண்ணவே முடியாத இந்திய ராணுவத்தின் ஹாட்லைன் நம்பருக்கு ஒண்ணரை ரூபாய் லேண்ட் லைன் போனிலிருந்து விளித்து அங்கிருக்கும் மேஜரிடம் ஒரு முதல்வரின் ரகசியங்களைக் கேட்டுச் சொல்வதெல்லாம் அலாவுதீன் படங்களில் கூட நடக்குமா என்று தெரியவில்லை.
வானதியாக ரகுல் ப்ரீத்தி சிங் அழகாக இருக்கிறார். ஏனோ ரகுல்ப்ரீத்தி சிங்கின் வரவுக்குப் பின் சாய் பல்லவி சோபிக்கவில்லை. நம்மாட்களுக்கு வடமாநில நடிகைகளின் மீதான மையல் என்று தீருமோ தெரியவில்லை.
அடுத்த காட்சி என்னவென்று தெரியாமல் படம் எடுப்பது ஒரு சாமார்த்தியம்தான் என்றாலும், அடுத்தகாட்சிக்கும் , முந்தின காட்சிக்கும் உள்ள வேறுபாடுகள் கண்ணைக் கட்டுகின்றன. இந்தப் படம்தானா ? இல்லை சூர்யா நடித்த வேறு படமா என்ற சந்தேகம் வந்து தொலைக்கிறது.
ஊடகங்களே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வில் சூர்யாவின் நண்பன் ராஜ் , சூர்யாவின் கையால் குத்துப் பட்டு இறந்து போகத் தவிக்கும் காட்சிகளெல்லாம் என்னவிதமான யோசனையோ தெரியவில்லை. அத்தனை நேரமும் சுற்றி நிற்கும் போலீசும் கத்தியால் குத்திக்கொண்டு செத்துப் போன ராஜின் துன்பியல் சம்பவத்தைக் காரணம் காட்டி, சூர்யாவை ஜெயிலில் போடாமல் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் படுக்க வைக்கிறது.
நாசமாப் போச்சி ! யாரோ செல்வராகவனுக்கும், சூர்யாவுக்கும் பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
செத்துப் போய் விட்டார் என்று ஊரே தேடும் சூர்யா வீட்டின் முன் ஆட்கள் நின்று கதறுவதும், அப்போது அங்கே ஊ என்று ஊளையிட்டுக் கொண்டே வந்து சூர்யா குத்தாட்டம் போடுவதும், மீடியாவின் முன்பு ஒப்பாரி வைப்பதும் ..... கடவுளே ! என்று ஆகிவிடுகிறது.
ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவற்றை ரசிப்பதற்கு படமும் நன்றாக இருக்க வேண்டாமா ? பாடல்கள் அத்தனையும் தேவையில்லாத ஆணி...
கரைவேட்டின்னா என்னான்னு காட்டுறேன் என்று சொல்லிவிட்டு பாலாசிங் ரோட்டில் சலம்பும் காட்சி புதுமை. அரசியல் காட்சிகளில் கூட வேண்டுமென்றே மத்தியில் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளாமல் பாதுகாப்பாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். உசார் உலகநாதன் உபயம். முதுகு முக்கியம் அல்லவா ?
திராவிடக் கட்சிகளைத் தோலுரிக்க வேண்டும் ! ஆனால் அதே திராவிடக் கட்சியிலிருந்துதான் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது. சொல்லவும் செய்யணும்! சொல்லவும் கூடாது என்கிற திரிசங்கு நிலைதான் மொத்தப் படத்துக்கும்... கொஞ்சம் ரா ஃபுட்டேஜ்களைத் தூக்கி எடிட்டரின் டேபிளில் தூக்கி வீசி ஒரு படம் எடிட் பண்ணித்தாப்பா ! என்று சொல்லி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
புதுப்பேட்டையிலிருந்து கொஞ்சம் வெங்காயமும், முதல்வனிலிருந்து கொஞ்சம் தக்காளியும், இன்னும் கொஞ்சம் படங்களில் இருந்து உப்பு, மிளகாய், மல்லித் தளையெல்லாம் தூவி கொப்பரையில் போட்டு கொதிக்க வைத்திருக்கும் பழங்கஞ்சிதான் NJK...
0 Comments