மூன்று இளம்பெண்கள், அவர்களை பாலியல் ரீதியாகத் தாக்கும் நான்கு இளைஞர்களில் ஒருவன் வசதியான வீட்டுப் பையன், அவனை பாட்டிலால் தாக்கித் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அந்த மூன்று இளம்பெண்களில் மீரா என்ற இளம்பெண்ணைப் பழிவாங்கத் துரத்தும் அந்த நான்கு இளைஞர்கள், மேலிடத்து அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தால் அந்த மீராவின் மீது போலீஸ் பொய்வழக்கு போட்டு சிறையிலடைக்கிறது, மனைவி இறந்த மன அழுத்தத்தில் இருக்கும் வக்கீல், அந்த இளம்பெண்களுக்காக வாதாடுகிறார், பாலியல் துன்புறுத்தல், இதிலிருக்கும் உளவியல் சிக்கல், சட்ட சாத்தியதைகள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை நேர்கொண்ட பார்வையாக விவாதிக்கும் படமே ஹெச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.
இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த ‘பிங்க்’ படத்தின் ரீமேக்தான் என்றாலும் அஜீத்குமார் என்றொரு ‘ஆக்சன் ஹீரோ நடிக்கிறார்’ என்ற வகையில் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகி ரிலீஸ் ஆகியிருக்கிறது. அஜீத்தும் இந்தக் கதாபாத்திரத்துக்குள் கர்மசிரத்தையாக தன்னைப் புதைத்துக் கொண்டிருக்கிறார். வழக்கமாகப் பேசும் பஞ்ச் டயலாக்குகள், மிகப்பெரிய மிரட்டல் சப்தங்கள், மேனரிசம் இல்லாமல் ஒரு தனிமனிதனின் குமுறல்களை முன்வைக்கும் வக்கீலாக மிரட்டியிருக்கிறார். அஜீத் ரசிகர்களுக்கென விருந்தாக ஆக்சன் பிளாக்குகள் இருப்பதால் அவர் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றவில்லை. அந்த ஒரு சண்டைக் காட்சி போதும். அஜித்துக்கு இந்தப்படம் ஒரு மைல்கல்.
இளம்பெண்களாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் ஆன்ட்ரியா தரியாங்க் ஆகியோர் நடிப்பில் நிறைவு. மனக்குமுறல்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் குமுறுவதும், பணக்கார வர்க்கத்தின் முன் தங்களுடைய கூக்குரல்கள் எடுபடாமல் போகும்போது வெடித்து அழுவதும் அவர்களுடைய உணர்வுகளை ரசிகர்களுக்குக் கடத்தும்போது அவர்களுடைய நடிப்பு வெற்றி பெற்றிருக்கிறது.
யுவன்சங்கர்ராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும், நீரவ்ஷாவின் ஒளிப்பதிவும், கோகுல் சந்திரனின் எடிட்டிங்கும் படத்தின் மிகப்பெரிய தூண்கள் என்றால் அதைவிட முக்கியமான ஒன்று சட்ட நுணுக்கங்களும், அதுகுறித்த சினிமா வசன அணுகுமுறைகளும்தான். சாமானியமாக ஒருவர் சட்ட புத்தகத்தைப் புரட்டி, அதைப் புரிந்து கொண்டு சினிமாவுக்கு வசனம் எழுதி விடமுடியாது. அதற்காகவே இயக்குனர் வினோத் மெனக்கெட்டு ஒரு சட்ட நிறுவனத்தை அணுகி பிங்க் படத்தில் இருந்த குழப்பத்தையும், குறைகளையும் களைந்து சட்ட நுணுக்கங்களையும், வசனத்தையும் ரசிகர்களுக்குப் புரியும் வண்ணம் மாற்றியது பாராட்டுக்குரியது. இதற்காகவே உயர்நீதிமன்றத்தில் வக்கீலாகப் பணிபுரியும் ‘கண்ணதாசன்’ என்ற நிஜவக்கீல் (‘தாஸ் லீகல் கன்சல்டன்சி’) பணிபுரிந்து படத்தில் நடித்துமிருக்கிறார்.
ஒரு ரகளையான பாடலில் துவங்கும் படம் அடுத்த காட்சியில் ஒரு வன்முறையும் அதற்கடுத்தபடியாக ஏற்படும் சிக்கல்களுமாக போய் அஜீத் வந்தவுடன் வேகமெடுக்கிறது. அதுவரையிலும் ரசிகர்களை சோர்வடையாமல் இருக்கச் செய்து விட்டு படத்தின் பின்பாதி முழுக்கவே கோர்ட் சீன்கள் என்பதால் “நம்மால் தொடர்ந்து பார்க்க முடியாதோ?” என்ற அசூயையை முன்பாதியில் ரசிகர்களுக்கு உருவாக்காமல், அடுத்து என்ன ஆகுமோ என்ற வகையில் திரைக்கதையை உருவாக்கி இருப்பதால் படம் வெற்றி பெறுகிறது. ஆனாலும் கூட கிளைமாக்ஸ் கொஞ்சம் பாய்ச்சல் குறைவுதான். இன்னும் அதிரடியாக இருந்திருந்தால் தமிழ் ரசிகர்களின் மனம் உற்சாகமடைந்திருக்கும்.
பெண்கள் மீதான பாலியல் சீண்டல் குறித்த கதை என்பதால் மிகவும் நுட்பமாகக் கையாளப் படவேண்டிய தேவை இருந்தாலும்கூட இயக்குனர் கொஞ்சம் சிக்கலில் சிக்கியிருப்பது தெரிகிறது. உளவியல் சார்ந்த திரைக்கதைகளில் சில விஷயங்களை மேம்போக்காகச் சொல்லிவிட முடியாது, அதேசமயம் ரொம்பவும் ஆழமாகவும் சொல்ல முடியாது என்பதுதான் சிரமம்.
சமூக வலைத்தளங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் அபாயகரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருவதால் இன்னொன்றையும் நாம் பேசியாக வேண்டிய நிர்பந்தம் நமக்குள் எழுகிறது. அடிப்படையில் ஆணும், பெண்ணும் சமம் என்று சொன்னாலும் கூட அது உண்மையில் சாத்தியமேயில்லை. ஒரு பெண் ஒரு ஆணை விட பத்து மடங்கு உடலளவிலும், மனதளவிலும் பலமானவள் என்பதுதான் உண்மை. பிரசவலியைத் தாங்குதல் என்ற ஒரு காரணம் போதுமானது. ஆனால் பணமும், அதிகாரமும், உங்கள் மீது வைக்கப் படும் அதீத அழுத்தமும் எத்தனைப் பெரிய பலத்தையும் பலஹீனமாக்கிவிடும் என்பதை பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியச் சட்டங்களும்கூட எவ்வளவுதான் பெண்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த பணக்கார வர்க்கங்கள் எத்தனை பெரிய சட்டங்களையும் தன்பால் ஈர்க்கக்கூடிய வசதியை இந்திய சட்ட அமைப்புகள் உருவாக்கி வைத்திருக்கிறது என்பதை எந்தக்காலத்திலும் மறுக்கமுடியாது.
1994 ஆம் ஆண்டு இயக்குனர் நீலகண்டா இயக்கத்தில் நடிகர் பிரபு, ரேவதி, ஜெயராம், அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த படம் ‘பிரியங்கா’. பாலியல் கொடுமைக்குள்ளான ஒரு வேலைக்கார சிறுமிக்காக நியாயம் கேட்டுப்போராடும் ஒரு இளம்பெண்ணின் கதை. இதில் வக்கீலாக பிரபு நடித்திருப்பார். இந்தப்படத்தில் வரும் கோர்ட் சீன்கள் அந்த சமயத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டன.
அதே போன்ற காட்சிகளையோ, வசனங்களையோ இந்தக்கால கட்டத்தில் ஒரு படத்தில் வைத்தால் மிகப்பெரிய சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்து விடும். காலமாற்றங்கள் எத்தனையோ காரியங்களை உருட்டிக் கொண்டு ஓடினாலும் கூட உருப்படியான விஷயங்கள் எதுவுமே நிகழவில்லை என்பதைத்தான் நாடு முழுவதும் நிகழும் பாலியல் குற்றங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டு வருகின்றன.
2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘குயீன்’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை முன்வைத்திருப்பார்கள். அதாவது, ஆண்களுக்கு எல்லா நேரமும் பாதுகாப்பான நேரங்கள் என்றும், பெண்களுக்கு சில குறிப்பிட்ட நேரங்கள் மட்டும் பாதுகாப்பாற்றவை என்னும் கட்டுமானத்தைக் குறித்த கேள்வியை எழுப்பியிருப்பார்கள். இதை நாம் மறுத்தாலும் கூட நம் வீட்டுப் பெண்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் ஒரு ஆண் துணையின்றி எத்தனை பேர் வெளியில் செல்ல அனுமதிப்போம் என்ற கேள்வியும் உடன் எழுகிறதல்லவா?
இப்படியான கேள்விகளை முன்வைக்கும் அநேகம் படங்கள் வந்தாலும் கூட நிஜத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீனும், அரசியல்வாதிகளின் முதுகில் ஒளிந்து கொள்ளும் பணக்கார பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலையும், வயது காரணம் காட்டப்பட்டு, தையல் மெஷினும், தொழில் துவங்க முன்பணமும் கொடுக்கும் சட்ட அரசாங்கத்தின் முயற்சிகள் பாலியல் குற்றங்களை ஊக்குவிக்கவே செய்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பெண்கள் மீதான ஆண்களின் எண்ணம், அவர்களின் எதிர்வினைகள் ஒரு ஆணுக்கு எம்மாதிரியான தாக்கத்தையும், அதன்பின்னான அடுத்த கட்டத்தையும் நோக்கி நகர்த்துகிறது, ஒரு பெண் ஒரு ஆணைத் தொட்டுப் பேசும்போது அந்தத் தொடு உணர்வு அந்த ஆணை எம்மாதிரியான செயலைநோக்கி உந்துகிறது, அதுவும் பணத்திலும், பகட்டிலும் பழகிப்போன ஒரு ஆணுக்கு ஒரு சாமானியப் பெண்ணின் மீது நீளும் விரலை கட்டுப்படுத்தத் தோன்றாமல் தன்னுடைய அதிகாரத்தின் நிமித்தம் நீட்டிப் பார்க்கத் தோன்றும் எண்ணம் போன்ற உளவியலை முன்வைக்கும்போது, பெண்களின் மீதான இந்த சமூகக் கட்டமைப்பு வேறு மாதிரி இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கும் சூழல் உருவாகிறது.
நாங்கள் மது அருந்துவோம், கிளப்புக்குகளுக்குச் செல்வோம், பிற ஆண் மற்றும் பெண் துணைகளோடு உடல் ரீதியிலான தொடர்பு வைத்துக் கொள்வோம் என்று எண்ணும் ஆண்களும், பெண்களும் அந்தந்த செயல்களில் ஈடுபட்டு அதற்கான பலன்களை அனுபவிப்பார்கள். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை.
ஒரு ஆணின் நிர்வாணப்படம் உண்மையில் பெண்களுக்கு எந்த விதத்திலும் முழுமையாகக் கிளர்ச்சியை ஏற்படுத்தாது என்பது உளவியலாளர்கள் கூறும் கருத்து. ஆனால் ஒரு பெண்ணின் ஆடையற்ற படம் ஆண்களுக்கு எல்லா விதத்திலும் கிளர்ச்சியைத் தரும். மேலும் அந்தப் படத்தில் இருக்கும் பெண் ஒரு நடத்தை சரியில்லாதவள் என்பதை ஆண்,பெண் உட்பட ஒட்டு மொத்தமாக நம்பி ஏற்றுக் கொள்ளும் வியப்பான மனநிலையைக் கொண்ட முரணான சமூகக் கலாச்சாரம் நம்முடையது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
மது குடிப்பதையும், அரைகுறை ஆடையணிவதையும் ஒரே நேர்கோட்டில் எப்படி இணைக்க முடியும்? மது என்பது ஒரு திரவத்தை அருந்தி தங்கள் நிஜத்தை மறப்பது, ஆடை என்பது தாங்கள் அணிந்து தங்கள் உண்மையான சரீரத்தை மறைப்பது. இதை ஒரு பெண் செய்யும் பட்சத்தில் அவர்களை எவ்வாறு உங்களில் இருந்து தனித்துப் பிரித்து அவளுக்கு வேசி பட்டம் கட்டுவீர்கள்? ஆணோ, பெண்ணோ மதுவை உட்கொள்ளும் பட்சத்தில் சரிசமமாகப் பாதிக்கப்படுவீர்கள் என்பதில் உங்களுக்குள் மிகப்பெரிய சமத்துவம் ஒளிந்து கொண்டிருக்கிறது அல்லவா ? அதைத்தான் இருபாலரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு ஆணோ, பெண்ணோ தாங்கள் விரும்பாத வார்த்தைகளையோ, செயல்களையோ, சீண்டல்களையோ அவர்கள் விரும்பாத பட்சத்தில் அவர்கள் மீது நிகழ்த்தி அத்துமீறும் செயலை அவர்களது எதிர்பாலினமோ அல்லது சுயபாலினமோ செய்யத் துணிவது வன்முறையே. தனிமனித அல்லது கும்பல் சேர்ந்து செய்யும் இம்மாதிரியான எல்லா செயல்களையும் நம்முடைய சட்டங்கள் ஆதரிக்காது. ஆனால் அதிகாரம் இந்த விஷயங்களைத் தலைகீழாக மாற்றிவிடும் என்பதைத்தான் படம் சொல்கிறது.
ஆண்கள்தான் குடிப்பார்களா? ஏன் நாங்கள் குடிக்க மாட்டோமா? அல்லது கூடாதா ? என்று கேள்வி எழுப்பும் பெண்கள் உடல்ரீதியாக தாங்கள் ஏதாவது இன்னல்களை அனுபவித்தால் மன ரீதியாகப் பாதிக்கப் படுவார்கள் என்பது உளவியல் ரீதியான உண்மை என்பதை இந்தப் படம் பேசுகிற சமயத்தில் அதிகார வர்க்கத்தின் வாயிலாக ஏவப்பட்டு, காவல்துறையின் அழுத்தம் காரணமாக சம்பந்தப் பட்ட பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுகிறாள்.
அதன்பின்னர் எதிர்க்கட்சி வக்கீல் சம்பந்தப் பட்ட பெண்களை நோக்கி பாலியல் தொழில் சார்ந்த கேள்விகளையே தொடர்ச்சியாக முன்வைத்து அந்தப் பெண்களின் உளவியலை சிதைக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார். அந்தப் பாத்திரத்துக்கு ரங்கராஜ்பாண்டே மிகவும் பொருத்தம் என்பதை ‘தந்தி’ தொலைக்காட்சியில் அவரது எதிர் இருக்கையில் அமர்ந்திருந்து அனுபவித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
‘வேண்டாம் என்றால் வேண்டாம்’ என்பது எல்லாருக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் அந்தப் பெண் மீதான குற்றம் தகர்க்கப் பட்டுவிடும். ஆனாலும் அது எந்தவிதமான தாக்கத்தையும் நமக்கு ஏற்படுத்தாதது மிகப்பெரிய குறை. உண்மையில் அந்த ரிசார்ட்டில் என்ன நடந்தது என்பது மீரா என்னும் கதாபாத்திரத்துக்கும், அவளை சீண்டிய ஆதிக் என்னும் இளைஞனுக்கும் மட்டுமே தெரிந்திருக்குமாறு காட்சி அமைத்திருக்கிறார்கள்.
வக்கீல் அஜீத்துக்கும், படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் தெரிந்திருக்க வேண்டாமா? உண்மையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்றுதானே காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகன் எண்ணுவான் ? ‘என்ன நடந்தது’? என்பதை ஒரே ஒரு சிசிடிவி காட்சி வாயிலாக காட்டியிருப்பார்கள்.
அதே போல அஜீத்தின் கடந்த காலத்தை ஜூனியர் பாலையா தன்னுடைய வார்த்தைகளால் விவரிக்கும் போது அஜீத், வித்யா பாலனின் அந்தரங்கக் காட்சிகளை விவரிப்பது என்ன மாதிரியான விவரணை என்பதை இயக்குனரிடம்தான் கேட்க வேண்டும். அஜீத்தின் மனைவியாக வரும் வித்யாபாலன் அழகு. மற்ற படங்களில் வரும் பிளாஷ்பேக் போல இல்லாதது ஆறுதல்.
ஆணோ, பெண்ணோ யாதொருவரும் தங்களுடைய இயல்பான ஓட்டத்தை மீறி மற்றொருவர் நடக்கத் தயங்கும் வேறு பாதையில் ஓடத் துவங்கினால் தங்களுக்கு நிகழும் எதிர்வினைகளை நிச்சயம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதை கொஞ்சம் தடங்கல் பார்வையாக ‘நேர்கொண்ட பார்வை’யில் சொல்லியிருக்கிறார்கள்.
படக்குழுவுக்கு வாழ்த்துகள்!
0 Comments