Tamil Sanjikai

வடலூர் வள்ளலாரின் வழியில் போதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் அஞ்சனம் அழகியபிள்ளை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்துவருகிறார். சொந்தவீடு இல்லாத காரணத்தால் அவருக்கு பெண் அமையாமல் இருக்கிறது. சென்னையில் ஐம்பது லட்சம் கொடுத்து ஒரு வீட்டை வாங்குகிறார். அந்த வீட்டில் அதற்கு முன்பு ஒரு வைரக் கடத்தல்காரன் குடியிருந்து, போலீசில் சிக்குகின்ற தருவாயில் ஐந்து வைரக்கற்களை சுவிட்ச் பாக்ஸில் ஒழித்து வைக்கிறான்.

வீடு வாங்கிய நேரம் அழகிய பிள்ளைக்கு ஒரு பெண் அமைகிறது. அவள் பெயர் மேகலா, பிரபல நகைக்கடையில் வேலை செய்கிறாள். புது வீட்டில் தனியாக வசித்துவரும் அழகிய பிள்ளைக்கு அந்த வீட்டில் உள்ள எலி ஒன்று தொல்லை கொடுக்கிறது. தொல்லை என்றால் கொஞ்சநஞ்சமல்ல.... ஒருகட்டத்தில் எலியைப்பிடித்து, அதைக்கொல்ல விரும்பாமல் குப்பைத் தொட்டியில் விடுகிறார் அழகிய பிள்ளை. மேகலா கேட்டதின் நிமித்தம் ஐந்தரை லட்சம் செலவு செய்து அழகான சோஃபா ஒன்றை வாங்குகிறார்.

மறுபடியும் அதேவீட்டுக்கு திரும்ப வரும் எலி அந்த சோஃபாவைக் கந்தலாக்குகிறது. அப்போது காபி போடுவதற்காக கேசைப் பற்ற வைத்தால் கேஸ் டியுபை எலியானது கடித்து தீப்பிடித்து சோஃபா எரிந்து நாசமாகிறது. அந்த நேரத்தில் வைரத்தை எடுக்க அந்த கடத்தல்காரன் வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு வைரம் கிடைத்ததா ? எலி என்ன ஆனது ? அஞ்சனம் அழகியபிள்ளையின் சிக்கல்கள் தீர்ந்ததா ? என்பது மிச்சக்கதை.

இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் இயக்கத்தில் நடிகர். எஸ்,ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மான்ஸ்டர். ஆபாச வசனங்களோ , காட்சிகளோ இல்லாமல் அடிதடி வன்முறைக் காட்சிகள் இல்லாமல் அழகான ஜீவகாருண்யம் பேசுகிற படம். குழந்தைகளுக்கான படமா என்றால் எல்லாரும் வாய்விட்டு சிரித்து ரசிக்க வேண்டிய திரைப்படம்தான் மான்ஸ்டர்.

அஞ்சனம் அழகியபிள்ளையாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு நேர்த்தியான கதாபாத்திரம். அலட்டல் இல்லாமல் அசாத்தியமாக வந்து போகிறார். எலியைக்கண்டு ஓடுவதும், காதலியைக்கண்டு நெகிழ்வதும், எலி செய்யும் சேட்டைகளால் கலங்கி நிற்பதுமாக சிக்சர் அடித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் அந்த எலியை அதன் குட்டிகளோடு சேர்த்து வைக்கும் காட்சி நெகிழ்ச்சி. வீட்டின் கிரகப் பிரவேசத்தில் ஐயர் நெல்மணிகளை எடுத்துக் கொடுத்து அதை யாகத்தில் போடச் சொல்லும்போது எஸ்.ஜே.சூரியா சொல்வார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்னு வள்ளலார் சொன்னாரு, நீங்க அதா தீயில போடச் சொல்றீங்களே ! என்ற வசனம் நறுக். இயக்குனர் ஜீவகாருண்யம் பற்றி மட்டும் பேசவில்லை, அதைத் தாண்டியும் பேசியிருக்கிறார்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் அந்த எலி. உண்மையான எலியோ என்று நினைக்கும் அளவுக்கு கலக்கல் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்கள். சின்ன சின்ன உயிர்களுக்கும் குடும்பங்கள் உண்டு, ஆகையால் அதைக் கொல்வது பாவம் என்று முதல் காட்சியில் விளக்கியிருப்பது அருமை. எலி செய்யும் சேட்டைகளால் முதலில் நமக்கே கோபம் வந்தாலும் கூட அதன் இயல்பு அதுதானே என்று நினைக்க வைக்கும் திரைக்கதை.

இறுதிக்காட்சியில் எலிப்பொறியில் சிக்கியிருக்கும் எலியை , அலமாரியிலிருந்து விழும் திருவருட்பா புத்தகம் விடுவிக்கும் காட்சி அழகானது. இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள் நன்றாக இருக்கின்றன.

எஸ்.ஜே.சூர்யாவின் அலுவலகத் தோழனாக கருணாகரன். சின்ன சின்ன வசனங்களால் சிரிக்க வைத்திருக்கிறார். மேகலாவாக பிரியா பவானி சங்கர். அழகாக இருக்கிறார், நடிக்கவும் செய்கிறார். எரிந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு பேசும்போது நல்ல நடிப்பு.

ஒரு வீட்டில் மட்டுமே நடக்கும் காட்சிகள் என்றாலும் கூட அதற்கான வெளி நிறைய இருப்பதால் சலிப்பு தட்டாமல் படமாக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டிருக்கிறது படக்குழு. கிராபிக்ஸ் டீம் நன்றாக உழைத்திருக்கிறார்கள்.

கேமராமேன் சிறப்பான பணியாற்றியிருக்கிறார். எலியின் கோணத்தில் வைட் ஆங்கிள் லென்சும், எலியை நமக்குக் காட்ட மேக்ரோ லென்சும் பயன்பட்டிருக்கிறது. லைட்டிங்கும் நன்றாகச் செய்திருக்கிறார். நிறைய காட்சிகள் கவிதையாக தொட்டுச் செல்கிறது.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அருமையாக இருக்கிறது. சித்ஸ்ரீராம் குரலில் அந்திமாலை நேரம் பாடல் வருடல், டபக்குன்னு பாடல் சூப்பர் குத்து. காட்சிகளும் நன்றாக அமைத்து அதில் ஆடும் பிள்ளைகள் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள். பின்னணி இசையும் அருமையாக இருக்கிறது.

சாதாரண மின்வாரிய ஊழியர் எப்படி ஐம்பது லட்சத்துக்கு வீடு வாங்கினார் ? ஐந்தரை லட்சத்துக்கு சோஃபா வாங்கினார் என்பது போன்ற லாஜிக்குகளை படத்தின் போக்கில் கேள்வி கேட்காமல் பார்த்தல் நலம். ரசிக்கும்படியான அழகான படங்களின் லாஜிக் மீறல்களை ரசிப்பதுவும் நன்றாகத்தானிருக்கிறது.

இயற்கை மற்றும் பிற உயிர்கள் மீதான அன்பு குறைந்து வரும் இந்தக் காலகட்டத்தில் மான்ஸ்டர் மாதிரியான படங்கள் வருவது தமிழ்சினிமாவுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்.

படத்தின் பெயர்தான் மான்ஸ்டர், நிஜத்தில் மான்ஸ்டர் ஒரு அன்பன்.

படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

0 Comments

Write A Comment