Tamil Sanjikai

2015 ஆம் ஆண்டு, தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த மாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள படம் மாரி பாகம் இரண்டு.

ஒரு கொலையைச் செய்வதற்காக சிறையிலிருந்து திருட்டுத்தனமாக கைதி தனதோசை போலீஸ் ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறது. அங்கு வந்த தனதோஸ் செய்ய வேண்டிய கொலையைச் செய்து விட்டு , கூட்டி வந்த போலீசாரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிக்கிறான். டைட்டில் போடுகிறார்கள்.

முதல் காட்சியில் ஒரு பார் ஒன்றுக்கு வரும் ரவுடிக்கும்பல் வந்து மாரியைத் தேடுகிறது. அப்போது மாரி என்ட்ரி கொடுத்து அந்தக் கும்பலைத் துவைக்கிறார். அது மாரியைக் கொல்ல நூறாவது அசைன்மெண்டாம். அதைக் கொண்டாடுகிறார்கள். முதல் பாகத்தில் வரும் வேலுவின் (சண்முகராஜன்) மகன்கள் கலையும், வள்ளுவனும் மாரிக்கு நெருக்கமான நண்பர்கள். மாரி போதைப்பொருள் கடத்துவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறான்.

அப்போது அங்கு மாரியைக் கொல்லச் சொன்ன லோக்கல் போதைப் பொருள் விற்கும் கும்பலின் தலைவன், நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு கும்பல் தங்களுடைய வியாபாரத்துக்குத் தடையாக இருப்பதாகவும் , அவர்களை விரட்டிவிட்டு அந்த வேலையை மாரி செய்து தருமாறு மாரியையும் கலை மற்றும் வள்ளுவனையும் மிரட்டுகிறான். அசராத மாரி அதை மறுத்துவிட்டு சவால் விட்டுவிட்டு கிளம்புகிறான்.

ஏரியாவில் ஆட்டோ ஓட்டிக்கொண்டே மாரியிடம் ஒருதலையாகக் காதலித்து வம்பு செய்கிறாள் அராத்து ஆனந்தி.

அடுத்தடுத்த காட்சிகள் கடந்த பின் ஒரு ஃபேக்டரியில் அந்த நைஜீரியர்கள் செத்துக் கிடக்கிறார்கள். அவர்களைக் கொன்ற தனதோஸ் அங்கு இருக்கிறான். தன்னுடைய பெயர் பீஜா என்றும், தான் சிறையிலிருக்கும் போது தன்னுடைய அண்ணனைக் கொன்ற மாரியைக் கொல்லத் தேடிக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறான். மாரியைக் கொல்ல அந்தக் கும்பல் ஜோடி சேர்கிறது.

கலையின் தம்பி வள்ளுவன் அந்த கும்பலின் தலைவனோடு ரகசியமாக போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறான். அதில் வசமாக ஆனந்தியை பயன்படுத்தி கொக்கைன் கடத்துகிறான். அப்படி ஒருநாள் தன் அண்ணன் கலையை பீஜாவிடம் அழைத்து வந்து மாரி பீஜாவோடு சேர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்வதாக கலையை நம்ப வைக்கிறான். சூழ்நிலைகள் அதற்கு ஏற்ப இடம் கொடுக்க கலைக்கும் , மாரிக்கும் சண்டை மூள்கிறது.

அங்கு புதிதாக வந்திருக்கும் கலெக்டர் விஜய சாமுண்டீஸ்வரி மாரியிடம் அந்தத் தொழிலை விட்டுவிட்டு , தன்னுடைய அசைன்மெண்டிற்கு ஒத்துழைப்பு தர கேட்கிறாள். அதை மாரி மறுக்கிறான். ‌

இந்த வேளையில் கலையின் தம்பி வள்ளுவனை பீஜா கொலை செய்து விட்டு , அந்தக் கொலையை மாரி செய்ததாக கலையை நம்ப வைக்கிறான். உடனடியாக மாரியைக் கொல்ல ஆளனுப்புகிறான் கலை. அங்கு சண்டை நடக்கிறது. அப்போது அங்கு வரும் பீஜா மாறியைச் சுட ஆனந்தி குறுக்கே பாய்கிறாள். ஆனந்தியைத் தூக்கிக் கொண்டு மாரி தப்பிக்கிறான்.

பீஜா மீண்டும் மாரியைக் கொல்ல தேடிக் கொண்டிருக்கிறான். போலீஸ் ஒருபக்கம் மாரியையும், பீஜாவையும் தேடுகிறது .... மாரி என்ன ஆனார் ? ஆனந்தி பிழைத்தாளா ? என்பது தடதடக்கும் மீதிக்கதை.

முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் உள்ள ஒரே சம்பந்தம் தனுஷும், ரோபோ ஷங்கரும், கல்லூரி வினோத்தும், காளி வெங்கட்டும் மற்றும் இவர்களின் குணாதிசயங்களும் மட்டுமே... மிச்ச நடிக, நடிகையர்கள் என எல்லாரும் மாரி முதல் பாகத்துக்கு அன்னியர்களே !

மாரி 2 ஆம் பாகம் முதல் பாகத்தைவிட ஜாலியாக இருக்கிறது. முதல் பாகத்தில் கொடுத்த தேவையற்ற தொய்வுகள் மற்றும் பில்டப்புகளை பட்டி டிங்கரிங் பார்த்து படம் எடுத்திருக்கிறார்கள்.

தனதோஸ் மற்றும் பீஜாவாக வரும் மலையாள நடிகர் டொவீனோ தாமஸ் அசாத்தியமான என்ட்ரி. கடைசி வரைக்கும் அதே டெம்போவைத் தக்க வைத்துக் கொண்டு ரங்கராட்டினம் ஆடியிருக்கிறார். சிறையில் அடிவாங்கிக் கொண்டு கதறுவதும், அதன்பின் தன்னை அடித்தவர்களைக் கொலை செய்து விட்டு தன்னை மரணத்தின் கடவுளாக சொல்லிக் கொள்வதெல்லாம் அல்டிமேட் கெட் அப். கேரளாவின் லவ்வர் பாய் டொவீனோ தாமஸ் கொஞ்சம் முயற்சி செய்தால் தமிழ்த் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம். வாழ்த்துகள் டொவீனோ தாமஸ்!

மாரியாக தனுஷ் செம்ம ஸ்கோரிங்க். பறந்து பறந்து சண்டை போடுவதாகட்டும், ஆனந்தியிடம் முறைத்துக் கொண்டே வம்பிழுப்பதாகட்டும், நடனமாகட்டும் மனுஷன் சும்மா பரபரக்கிறார். டயலாக் டெலிவரி, மேனரிசம், எதிரிகளிடம் சவாலும், சவடாலும் விடும் இடங்கள் என எல்லாவற்றிலும் தொய்வில்லாமல் புகுந்து விளையாடியிருக்கிறார். இரண்டாம் பாதியில் செம்ம அழகாக இருக்கிறார். அவரும் அவரது மகன் காளியும் வரும் இடங்கள் அருமை.

ஆனந்தியாக வரும் சாய்பல்லவி அழகு. நடனத்தில் கவர்கிறார். தனுஷிடம் கொஞ்சும் போதும் , கோபித்துக் கொள்ளும்போதும் இன்னும் அழகாக இருக்கிறார். குண்டடி பட்டுக் கிடக்கும் காட்சியில் நல்ல நடிப்பு.

சனிக்கிழமையாக வரும் ரோபோ ஷங்கரும், அடிதாங்கியாக வரும் கல்லூரி வினோத்தும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் கவுண்டர் கொடுத்து சிக்சர் அடிக்கிறார்கள். அட்டை ஆனந்தியாக வரும் அறந்தாங்கி நிஷாவும் கலகலப்பாக வந்து போகிறார்.

வரலக்ஷ்மி சரத்குமார் கலெக்டர் தோற்றத்தில் மிடுக்காக நடித்திருக்கிறார். நல்ல வேளையாக அவருக்கு காச் மூச்’சென கத்தும் கதாபாத்திரம் கொடுக்கவில்லை.

சண்டைக்காட்சிகளெல்லாம் அனல் பறக்கிறது. அந்த தேவாலயத்தில் வைத்து நடக்கும் சண்டை மற்றும் எல்லா சண்டைக் காட்சிகளுமே விறுவிறுவென இருக்கிறது. கேமராவும் சண்டைக்காட்சிகளில் சளைக்காமல் ஸ்டண்டு மாஸ்டர் சில்வாவுக்கு நிகராக பறக்கிறது. ஒளிப்பதிவு அருமை. எல்லா ஃப்ரேம்களும் கலர்ஃபுல்லாக வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ்.

யுவன் ஷங்கர் ராஜா பாடல்களிலும், பின்னணி இசையிலும் பட்டாசாக வெடித்திருக்கிறார். ரவுடி பேபி பாட்டும், மாரி கெத்து பாட்டும் செம்ம குத்து. இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் வானம் பொழியாம பாட்டு வெயில்காலத்து மழைபோல இதம்.

நடனம் பிரபுதேவா. கேட்கவா வேண்டும் ? தனுஷும், சாய்பல்லவியும் போட்டி போட்டுக் கொண்டு ஆடியிருக்கிறார்கள்.

சிரித்தும், முறைத்தும் , பறந்தும் அடுத்தடுத்து கடக்கும் தொய்வில்லாத திரைக்கதையில் லாஜிக்கையெல்லாம் தூக்கி தியேட்டருக்கு வெளியே வீசிவிட்டு உட்கார்ந்தால் மாரி 2 ஒரு மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம். இரண்டரை மணிநேரம் ஒருஇடத்தில் ஒரு ரசிகனை உட்கார வைப்பது அரிதான இந்த காலத்தில் மாரி 2 அதைச் செய்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாலாஜி மோகன்!

0 Comments

Write A Comment