Tamil Sanjikai

லால்குடி கருப்பையா காந்தி என்ற பெயரின் சுருக்கமே LKG. லால்குடி என்னும் ஊரில் கவுன்சிலராக இருக்கும் கருப்பையா காந்தி என்னும் இளைஞன் ஒரு எம்‌எல்‌ஏவாக ஆசைப்படுகிறான். அவனது அப்பா அழகு மெய்யப்பன் அதே கட்சியில் பல ஆண்டுகளாக பேச்சாளராகவும் உறுப்பினராகவும் இருந்து எந்த பிரயோஜனமுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர். இதைக்கருத்தில் கொண்ட LKG தான் பதவிக்கு வர கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறான். அந்த சமயம் பார்த்து தமிழ்நாட்டு முதலமைச்சர் உடல்நலக் குறைவினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு கவலைக்கிடமாக உள்ளார்.

இந்த அவசர நிலையில் கட்சியில் உள்ள அமைச்சர் போஜப்பன் முதல்வராக பொறுப்பேற்கிறார். கார்பரேட் யுக்திகளின் வாயிலாக LKG சில தகிடுதத்த வேலைகளைச் செய்து மேலிடத்தின் கவனத்தைப் பெறுகிறார். இது கட்சியில் சலசலப்பை உண்டு பண்ணுகிறது. மேலும் ஏற்கனவே அந்தப் பதவிக்குத் தகுதியான ராம்ராஜ் பாண்டியனைக் கோபத்துக்குள்ளாக்குகிறது. ராம்ராஜ் பாண்டியன் தன்னுடைய தொகுதியில் தான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சவால் விடுகிறார். உண்மையில் ராம்ராஜ் பாண்டியன் அந்தத் தொகுதியில் வலுவான வாக்கு வங்கி வைத்திருப்பவர்.

LKG ஜெயித்தாரா ? ராம்ராஜ் பாண்டியன் தன்னுடைய சவாலில் வென்றாரா ? என்பது மிச்சக்கதை.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் தயாரிப்பில் இயக்குனர். கே.ஆர்.பிரபு தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி நடித்திருக்கும் படம் LKG. சமீப காலத்தில் வெளிவந்திருக்கும் Political Satire Genreல் வந்திருக்கும் படம் இது. சமகாலத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களை மையப்படுத்தி வந்திருக்கும் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கியப்பங்கு உண்டு. ஜே.கே.ரித்தீஷ் மற்றும் நாஞ்சில் சம்பத் என ஒரிஜினல் அரசியல்வாதிகளை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஆச்சர்யம் என்னவென்றால் உண்மையிலேயே இந்தப் படத்தை சென்சாரில் எப்படி வெளியிட்டார்கள் என்பதுதான். ஒன்று படத்தை எதிர்க்கட்சிகள் தயாரித்து வெளியிட்டு இருக்கவேண்டும். இல்லையென்றால் சென்சார் பேனலில் தமிழ் தெரியாத வடநாட்டவர்கள் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் நடந்திருக்க வாய்ப்பேயில்லை.

தெர்மாக்கோல் முதல் அமெரிக்க டாக்டர், ஒருகோடி ரூபாய் ஆஸ்பத்திரி உணவு பி‌ல், முதல்வர் மர்ம மரணம், கண்ணீரோடு பதவியேற்பு, தர்மயுத்தம், தேர்தலில் கார்ப்பொரேட் தலையீடு, ஒருவர் மாறி அவதூறு பரப்புதல் என்று படம் முழுக்க காமெடி தோரணம்.

படம் சற்றே இயல்பு மீறி நகர்ந்தாலும் கூட ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய கேரக்டருக்கேற்ற நடிப்பு. தன்னுடைய அப்பா கையிலிருக்கும் தாய் ஒலி என்னும் நாளிதழை தாயொலி என்று சேர்த்து வாசிப்பது, ஸ்கூலில் அட்மிஷனுக்காக நிற்பது, அட்மிஷன் கிடைக்காமல் அந்த ஸ்கூலுக்கு மின்சாரம் போன்ற அடிப்படையை கட்பண்ணிவிட்டு மறுநாள் அதே பள்ளியில் கொடியேற்றுவது, தான் அப்பாவை கலாய்ப்பது, பத்திரிகையாளர்களை சந்திப்பது, பிரதம மந்திரியே அரசாங்க கஜானாவில் கைவைக்க முடியாது , ஆனால் ஒருவார்டு கவுன்சிலரால் அது முடியும் என்று கார்போரேட் ஆட்களிடம் வசனம் பேசுவது, அடுத்தடுத்த பிரச்சினைகள் வரும்போது கலங்குவதும் அதன் பி எழுந்து நிற்பதுமாக கலக்கியிருக்கிறார்.

அவரது அப்பாவாக நாஞ்சில் சம்பத், சில இடங்களில் வந்தாலும் கூட அவரின் கதாபாத்திரம் அவரது ஒரிஜினல் கதாபாத்திரத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. சிரிக்க வைத்திருக்கிறார்.

ஜே.கே.ரித்தீஷ் கட்சியின் இரண்டாம் அணி ஆளாக வருகிறார். கோபத்தில் வசனம் பேசும்போது பரபரப்பாகவும், பேச்சி ! பேச்சி ! நீ பெருமையுள்ள பேச்சி ! என்று பாடி மாட்டை அடக்கும் போதும், ராமராஜன் ஸ்டைலில் சண்டை போடும்போதும், அவரை ஒரு பெண் என்று சொல்லி மக்கள் கலாய்க்கும்போதும், மனோபாலாவிடம் அவர் சிக்கிக் கொள்ளும்போதும் கலகலப்பூட்டுகிறார்.

போஜப்பனாக ராம்குமார் நடித்திருக்கிறார். அவரது உருவமும் தோற்றமும், குரலும் அப்படியே அவரது தந்தை மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவூட்டுகிறது.

கார்ப்பொரேட் நிறுவனத்தின் ஆளாக பிரியா ஆனந்த். அவரது தோற்றத்துக்கும், அவரது கதாபாத்திரத்துக்கும் அப்படி ஒரு ஒற்றுமை. ஆர்.ஜே.பாலாஜியோடு காதல் காட்சிள் இல்லை என்பது ஆறுதல். ஆனாலும் அழகாக இருக்கிறார்.

பாலாஜியின் மாமாவாக மயில்சாமி. நடிப்பில் அவரைக் கேட்கவா வேண்டும். ஜே.கே.ரித்தீஷ் குறித்து அவர் வர்ணிக்கும் இடம் செம்ம !

படம் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அரசியல் மீதான பசுத்தோலைக் குறித்தும், அரசியல் வெற்றி தோல்விகளில் கார்ப்பொரெட்டுகளின் தலையீடு மற்றும் ஆதிக்கத்தின் அபாயம் குறித்தும் பேசுகிறது.

மீம் கிரியேட்டர்கள் எனப்படும் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறித்தும், பத்திரிகையாளர்கள் நினைத்தால் டிரம்பை தமிழனாகவும், திருவள்ளுவரை தாலிபானாகவும் மாற்ற முடியும் என்றும் பேசுகிறது. நல்ல ஒரு பேச்சாளனால் எதுவும் சாத்தியம் என்று சொல்கிறது.

இன்று இருக்கும் தலைமுறையினர் பரிகாசக்காரர்களாகவும், பகடி மட்டுமே அவர்களுடைய ஒரே தேர்வாக இருப்பதும் அச்சமூட்டும் ஒன்றாக அமைந்திருப்பது எத்தனை உண்மை. எதையும் முறையாகக் கற்றுக் கொள்ளாமல் அல்லது அது குறித்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் வெறும் சமூக வளத்தளங்களில் காண்பதை மட்டுமே நிஜம் என நம்பி அவதூறு அல்லது உண்மைக்குப் புறம்பானதை பகிர்ந்து கொண்டு அலைவது, எந்த ஒரு கருத்தை யார் சொன்னாலும் அவர்களைக் கலாய்த்து, மீம் கிரியேட் செய்து அவர்களது உளவியலை உடைத்துப் போட்டுவிடும் இன்றைய மனிதர்களின் மனநோயை இப்படத்தின் ஒருசில காட்சிகளின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

கார்போரெட்டுகளின் கரங்கள் இன்றைய தலைமுறையின் பிள்ளைகளை கைப்பொம்மைகளாக்கி வைத்திருக்கும் உண்மை நமக்கு உரைக்க வேண்டும். அதுவரைக்கும் ஒரு நல்ல ஆட்சியாளனுக்கு வாய்ப்பேயில்லை. உங்கள் பிள்ளைகளை மனிதர்களாக வளருங்கள். ஊழல் என்பது கெட்ட வார்த்தை என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். இன்னும் இருபது வருடங்களில் நாட்டை மாற்றிவிடலாம் என்று சொல்கிறார்கள். அதுவும் தகிடுதத்தங்கள் செய்து ஆட்சியைப் பிடிக்கும் கதாநாயகனின் வாயிலாக.... அதுமட்டும் உறுத்தினாலும் கூட அதுவும் நிஜம்தானே ? பேசிப்பேசியே காரியத்தைச் சாதித்து விடும் இன்றைய நம்முடைய ஆட்சியாளர்கள் என்ன உத்தமர்களா ?

LKG யிலிருந்து +2 டிஸ்டிங்க்ஷன்.... ஜாலியாக என்ஜாய் செய்து பார்க்கும் படம்...

0 Comments

Write A Comment