Tamil Sanjikai

லிசா என்னும் இளம்பெண் தன்னுடைய நண்பன் ஜக்குவைக் கூட்டிக் கொண்டு தனது தாயாரின் பெற்றோரைக் காண ஒரு மலைப் பிரதேசத்திலுள்ள ஒரு பெரிய வீட்டிற்கு வருகிறாள். தன்னுடைய காதலனோடு ஓடிப்போன லிசாவின் தாய் மீது கோபத்தில் இருக்கும் பெற்றோர் அந்தக் கோபத்தை லிசாவின் மீது காட்டுகின்றனர். லிசாவின் பாட்டி ஒருவித வெறுப்பிலேயே லிசாவை அணுகுகிறாள். லிசாவின் தாத்தா டி.ஜே என்று அழைக்கப் படும் தனஞ்செயனின் நடவடிக்கைகளும் விசித்திரமாக இருக்கின்றன.

அந்த வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. லிசாவின் நண்பன் ஜக்கு அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான்.

ஒருகட்டத்தில் அந்த வீட்டில் இருக்கும் தம்பதி லிசாவின் உண்மையான தாத்தா, பாட்டி இல்லை என்பது தெரிய வருகிறது. டி.ஜே ஜக்குவை கத்தியால் குத்துகிறார். அப்போது அங்கிருந்து தப்பிக்கும் லிசா வீட்டின் வெளியே உள்ள ஒரு அறையில் செல்போன் ஜாமர் மற்றும் அழுகிய பிணங்களைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். அங்கு வரும் டி.ஜே லிசாவைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது எங்கிருந்தோ வரும் ஆவி லிசாவின் உடலுக்குள் புகுந்து டி.ஜேவைப் புரட்டியெடுக்கிறது.

லிசாவின் உண்மையான பாட்டி,தாத்தா யார் ? அந்த வீட்டில் இருக்கும் பேய் எங்கிருந்து வந்தது ? லிசாவும் ஜக்குவும் என்ன ஆனார்கள் ? அந்த சம்பவங்களின் பின்னணி என்ன என்பதை மிச்சக் கதையாக முப்பரிமாணத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் லிசா.

வயதான பெற்றோரை அவர்களது அந்திமக் காலத்தில் பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்கிற அற்புதமான ஒன்லைனை , பேயோடு சேர்த்து திரைக்கதை எழுதி, நிறைய பணம் செலவழிக்க தயாராயிருக்கும் ஒரு தயாரிப்பாளரை வைத்துக் கொண்டு, 3D தொழில் நுட்பத்தில் கலக்கியிருக்க வேண்டிய படத்தை, நாய் கடித்துக் குதறிய பலாப்பழத்தைப் போல வீணடித்திருக்கிறார்கள்.

உலகெங்கிலும் வரும் பேய்ப்படங்கள் அனைத்தும் ஒரு வீட்டிற்குள்ளேயே பேய்களை உலவ வைத்து, அங்கிருக்கும் மனிதர்களையும், படம் பார்ப்பவர்களையும் கதற வைத்து இரண்டாம் பாகத்துக்கு பிள்ளையார்ச் சுழி போட்டு முடிப்பார்கள். லிசாவும் இந்த டெம்ப்ளேட்டுக்குத் தப்பவில்லை.

கொஞ்சம் பொம்மைகள், ஆளின்றி ஆடும் நாற்காலிகள், வீட்டுக்குள் நிறைய விளக்குகள் இருந்தும் லைட்டை ஆன் செய்யாமல் மின்சாரத்தைச் சேமிக்கும் பிச்சைக்காரத்தனம், குறிப்பிட்ட பேய் வீடுகள் மலைப்பிரதேசத்திலோ அல்லது வசிப்பிடங்களைத் தாண்டி ஊருக்கு வெளியே இருப்பது, சில மைக்ரோ செகண்டுகள் மட்டுமே கதறிய படியே வந்து கூச்சலிடும் அழுகிய நிலையிலிருக்கும் பேய்கள், பேய்ப்படங்களில் மட்டுமே பின்பக்கமிருந்து வந்து ஆட்களை தோளில் படாரென தட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கும் தீய பழக்கம், ரேடியோக்கள் தானாய்ப் பாடும் டெக்னாலஜி, ரிமோட்டிலிருக்கும் பேட்டரியைக் கழற்றிய பின்னரும் தானாகவே இயங்கும் பேய்கள் மட்டுமே இயக்கும் விசித்திரத் தொலைக்காட்சிகள், ஜன்னலுக்குள்ளிருந்து வீட்டீன் வெளியே நடமாடும் மனிதர்களைக் கண்காணிக்கும் பேய்கள், பதற வைக்க வேண்டிய திகில் படங்களில் பத்து பைசா பிரயோஜனமில்லாத மூன்று பாடல்கள் வீதம் ஒரு காதல் பாடல், ஒரு திகில் பாடல், பேய்கள் பாடும் சுயபச்சாதாப சோகப்பாடல்கள், மிரட்டல் பாடல்கள் வகையறாக்கள். படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஒருவித மலச்சிக்கல் வந்தது போலவே முகத்தை வைத்துக் கொண்டு உலவுவது… இப்படி சலிக்க வைக்கும் கிளிஷேக்களை வைத்துக் கொண்டு பேய்ப்படமெடுக்கும் வழக்கம் என்று ஒழிகிறதோ அன்றே இந்த உலகம் பேய்களின் பிடியிலிருந்து விடுபடும் என்றே தோன்றுகிறது.

முதலில் 3D தொழில்நுட்பம் குறித்து அடிப்படையான ஒரு விஷயத்தை பார்வையாளர்களும், தொழில் நுட்ப வல்லுனர்களும், இயக்குனர்களும் புரிந்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. முப்பரிமாணம் என்பது மனிதர்களின் கண்கள் இயல்பாய்க் காணும் இவ்வுலகின் கோணம்தான்.

ஒரு கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் நாம் பார்க்கும் பொருள் ( Subject ) தட்டையாகத் தெரியும். நாம் நம் இருகண்களால் பார்க்கும் பொழுது இரண்டு கண்களுக்கும் வெவ்வேறு பிம்பங்கள் தெரியும். ஒரு பொருளை பார்க்கும் பொழுது நம் இரு கண்களும் அந்த பொருளை நோக்கி focus செய்கிறது. இந்த நிலையில், நாம் பார்க்கும் பொருளுக்கு பின்னாலும், முன்னாலும் இருக்கும் பொருள்கள் இரண்டு பிம்பங்களில் தெரிவதை உணரலாம்.

உங்கள் எதிரில் நிற்கும் மனிதரின் முன்பக்கத்தைக் காணும் உங்களால் அவர்களின் பின்பக்கத்தைக் காண முடியாது. ஏனென்றால் அது உங்கள் பார்வையின் கோணத்திலிருந்து மறைவாக இருப்பதுதான். நீங்கள் அவர்களைக் காணும் போது அவர்களின் பின்னணி ( Backround )மங்கலாகத் தெரியும். அந்த மனிதருக்கும், அவரது பின்னணிக்கும், உங்கள் கண்களுக்கும் இடையில் இருக்கும் தூரத்தை ( Depth of field ) உங்கள் கண்கள் அறிந்து கொள்வதுதான் முப்பரிமாணம். உங்களால் ஒரு கண்ணை மூடிக்கொண்டு ஒரு படிக்கட்டில் வேகமாக இறங்கவோ , ஏறவோ முடியாது. மீறினால் கீழே விழுந்து விடுவீர்கள். முயற்சி செய்து பாருங்கள். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே..

இந்த யுக்தியைப் பயன்படுத்தி தமிழில் எடுக்கப்பட்ட முப்பரிமாணப் படங்களிலேயே மிகச் சிறந்த படம் என்றால் அது இப்போதுவரைக்கும் மைடியர் குட்டிச்சாத்தான் மட்டும்தான். Analog காலத்தில் அப்படியொரு பிரமிப்பூட்டும் முப்பரிமானப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் டிஜிட்டல் காலத்தில் எத்தனையோ மேம்பட்ட தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்தக்காலத்தில் எவ்வளவு சிறப்பாக எடுத்திருக்க வேண்டும் ?

லிசாவாக அஞ்சலி அழகாக இருக்கிறார். பிரம்மானந்தம், யோகிபாபு போன்றவர்கள் வரும் காட்சிகள் கதைக்குத் தேவையே இல்லாத திணிப்புகள். தெலுங்குக்கும் தேவையாக இருப்பதில் இவர்கள் இருவரும் வருவது புரிகிறது. பிரம்மானந்தம் வரும் காட்சிகளில் தெலுங்கு உச்சரிப்பில் உதட்டசைவுகள் வருகின்றன. யோகிபாபுவுக்கு மொத்தம் மூன்றே காட்சிகள். இப்படியொரு கூட்டணியை வைத்துக் கொண்டு எப்படி விளையாடியிருக்கலாம்?

டி.ஜெவாக மகரந்த் தேஷ்பாண்டே நிறைவான நடிப்பு. உருட்டி மிரட்டும் கண்கள், பாடி லேங்குவேஜ் என்று படத்தில் ஆவர்த்தனம் நிகழ்த்தியிருக்கிறார். படத்தின் போக்கு அவரை ஏனோதானோ வென வழிநடத்தியதில் கவனம் பெறாமல் போகிறார்.

படம் இன்னதென்று சொல்ல இயலாத ஒரு குண்டும், குழியுமான சாலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. திரைக்கதையில் ஏகப்பட்ட கவனக் குறைவுகள். தேவையில்லாத பாடல்கள் என்று படம் தத்தளிக்கிறது.

அஞ்சலியின் பாட்டிக்குப் பேய் பிடிப்பது ஏன் ? வீட்டிற்குள் உலவும் பேய் யார் ? தேவையே இல்லாத திடுக்கிடும் காட்சிகள் எல்லாம் எதற்கு என்றுதான் தெரியவில்லை. மூன்று நான்கு நாட்கள் தங்கிய நிலையில் அந்த வீட்டின் வெகு அருகில் உள்ள அறையில் இருக்கும் அழுகிய பிணங்களின் வாடையை ஏன் அஞ்சலியும், அவரது நண்பரும் அறிந்து கொள்ளவில்லை என்று ஒரு மிகப்பெரிய லாஜிக் ஓட்டை.

படத்தின் டிரெய்லரில் ராத்திரி பத்து மணிக்கு மேலே விளக்கு எரியக்கூடாது ! பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லுகிறார்கள். படத்தில் அஞ்சலியின் தாத்தா டி.ஜே அப்படிச் சொல்கிறார். ஆனால் கிளைமாக்ஸில் வரும் கதைக்கும் அந்த வீட்டில் இருக்கும் பேய்க்குமான எந்த விஷயத்தையும் சொல்லவில்லை, அப்படி இப்படி எங்கெல்லாமோ ஓடி கிளைமாக்ஸில் பாடம் நடத்துகிறார்கள்.

பேய்ப்படங்களுக்கு ஏற்ற லைட்டிங் மற்றும் ஒளிப்பதிவு. ஒளி மிகப்பெரிய அளவில் தேவையில்லையாதலால் லைட் வாடகை மிச்சம். பின்னணி இசை சுமார் ரகம். அஞ்சலிக்குப் பேய்பிடிக்கும் காட்சி சூப்பர். மற்றபடி படத்தில் பேய் வரும் காட்சிகளெல்லாம் கான்ஜூரிங்க் போல நிறைய பேய்ப்படங்களின் காட்சிகளை கலக்கி சுட்ட கருகல் தோசைதான்.

லிசா ஆடியன்சுக்கு கொடுக்கப் பட்ட மிசா !

0 Comments

Write A Comment