Tamil Sanjikai

கட்டுமான நிறுவனமொன்றில் வேலை செய்யும் இளைஞனான பிரபாகரன் சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது எதிர்வீட்டில் தாரணி என்னும் இளம்பெண் தன்னுடைய தாயுடன் பிரபாகரனின் எதிர் வீட்டில் வசித்து வருகிறாள். அப்போது ஆந்திராவில் இருந்து வரும் வம்சி என்பவன் தாரணியைக் கொல்ல முயற்சிக்கவே, ஒருகட்டத்தில் வம்சி கொடூரமாகக் கொல்லப் படுகிறான்.

இந்த வழக்கை போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் விசாரிக்கிறார். போலீஸ் மோப்பம் பிடித்து இளம்பெண் தாரிணியை விசாரிக்கிறது. அடுத்தபடியாக பிரபாகரனை விசாரிக்கிறது. அப்போது பிரபாகரன் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி எனவும், ஆந்திராவில் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், சக போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து திடீரென தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்ததும் தெரிய வருகிறது.

திடீரென ஒருநாள் அந்தக் கொலையை செய்தது நான்தான் என பிரபாகரன் போலீசில் சரணடைகிறார். மருத்துவ சோதனையில் பிரபாகரன் ஒரு மனநோயாளியைப் போல நடந்து கொள்ளவே போலீசுக்கு தலைவலி உருவாகிறது. உண்மையில் பிரபாகரன் ஒரு கொலை செய்திருக்கிறார். ஆனால் வம்சியைக் கொன்றது தாரணியும், அவரது தாயாரும் என போலீஸ் சொல்கிறது. அப்படியென்றால் பிரபாகரன் யாரைக் கொன்றார் ? யார் குற்றவாளி ? என்பதே மீதிக் கதை.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் கொலைகாரன். பிரபாகரனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். படம் ஆரம்பித்தவுடனேயே ஒருவித சஸ்பென்சைத் தக்க வைக்க எண்ணி ஒரு டூயட் பாடலோடு ஆரம்பிக்கிறார்கள். எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய ஒரு கொலைவழக்கை சினிமாவுக்காக நீட்டி முழக்கியிருக்கிரார்கள் என்பது போல தோன்றுகிறது. டெக்னிக்கலாக கதை சொல்ல நினைத்து படத்தின் போக்கைக் கொத்துக் கொத்தாக குதறியது போல ஒரு கோர்வையின்றி தத்தளிக்கிறது.

டிரெய்லரில் ஒரு சைக்கோ கொலைகாரன் பற்றிய என்று தோன்ற வைத்து அந்த சைக்கோ விஜய் ஆண்டனிதான் என்பது போல சித்தரித்து விட்டு அந்த ஒரு விறுவிறுப்பை படம் தக்க வைத்துக் கொள்ளவில்லை. விஜய் ஆண்டனிக்கு ஏற்படும் மாயத் தோற்றங்கள் ( Hallucination ) ஒருவித குழப்பத்தைப் பார்வையாளனுக்குக் கடத்துவதால், இதுதான் தனது கதாபாத்திரம் என்பதை விஜய் ஆண்டனி சொல்லாமல் குழப்பமே மிஞ்சுகிறது. திடீரென்று விஜய் ஆண்டனி ஒரு போலீஸ் ஆபீசர் என்றும் அவரது அதீத மவுனம், அவர் ஏதொவோன்றினால் பாதிக்கப் பட்டவர் என்பதும் புரிந்து விடுவதால் கிளைமாக்ஸ் புரிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் கிளைக்கதைகள் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.

நான், சலீம், பிச்சைக்காரன், எமன் என்று தனது முதல் படத்திலிருந்து ஒரே போன்ற முகபாவனை, உடல்மொழி மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வது விஜய் ஆண்டனிக்கு ஆரோக்கியமானதா அல்லது பின்னடைவா என்பது புரியவில்லை.

ஒரே போன்ற ரிப்பீட்டட் காட்சிகளும், பாடல்களும் படத்தின் விறுவிறுப்பையும், ஏற்கனவே குழப்பமான திரைக்காட்சியமைப்பும் சலிப்பைத் தருகின்றன. நாசர் ஒருசில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

கார்த்திகேயனாக அர்ஜுன், வயதானாலும் ஆள் உடம்பைச் சிக்கென வைத்திருக்கிறார். ஏற்கனவே நிறைய படங்களில் போலீசாக நடித்துவிட்டதால் இயல்பாகவே இருக்கிறது அவரது கதாபாத்திரம். கொலை செய்யப்பட்டது ஒரு பிரபல அமைச்சரின் தம்பி என்பதும், அவரை யாரும் தேடாததும் விந்தை. ஒரு போலீசாக தாரணியையும், அவரது அம்மாவையும் கொண்டு போய் விசாரித்திருந்தாலே அர்ஜுன் இத்தனை மெனக்கெட வேண்டியிருந்திருக்காதோ என்றே தோன்றுகிறது.

தாரணியாக ஆஷிமா நர்வால் அழகு, நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அவரது தாயாக சீதா. த்ரில்லர் படம் என்பதால் நகைச்சுவைக்குத் தனியாக எழுத வேண்டியதில்லை என்றாலும் கூட இன்வெஸ்டிகேஷன் படம் என்பதால் வசனம் அதிகம் எழுத வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் இயக்குனர். படம் முழுவதும் ஏகப்பட்ட டயலாக்குகள்.

படத்தை முடிக்க வேண்டுமே என்கிற காரணத்தால் மட்டுமே அவசர அவசரமாக கிளைமாக்ஸ் காட்சிக்கு வந்து விட்டு புதிதாக ஒரு கதை சொல்கிறார்கள். பச்சை சினிமாத்தனமாக இருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. எடிட்டிங்கில் கோட்டை விட்டது போலத் தெரிந்தாலும் இதில் எடிட்டரின் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

லீலை என்றொரு அற்புதமான படத்தை எடுத்த இயக்குனர் இந்தக் கதையை இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி எடுத்திருந்தால் கொலைகாரன் கொழுத்திருப்பான். மொத்தத்தில் கொலைகாரன் பார்வையாளனைக் கொல்கிறான்...

0 Comments

Write A Comment