Tamil Sanjikai

ஹேக்கிங் எனப்படுவது யாதெனில் ஒருவரது அனுமதியின்றி அவர்களது கம்பியுட்டரையோ, மொபைல் போனையோ குறிப்பிட்ட சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி ஊடுருவி அவர்களது தகவல்களைத் திருடுதல்.

சித்தார்த் ஒரு ஹேக்கிங் தெரிந்த கல்லூரி மாணவர். அவர் தான் தயாரித்த ஒரு ஹேக்கிங் சாப்ட்வேர் மூலம் மற்றவர்களின் மொபைல் போன்களில் உள்ள ரகசியங்களைத் தெரிந்து கொண்டு சம்பந்தப் பட்டவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

இதே போல ஒரு கும்பல் ஹேக்கிங் சாப்ட்வேரைப் பயன்படுத்தி சம்பந்தப் பட்டவர்களைக் கொலை செய்யத் தூண்டுகிறது. இயலாதவர்கள் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போகிறார்கள். இதில் சித்தார்த்தின் தோழியும் தற்கொலை செய்து கொள்கிறாள். இளம்பத்திரிகையாளப் பெண் ஒருவரோடு இணைந்து துப்பு துலக்க முயற்சி செய்கிறார் சித்தார்த். ஒருகட்டத்தில் அவளும் கொல்லப்படுகிறாள். சித்தார்த்தின் அப்பாவையும் கொல்ல முயற்சிக்கிறார்கள். சித்தார்த்தின் காதலி தியாவைக் கடத்தி மிரட்டுகிறார்கள்.

அந்தக் கும்பலை சித்தார்த் கண்டுபிடித்தாரா ? காதலி மீட்கப்பட்டாளா ? இறுதியில் யார் வென்றார்கள் என்பது மிச்சக்கதை.

படத்தின் முதல் காட்சியில் போன் மூலம் வரக்கூடிய ஒரு உத்தரவின் பேரில் இளைஞர் ஒருவர் கார் ஏற்றிக் கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்கான முகாந்திரம் என்ன என்பதோடு படம் துவங்குகிறது. அதன் பின்னர் கதாநாயகன் ஒரு பிளேபாய் என்பது போலக் காட்டி விட்டு, ஒரு பத்திரிகையாள பெண்ணோடு படுக்கையில் இருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. அவள் புறப்படுகிறாள்.

சித்தார்த்தாக ஜீவா நடித்திருக்கிறார். நிக்கி கல்ரானியோடு காதல் வயப்படுகிறார். டூயட் பாடுகிறார். நிறைய கொலைகள் நடக்கிறது. கதாநாயகனைக் கொல்ல முயற்சி நடக்கிறது. கதாநாயகனின் தோழி தற்கொலை செய்கிறாள். தோழி கொல்லப்படுகிறாள். சஸ்பென்சும், ஜாலியுமாகப் பயணிக்கும் கதையில் படத்தின் உயிரோட்டம் மூர்ச்சை அடைந்து நிற்கிறது.

ஒரு கட்டுக்கும் இன்னொரு கட்டுக்கும் இடையில் பார்வையாளனின் மன ஓட்டத்தைப் பாதிக்கும் திரைக்கதைகள் பெரும்பாலும் திருப்தியடையச் செய்வதில்லை. சொல்லவேண்டியதை முழுமையாகச் சொன்னாலும் இறந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்குமான கதைசொல்லலில் பின்னடைவு ஏற்படுகிறது.

ஜீவா இளமையாக இருக்கிறார். காதல் செய்வதிலும், நக்கல் செய்வதிலும் அவருக்கென்று ஒரு பாணியில் அசத்தல். அப்பாவோடான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

ஆர்.ஜே பாலாஜி சிரிப்பூட்டுகிறார். நிக்கி கல்ராணி , ஜீவா மற்றும் நண்பர்களுடன் குடித்துவிட்டு அலப்பறை செய்யும் காட்சிகள் ஜாலியாக இருக்கின்றன. நிக்கி கல்ராணி வழக்கம்போல ஒரு கதாநாயகி. கதையின் நோக்கம் தீவிரமானதால் இறுதிக்காட்சியில் கடத்தப் படுவதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். கதாநாயகனின் அப்பா அல்லது அம்மாவை வண்டியை விட்டு ஏற்றுவது , கிளைமாக்சில் கதாநாயகியைக் கடத்தி கட்டி வைப்பது என்று இன்னும் எத்தனை தசாப்தம் இம்மாதிரியான காட்சிகளைப் பார்க்க வேண்டியிருக்குமோ ?

பத்திரிக்கையாளர் வந்தனாவாக அனிக்கா. கவர்ச்சியாக வந்து போகிறார். அவர் சாகும் காட்சி பரபரப்பாக இருக்கிறது. வில்லன் பாத்திரத் தேர்வு பிரமாதம். கொடூரமான வில்லனாக கோவிந்த் பத்மசூர்யா நடித்திருக்கிறார். கூர்மையான கண்களும், நெடுநெடு உயரமும், அடர்ந்த தாடியுமாக பயங்காட்டுகிறார். கம்பியுட்டர் துவங்கி மொபைல்போன்கள், கார், மாற்று இதயமான பேஸ்மேக்கர் வரைக்கும் ஹேக் செய்வதுதான் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது. கொஞ்சம் விட்டால் நாயையும், பூனையையும் ஹேக் செய்வார்களோ என்று தோன்றுகிறது.

சுஹாசினி கொஞ்சம் ஓவர் எமோஷனல் அம்மா. தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் ஜீவாவின் பாசமிகு அப்பாவாக நடித்து சிரிக்க வைத்து அழவும் வைத்திருக்கிறார். அந்த மொட்டைமாடிக் காட்சி ஒரு சோற்றுப் பதம்.

காட்சியமைப்புகள் அருமையாக இருக்கின்றன. இரட்டை அர்த்த வசனங்கள் கொஞ்சம் துருத்திக் கொண்டு நிற்கிறது. குடும்பத்தோடு வந்தவர்கள் நெளிகின்ற சூழல். லைட்டிங் ,ஒளிப்பதிவு எல்லாமே பிரமாதம். எடிட்டர்தான் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.

திரில்லர் படங்களில் வரும் பாடல்கள் ஒரு திரைப்படத்தின் சாபக்கேடு. பின்னணி இசை பரவாயில்லை. கிராபிக்ஸ் காட்சிகள் கதைக்குத் தேவையான அளவு செய்திருக்கிறார்கள்.

இந்தப் பரபரப்பான காலகட்டத்தில் மனிதர்கள் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு அலையும் மொபைல்போன்கள் அவர்களின் அந்தரங்கத்தையும், வாழ்வையும், எதிர்காலத்தையும் எப்படிப் பாதிக்கின்றன என்று சொல்லும் கதையை எப்படிக் கொண்டு போயிருக்கலாம்? திரைக்கதையின் தொய்வு சொல்லவந்த விஷயத்தை சொல்லாமல் எங்கெங்கோ போய் படத்தை முடித்தாக வேண்டுமே என்று கருதி முடித்திருக்கிறார்கள்.

கீ – சாவி இருக்கிறது, பூட்டைத் தேடுவதில்தான் சிக்கல்...

-பிரபு தர்மராஜ்

0 Comments

Write A Comment