Tamil Sanjikai

கமலக்கண்ணன் எனும் இளைஞன் மதுரை கல்லூரியில் விவசாயம் படித்து விட்டு, தன்னுடைய சொந்த ஊரான சோழவந்தானில் விவசாயம் செய்து வருகிறார். அப்போது அந்த ஊரின் கிராம வங்கிக்கு மேலாளராக வரும் பாரதி தங்கள் வங்கியின் வாராக் கடன் பட்டியலில் கமலக்கண்ணனின் பெயர் முதன்மையாக இடம் பெற்றிருப்பதைப் பார்த்து, அந்தக் கடன் பாக்கிகளை வசூல் செய்ய கமலக்கண்ணனின் வீட்டுக்கு வருகிறார். முதலில் அவர்களுக்குள் சிறு சிறு முரண்கள் தோன்றினாலும் ஒரு கட்டத்தில் காதல் வயப்படுகிறார்கள்.

தத்தம் வீடுகளில் பேச முற்படும்போது, சிறு வயதிலேயே தன்னுடைய தாயை இழந்த கண்ணன் தன்னை வளர்த்த தன்னுடைய அப்பத்தாவைக் கூட்டிக்கொண்டு பாரதி வீட்டிற்குச் செல்கிறான். பேச்சு வார்த்தை முடிவில் அப்பத்தா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தவே, தன் அப்பா மற்றும் அப்பத்தாவின் பேச்சைத் தட்டாத கண்ணன் சாப்பிடாமல் இருந்து ஒருநாள் வயலில் மயங்கி விழுகிறான். ஒருவழியாக சம்மதம் வாங்கி பாரதியைத் திருமணம் செய்து கொள்கிறான்.

வாழ்க்கை இப்படிப் போகும் நிலையில் திடீரென்று ஒருநாள் கண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறான் கண்ணன். அடிப்படையில் மிகுந்த பொருளாதார வசதியைக் கொண்டிருக்கும் கண்ணன் தன்னுடைய குடும்பத்துக்கு தெரியாமல் கடன் வாங்கி ஒருநாள் அந்தக் கந்துவட்டிக் கும்பல் கண்ணனை கண்டமேனிக்கு உதைக்கிறது. கண்ணன் ஏன் கடன் வாங்கினான் ? அந்தக் கந்துவட்டிக் கும்பலிடம் இருந்து மீண்டானா ? என்பது மிச்சக்கதை !

ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் இயக்குனர்.சீனுராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் கண்ணே கலைமானே.

கமலக்கண்ணன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் அழகான நடிப்பு. அந்த பட்டதாரி கிராமத்து வாலிபர் கதாபாத்திரம் நிறைவாகப் பொருந்தியிருக்கிறது. நீட் தேர்வு, விவசாயம் , போராட்டம், டெல்லி, எலிக்கறி என்று படத்தின் முன்பகுதியில் கொஞ்சம் அரசியல் இருக்கிறது. அதுவும்கூட போனால் போகிறது என்ற அளவில்தான்... படத்துக்கு படம் உதயநிதி மெருகேறிக் கொண்டே போகிறார். தமன்னாவுடன் காதல் வயப்படும் காட்சிகள் அழகு.

தமன்னா அழகுப்பதுமை. கேடி படத்தில் இருந்து இத்தனை ஆண்டுகள் தன்னுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு நடிப்பிலும் மெருகேறியிருக்கிறார். மிடுக்கான வங்கி மேலாளர் வேடம். சிறப்பாகச் செய்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினுடன் போனில் பேசிக்கொண்டே தன்னுடைய தவிப்பையும், இயலாமையையும், காதலையும் ஒருசேர வெளிப்படுத்தும் காட்சியில் நடிப்பின் அனுபவம் தெரிகிறது.

படத்திலேயே போகிறபோக்கில் நகைச்சுவை கொஞ்சம் இருக்கிறது. பூ.ராமு மற்றும் வடிவுக்கரசி நல்ல பாத்திரத் தேர்வு. பூ.ராமு தன்னுடைய பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். அதிலும் தன்னுடைய தாய் செய்கிறதை எல்லாம் எல்லாம் பொறுத்துக் கொண்டு ஒரு காட்சியில் தன்னுடைய அம்மாவான வடிவுக்கரசியிடம் , அப்பத்தாவா இருந்த , அப்புறம் அம்மாவான.... அப்புறம் மாமியாரா மாற ஆசைப்படுறியோ என்றும் கேட்கும் இடம் அருமை. அதற்கு ரியாக்ஷன் கொடுக்குமிடத்தில் வடிவுக்கரசி நிற்கிறார்.

இயல்பு மீறாத திரைக்கதை. அழகான காதல் கதை, அரசியல் கதை, விவசாயம் குறித்த கதை என தனித்தனியே பிரிக்க முடியாமல் எல்லாம் ஒன்றாய் இருந்த போதிலும் இப்படத்திற்கான வகைமை என்று எதுவுமே இல்லாமல் இருப்பதில் சீனு ராமசாமி திருடு போயிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தென்றலாய் வருடியிருக்க வேண்டிய படம் எங்குமே ஒரு கதைக்கான வழியில் பயணிக்கவில்லை. திரைக்கதையிலும் நிறைய நெருடல்கள் இருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக படத்தின் முதல் காட்சியில் சாமியாடும் பெரியவர் பூ.ராமசாமியிடம், இந்த வருஷம் உன்னோட வீட்டுல ஒரு பொண்ணால கஷ்டம் வரும் என்று சொல்வார். அந்த காட்சி முடிந்து சுமார் அரைமணிநேரம் கழித்துத்தான் பூ.ராமசாமி கதைக்குள் இருப்பார், அவர்தான் உதயநிதியிடம் அப்பா என்பது அப்போதுதான் ஆடியன்சுக்கு தெரியும். அதற்குள் சாமி சொன்ன குறி பார்வையாளர்களுக்குள் மறந்து போயிருக்கும். ஒருவேளை ஞாபகம் இருந்தாலும் படத்தின் நகர்வு அந்த சம்பவத்தை நோக்கிப் பயணித்து விடும் அல்லது சிக்கிக் கொண்டிருக்கும். கடைசிக்காட்சியில் அதே சாமியாடி சொல்லும்போதுதான் ஆடியன்சுக்கு முதல் காட்சிக்கும் கடைசிக் காட்சிக்குமான தொடர்பு தெரிய வரும். படம் எங்கு போய் முடியும் என்று தெரியாமல் நகர்வது முதல் தொய்வு. அதே போல படத்தின் மூன்றாவது பகுதியில் கொஞ்சம் காட்சிகளில் தமன்னாவைக் காட்ட மாட்டார்கள். அப்போதே தமன்னாவுக்கு எதுவோ நடந்திருக்கிறது என்று தெரிந்து போய்விடுகிறது. அதற்கும் தமன்னாவின் அம்மாவுக்கு வாழ்வின் நடுவில் கண்பார்வை பறிபோயிருக்கும் விஷயத்திற்கும், தமன்னாவின் இடைவெளிக்குமான தொடர்பு சினிமாவை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு புரிந்து போகும். நல்ல படம்தான் ! இதுமாதிரி சில இடர்கள் இல்லாது போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

யுவன் பெரிதாக மிளிரவில்லை. மென்மையான இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே.... முதல் திருவிழா பாடலுக்கெல்லாம் அடி பின்னியிருக்கலாம். இசையில் வறட்சி...

ஒளிப்பதிவு குளுமை... அடிக்கடி வரும் ட்ரோன் ஷாட்டுகள் சலிப்பைத் தருகின்றன. வசனங்கள் இன்னும் கூர்மையாய் இருந்திருக்கலாம். சண்டைக்காட்சி இயல்பு. எடிட்டருக்கு வேலை சுலபமாய் இருந்திருக்கக்கூடும்.

கண்ணே கலைமானே ! சும்மா வெறுமனே !

0 Comments

Write A Comment