Tamil Sanjikai

மலேசியாவில் உள்ள ஒரு தொழிலதிபர் கொலை செய்யப்படுகிறார். கூலிக்கு வேலை செய்யும் கமாண்டோ பயிற்சி பெற்ற கேகே’வைக் கொலை செய்ய வின்சென்ட் தலைமையிலான போலீஸ் குழு துரத்துகிறது. வண்டியில் அடிபடும் கேகேவை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

அங்கு வைத்தும் கேகேவை கொலை செய்யப் பார்க்கிறார்கள். இந்த முயற்சியை டாக்டர் வாசு முறியடிக்கிறார். கேகே குறித்த வழக்கை பெண் போலீஸ் அதிகாரி கல்பனா விசாரிக்கிறார். இது வின்செண்டுக்குப் பிடிக்கவில்லை. கேகேவின் தம்பி நந்தா, டாக்டர் வாசுவின் நிறைமாத கர்ப்பிணியான இளம் மனைவி ஆதிராவைக் கடத்தி வைத்துக் கொண்டு, கேகேவை மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வருமாறு மிரட்டுகிறார்.

மருத்துவமனையின் கடுமையான பாதுகாப்பிலிருந்து கேகேவை மீட்டு வெளியே கொண்டு வருகிறார் வாசு. வாசுவையும், கேகேவையும் போலீஸ் சல்லடை போட்டுத் தேடியதில் கேகேவும், வாசுவும் சிக்குகிறார்கள். அப்போது சம்பவ இடத்துக்கு வரும் கல்பனாவை வின்சென்ட் சுட்டுக் கொன்று விடுகிறார். வின்செண்டிடம் இருந்து கேகேவும், வாசுவும் தப்பிக்கிறார்கள். போலீஸ் ஏன் கேகேவைத் தேடுகிறது? சக போலீசான கல்பனாவை ஏன் வின்சென்ட் கொலை செய்ய வேண்டும்? வாசு ஏன் இந்த வளையத்துக்குள் சிக்க வைக்கப் பட்டார்? ஆதிரா பிழைத்தாளா ? என்பதுதான் மிச்சக்கதை.

கமல்ஹாஸனின் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் ம செல்வாவின் எழுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம், அபிஹாசன், அக்சராஹாசன் மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கடாரம் கொண்டான்.

கேகே கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். படத்தின் முதல் கட்சியில் அடிபட்டு, மாடியிலிருந்து குதித்து ஓடி சாலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்கிறபோது ஒரு இளம் ஜோடி திரையில் தோன்றி காதல் செய்கிறார்கள். இரண்டு காட்சிகளுக்கும் உள்ள தொடர்பு மூன்றாவது காட்சியில் விரியும்போது வேகமெடுக்கிறது படம்.

எங்கும் தொய்வில்லாத காட்சியமைப்பு இருக்கை நுனியில் கொண்டு வந்து உட்கார வைக்கிறது. விக்ரம் உடலமைப்பிலும், உருவ அமைப்பிலும், முக பாவனைகளிலும் மிரட்டி எடுத்திருக்கிறார். வசனத்திலும் கஞ்சத்தனம் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் விக்ரம் கண்களாலேயே வசனம் பேசி நடித்திருக்கிறார்.

வாசுவாக அறிமுக நடிகர் அபிஹாசன். நாசரின் மகன் என்பது இன்னும் கூடுதல் பலம். நடிகர் கார்த்தியின் சாயலில் இருக்கிறார். நடிப்பிலும் பின்னியிருக்கிறார். வெல்கம் அபிஹாசன்!

அபிக்கு ஜோடியாக அக்சராஹாசன் என்றாள் கேட்கவேண்டுமா? போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். மீன்குஞ்சுகளுக்கு நீந்தவும் கற்றுத் தர வேண்டுமோ ? என்பது போல நாசரும், கமலும் மகிழ்ந்திருப்பார்கள். அக்சராவின் மீது விழும் அடிகள் ஒவ்வொன்றும் நம்மீது விழுவது போல ஒரு வலியை அக்சராவின் கண்கள் நமக்குக் கடத்துகிறது. அழகான நடிப்பு. போலீசின் கடும் துரத்தலின் மத்தியில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியைத் தேடி அலையும் அபியைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. ஆனாலும் கூடத்தான் விக்ரம் இருக்கிறாரே என்று ஆறுதல் அடையச் செய்திருக்கிறார் விக்ரம்.

போலீஸ் அதிகாரியாக மலையாள நடிகை லேனா இரண்டு மூன்று காட்சிகளில் வந்தாலும் திடீரென செத்துப் போவது மிகப்பெரிய சோகம். தன்னுடைய முகபாவனைகளாலேயே வசனம் பேசிவிடும் அளவுக்கு ஒர்த்தான மலையாளத் திரையுலகில் முக்கியமானவர் லேனா.

விறுவிறுப்பான கார் சேசிங், சண்டைக் காட்சிகள் என்று மலேசியா முழுவதையும் கழுகுக் கண்களால் சுற்றியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் மலேசியாவின் எல்லாப் பக்கங்களையும் காட்டிவிட முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறார். படம் பரபரவென நகர்கிறது.

லைட்டிங், ஸ்கிரீன் டிசைன் என்று படம் முழுவதுமே தன்னுடைய முந்தைய படமான தூங்காவனத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் இயக்குனர். ஒரு ரசிகன் தன்னுடைய இருக்கையிலிருந்து அமர்ந்து பாப்கார்ன் வாங்கச் செல்ல இடமளிக்காத இயக்குனர்தான் உண்மையில் திறமைசாலிகள். அதில் ராஜேஷ் ம செல்வாவுக்கு ஒரு இருக்கையை தாராளமாகக் கொடுத்து விடலாம்.

எடிட்டிங் நேர்த்தியாக இருப்பதும் படத்தின் ஓட்டத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. சண்டைக் காட்சிகளும் அருமையாக அமைத்திருக்கிறார்கள்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தோடு ஒன்றி ரசிகர்களை உட்கார வைக்கிறது. மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள். கிளைமாக்ஸில் பரபரப்பான காட்சிகளை திரைக்கதையில் வைத்துவிட்டதாலோ என்னவோ கொஞ்சம் சொதப்பல். ஊரே தேடிக்கொண்டிருக்கும் இரண்டு குற்றவாளிகள் போலீஸ் அதிகாரிகளைத் தாக்கித் தப்பித்துச் செல்வதை ‘தேமே’ என்று பார்த்துக் கொண்டு விட்டு, இறுதியில் முக்கியக் குற்றவாளிகள் பிடிபட்டவுடன், அத்தனை நேரமும் நாய்போல அலைய விட்ட, பொதுச் சொத்துக்களுக்குக் குந்தகம் விளைவித்து விட்டு ஓடித்திரிந்த குற்றவாளிகளுக்கு மெடல் கொடுத்து வீட்டுக்கு அனுப்பும் நற்பழக்கம் மலேசியப் போலீஸிடம் கிடையாது இயக்குனர் ஐயா! ‘ரோத்தாங்க்’ எனப்படும் சவுக்கடி குறித்துச் சொல்லியிருக்கலாம்.

அத்தனை பெரிய போலீஸ் ஸ்டேஷனில் விக்ரமும், அபியும் எளிதில் நுழைய முடியாது என்பதற்காக, அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் நிகழ்வு மாதிரி போலீஸ் ஸ்டேஷனில் அத்தனை பெரிய பெகளத்தை நிகழ்த்தியிருப்பது மிகப்பெரிய நகைச்சுவை. மாற்றி மாற்றி ஒருவரையொருவர் தூக்கித் தூக்கி வீசி விளையாடிக் கொள்கிறார்கள். தவிர்த்திருக்கலாம்! தமிழ்ப்படமாச்சே? என்ன செய்ய?

இன்னொரு கொசுறு தகவல் என்னவென்றால் ‘கேகே’ என்னும் விக்ரமின் முழுப்பெயர் கடாரம் கொண்டான் என்பது படத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த யாருக்கும் தெரியாது. ‘நூற்றி முப்பது ரூபாய் கொடுத்துப் படம் பார்த்த ரசிகர்களுக்கு மட்டும்தான் தெரியும்’ என்பதுதான் இயக்குனர் தங்களது ரசிகர்களுக்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சி.

எப்படியோ விறுவிறுப்பான படங்களில் ஒன்றாக சமகாலத்தில் வந்த படங்களில் கடாரம் கொண்டானையும் சேர்த்துக் கொள்ளலாம்.

0 Comments

Write A Comment