Tamil Sanjikai

ஜீவா தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேரோடு சேர்ந்து காட்டுக்குள் பயணிக்கும்போது அங்கே ஒரு ஆராய்ச்சிக் கூடம் இருக்கிறது. அங்கு இரண்டு டாக்டர்கள் ஒரு கொரில்லாவை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த கொரில்லா இரண்டு போகிறது. அந்த கொரில்லாவின் குட்டியை வைத்து ஆராய்ச்சியைத் தொடரலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்யும்போது, ஜீவா அந்த கொரில்லாக் குட்டியை அங்கிருந்து மீட்டு வந்து அதற்கு காங் என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள்.

கூட்டமான பஸ்ஸில் டிக்கெட் எடுக்கக் காசு தருகிறவர்களிடமிருந்து ஆட்டையைப் போட்டுவிட்டு பஸ்ஸில் இருந்து எஸ்கேப் ஆவது, மெடிக்கல் ஷாப்பில் வேலைசெய்துகொண்டே அங்கிருந்து மருந்துகளை திருடி வெளியில் போலி மருத்துவராக கிளினிக் நடத்துவது போன்ற தில்லாலங்கடி வேலைகள் செய்துவரும் ஜீவாவும் நண்பர்களும் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்கள்.

ஒரே ஒரு நிஜத் துப்பாக்கியும், மூன்று பொம்மைத் துப்பாக்கிகளும், நான்கு போலி டைம் பாம்களையும் வாடகைக்கு எடுத்துவிட்டு, ஹிந்துஸ்தான் வங்கி என்ற வங்கி ஒன்றில் புகுந்து அங்கு கொள்ளையடிக்க முயற்சி செய்யும் போது, காங் என்ற அந்தக் கொரில்லா எமெர்ஜென்சி அலர்ட் பட்டனை அழுத்தி போலீசை வர வைத்துவிடுகிறது. போலீஸ் வருகிறது. எப்படித் தப்பினார்கள் என்பது மிச்சக்கதை.

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கொரில்லா.

சிரிக்க வைக்கவேண்டும், அதேவேளையில் சீரியஸான ஒருவிஷயத்தைப் பற்றி பேசிவிடவேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார்கள். முதலில் காட்டுக்குள் இருக்கும் அந்த ரகசிய ஆராய்ச்சிக் கூடத்தைக் காண்பிப்பதால் படம் மருத்துவ ஆராய்ச்சி பற்றியதாக இருக்குமோ என்று பார்த்தால், அந்தக் கொரில்லாவை அறிமுகம் செய்வதற்குத்தான் அந்த காட்சி. அதிலும் காட்டுக்குள்ளே படப்பிடிப்பு , செட் போடுவது என்று செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் கிராஃபிக்சிலேயே சோலியை முடித்துவிடுகிறார்கள்.

அப்புறம் பார்த்தால் படம் ரிப்பீட்டட் காட்சிகளாலும், காமெடிகளாலும், காதலாலும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. காரில் போகிறார்கள், சரக்கடிக்கிறார்கள், கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். இதுவே ஒரு முக்கால் மணிநேரத்தைக் கடத்துகிறது. எது நிகழ்காலம்? எது கடந்த காலம்? என்பதை நாம்தான் யூகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நகைச்சுவைப் படம்தான் என்பதால் லாஜிக்கைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

வங்கிக் கொள்ளை பற்றிய படம் என்பதால் விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஆட்டோமேட்டிக்காக வந்து ஸ்க்ரிப்டில் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயம், விவசாயி, விவசாயக் கடன் பாரம், விவசாயிகள் தற்கொலை என்பது சமகால அரசியல் என்று நினைத்துக் கொண்டு இன்னும் எத்தனை திரைப்படங்கள் வருமோ தெரியவில்லை. யாருமே இந்தப் பிரச்சினையிலுள்ள தீவிரத்தை முழுமையாகக் கையாளாமல், பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளைக் கையைக் காட்டிக் கொண்டுதான் நிற்கிறார்கள்.

தன்னுடைய குடியிருப்பை நிறுவுவதற்காக இந்தப் புவியின் முதல் விளைநிலத்தை அழித்தவன்தான் இந்தப் பூமியின் முதல் அயோக்கியன். தன்னுடைய வீட்டிலுள்ள குப்பைகளைக் கழிவு நீர் ஓடைகளில் கொட்டி, அது போய் ஆற்றில் கடந்து பின்பு கடலில் கலப்பதை அறிந்தும் கூட கள்ளமவுனம் காப்பவனே இந்த உலகின் முதல் துரோகி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் இயக்குனர்களே ! இந்தப் பட்டியலில் அரசியல்வாதிகளின் பங்கு கொஞ்சம்தான், சாமாயனியர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

ஜீவா மற்றும் குழுவினர் வங்கிக்குள் புகுந்ததில் இருந்து படம் வேகமெடுக்கிறது. படம் வங்கிக்குள்ளேயே முடிந்துவிடும் அபாயம் இருக்கும் காரணத்தால் கதாநாயகியையும் வங்கிக்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள். காதாநாயகிக்கு கொஞ்சமே காட்சிகள்தான். யோகிபாபு வந்தவுடன் படம் இன்னும் கலகலப்பாகி விடுகிறது.

ஜீவாவின் தலைமுடியும், விவேக் பிரசன்னாவின் மீசையும் தலைமுடியும் ஒரு தொடர்ச்சியில்லாமல் காட்சிக்குக் காட்சி மாறுபடுகிறது. அதிலும் ஜீவா ஜிப்ஸி படத்தின் செட்டில் இருந்து கேப்பில் நடித்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என்பது புரிந்துபோகிறது.

படத்தில் ஹைலைட் அந்தக் கொரில்லாதான். அதன் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கிறது என்றாலும், அது துப்பாக்கிப் பிடிப்பது, இன்னோவா ஒட்டிக் கொண்டு வருவதெல்லாம் கொஞ்சம் ஓவர். சதீஷின் காமெடி எல்லா இடங்களிலும் சிரிப்பை வரவழைக்கவில்லை. மொட்டை ராஜேந்திரனுக்கு இரண்டு மூன்று சீன்கள்தான். ஏதோவொன்று நம்மை சிரிக்க வைப்பதை மட்டும் உணரமுடிகிறது என்ற வகையில் கொரில்லா நலம்.

இன்னொரு விஷயம் என்னவென்றால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, விவசாயிகள் மரணம், மெரீனா போராட்டங்கள் மாதிரியான மிகப்பெரிய விவாதங்களுக்குரிய விஷயங்களையெல்லாம் தொடர்ந்து நகைச்சுவைப் படங்களில் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் மிகவும் அபாயத்துக்குரியது என்பதுதான் உறுத்தும் உண்மை. இந்த விபரீதங்களை எல்லாம் சாமானியமாகக் கடந்து போய் விடுகிறோம் என்பதுதான் எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தடதட காட்சி நகர்வுகள், அடுத்தடுத்த கவுண்டர்கள் என்றெல்லாம் காட்சிகள் வைத்து நம்மை சிரிக்க வைத்திருந்தாலும் கூட ஏதோவொரு அரசியல் படுகொலையில் உயிரிழந்த ஒரு பாவப்பட்டவனின் பிணத்தின் மீது உட்கார்ந்து கொண்டு சிரிக்கிறோமோ என்ற உறுத்தல் இப்போதெல்லாம் எழுகிறது.

அதிலும் அந்தக் கடைசிக் காட்சியில் பணத்தை எடுத்து சாலையில் வீசி, கொள்ளைக்காரர்களை அதுவரைக்கும் ஆதரித்த தமிழக மக்களும், இளைஞர்களும் அதைப் பொறுக்கியெடுப்பதாகவும், அந்த சந்தர்ப்பத்தை வைத்துக் கொண்டு ஜீவா மற்றும் குழுவினர் தப்பிப்பதற்காக வைத்திருக்கும் காட்சிகளும் கொஞ்சம் கூடுதல் எகத்தாளம். தமிழர் என்றொரு இனமுண்டு ! தனியே அதற்கொரு குணமுண்டு! என்பதில் இந்தக் காட்சிகளை சேர்த்துக் கொள்ளவே முடியாது என்பதைப் படக்குழுவினருக்குத் தெரியப் படுத்துவது அவசியம்.

சிரிக்கவேண்டும் என்று முடிவு செய்தால் ஒருமுறை மட்டுமல்ல, இரண்டு மூன்று முறைகள் கூட கொரில்லாவை ரசிக்கலாம்.

0 Comments

Write A Comment