Tamil Sanjikai

அப்பா, அம்மா, இரண்டு மகன்கள், ஒரு மகள் அடங்கிய ஒரு குடும்பம். மூத்த பதின்ம வயதில் தன்னுடைய காதலியை விபத்தொன்றில் சாகக் கொடுத்த மூத்த மகன் திருமால் விரக்தியில் வீட்டை விட்டுச் செல்கிறான். இளைய மகன் ரகு தன்னுடைய கல்லூரி வளாகத்தில் நடக்கும் சினிமா படப்பிடிப்பைக் காணச் செல்லும்போது அந்தப் படத்தின் கதாநாயகி லேகாவைச் சந்திக்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பார்க்கும்போதில் ஒரு பரவசம் பற்றிக் கொள்கிறது.

பெற்றோரை இழந்து லேகா அனாதை இல்லத்தில் படிக்கும்போது அவளது படிப்புச் செலவுக்கு பண உதவி செய்த குபேரனின் வற்புறுத்தலுக்கு பணிந்து அந்தப் படத்தில் அவள் நடிப்பது ராகுவுக்குத் தெரிய வருகிறது. நாளடைவில் இருவருக்குமிடையில் காதல் வரவே, ரகு லேகாவைக் கூட்டிக் கொண்டு தன்னுடைய ஊரான பொள்ளாச்சிக்கு வருகிறான். ஒருசில நாட்களில் குபேரன் தன்னுடைய ஆட்களைக் கூட்டிக் கொண்டு ரகுவின் வீட்டிற்கு வந்து மிரட்டவே, “ஐந்து நாட்களில் என்னை வந்து கூட்டிப் போ!” என்று ரகுவிடம் சொல்லிவிட்டு லேகா குபேரனோடு செல்கிறாள்.

ஐந்து நாள் கழித்து லேகாவைத் தேடி குபேரனின் முன்பாகப் போய் நிற்கும் ரகுவிடம், “லேகாவைப் பார்க்க வேண்டுமெனில் அவள் நடித்த படம் சத்யம் தியேட்டரில் இன்று ரிலீஸ் ஆகிறது! போய்ப் படத்தில் பார்! என்று சொல்லி அனுப்பி வைக்கிறான். லேகாவையும் தொடர்பு கொள்ள முடியாமல் ரகு ஊர் திரும்புகிறான். லேகா தொடர்ச்சியாக ஐந்து படங்கள் நடித்திருக்கும் நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து லேகாவிடம் இருந்து ரகுவுக்கு ஒரு போன்கால் வருகிறது. அதில் லேகா, தான் ரகுவின் அண்ணன் திருவிடம் மும்பையில் இருப்பதாகவும், திருவின் உயிருக்கு ஆபத்து என்றும் சொல்லி, தங்களைக் காப்பாற்ற மும்பைக்கு வருமாறும் சொல்ல ரகு மும்பைக்குப் பயணிக்கிறான்.

மும்பையில் போய்ப் பார்த்தால் அங்கு திரு அசிஸ்டெண்ட் கமிஷனராக அண்டர் கவர் ஆப்பரேஷனில் இருப்பதாகவும், ஒரு மிகப்பெரிய சிக்கலில் மாட்டி திருவை போலீசும், மாஃபியா கும்பலும் மாறி மாறித் தேடிக் கொண்டிருப்பதுமான செய்தியறிந்து அதிர்ச்சி அடைகிறான். ரகு தான் அண்ணன் திருவைக் காப்பாற்றினானா? லேகாவை மீட்டானா? என்பது பரபரப்பும், விறுவிறுப்பும் அனல் பறக்க சொல்லியிருக்க வேண்டிய படம். ஆனால் படம் மின்னலேவில், காக்க காக்காவில், வேட்டையாடு விளையாடுவோடு நின்று போன கவுதம் வாசுதேவ் மேனனின் கதை சொல்லும் பாணியில் இருந்து விலகி விக்கித்து பாதியில் நிற்கிறது.

வழக்கமான வாய்ஸ் ஓவர் பாணியில் கதை சொல்லல் யுக்திதான் இதிலும். தனுஷின் கோணத்தில், குரலில் கதையானது நிகழ்காலத்துக்கும், கடந்த காலத்துக்குமிடையில் பயணிக்கிறது. அடுத்த காட்சி என்ன என்பதைச் சொல்லிவிட்டு, அந்த சம்பவத்தின் துவக்கத்திலிருந்து கதை சொல்லும் பாங்கில் ஓரளவு இயக்குனர் ஜெயித்திருக்கிறார். ஆடியன்சுக்குப் புரிகிறது. இயக்குனரின் முதல் படமான மின்னலேவுக்கும், காக்க காக்கவுக்கும் இடையில் இருந்த அந்த மிகப்பெரிய வித்தியாசம் அடுத்தடுத்த படங்களில் ஒரே தண்டவாளத்தில் இறங்கி ஓடிய ரயிலைப் போல ஆகிவிட்டது. ஆனாலும் அந்தப் படங்களில் இருந்த ஒரு மேஜிக் இதில் இல்லை.

இடைவேளை வரைக்கும் இருந்த அழகும், காதலும், கதை சொல்லலும் இடைவேளைக்குப் பின்பு மிஸ்ஸிங். தனுஷை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் என்பதில் எந்த அச்சத்தையும் தனுஷ் தரவில்லை. தான் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதை தனுஷ் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். காதல் காட்சிகளில் நெருக்கம், சோகக்காட்சிகளில் உருக்கம், வசனக்காட்சிகளில் சுருக்கம் என நிறைவு.

மேகா ஆகாஷ் அழகான நடிகை. விருப்பமில்லாமல் ஒரு படத்தில் நடிப்பதிலும், பெரிய வில்லன்களின் கையில் சிக்கி துடிப்பதிலும், தனுஷின் உதடுகளைக் கடிப்பதிலும், துயரத்தில் கண்ணீர் வடிப்பதிலும் ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

வேல.ராமமூர்த்தியை வீணடித்திருக்கிறார்கள். சசிகுமார் வழக்கம் போல உதடுகடிக்காமல் சன்னமாக இங்க்லீஸ் பேசி நடித்திருக்கிறார். பாவம் நடுரோட்டில் குண்டடி பட்டு செத்துப் போகிறார்.

வில்லன் கதாபாத்திரம் உண்மையில் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு முதல் பாடவேளை கணித ஆசிரியர் தோற்றத்தில் இருக்கும் செந்தில் வீராச்சாமி கலக்குகிறார். குபேரனாக பெயரளவில் இருக்கும் அவர் ஒவ்வொரு காட்சியிலும் வேறு வேறு பரிணாமங்களில் மிளிர்வதைப் பார்த்து அதிசயித்துத்தான் போக வேண்டியிருக்கிறது. இவர் யார் தெரிமா ? இவர் ஒரு ப்ரோடியூசர், இவர் ஒரு டைரக்டர், இவர் ஒரு பாவப்பட்ட பெண்ணைப் படிக்க வைத்த உத்தமர், கெட்ட வார்த்தைகள் அதிகமாகப் பேசும் ஒரு ரவுடி, ஒருத்தியை நடிக்க வைக்க தன்னுடைய மனைவியையும், மகனையும் வெளுக்கும் ஒரு சைக்கோ, இவர் ஒரு டான், இவர் ஒரு ஆயுத யாவாரி, இவர் ஒரு ஸ்த்ரீ லோலன், இவர் ஒரு டீ விற்பவர், கடைசிக்காட்சியில் மார்பில் தோட்டாவை உள்வாங்கி செத்துப் போன பிணம் என்று ஒரே ஆளுக்கு பல்வேறு கதாபாத்திரங்கள் என்று ஆடியன்ஸை வாய் பிளக்க வைக்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த ’மறுவார்த்தை பேசாதே’ பாடலை ஆல்ப்ஸ் மலையிலும், டூலிப் தோட்டங்களிலும், நயாகரா நீர்வீழ்ச்சியிலும், ஐரோப்பியத் தெருக்களிலும் படமாக்கியிருப்பார்கள் என்று நினைத்தால் கே.ஆர். விஜயாவைக் கட்டிப் பிடித்து அழும் சிவாஜி கணேசனைப் போல மேகா ஆகாஷை மடியில் கிடத்தி ஒரு வரிவிடாமல் தனுஷ் லிப் மூமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுவும் போதாதென்று உப்பளத்தில் திரியும் ஆவி போல உப்புக் குவியலில் மேகா ஆகாஷை கிடத்தி சுத்தி சுத்தி ஆடுகிறார்.

கவுதம் மேனனால் வன்முறை இல்லாமல் ஒரு காதல் படம் எடுக்க முடியாதோ என்று அசூகையாக இருக்கிறது. நல்லவேளை இதில் கேமியோவாக வந்து, ஐ ஆம் கவ்த்தம் ! அண்டர்கவர் ஆப்பிசர்! டிப்பாட்மெண்ட் ஆஃப் பாரென்ஸிக்! என்று சொல்லாமல் விட்டார். ஒரு நல்ல ரிச்சான இயக்குனரை இழந்து விடுவோமோ என்று அச்சமாக இருக்கிறது. இயக்குனர் ஐயா! உங்களது அடுத்தடுத்த படங்களில் டிசிபி ராகவனோ, டிசிபி திருவோ, டிசிபி சத்யதேவோ, டிசிபி ரஜினிகாந்த் முரளிதரனோ, ரிவால்வர் ரிச்சர்டோ, கமாண்டோ வீரபாகுவோ, லெப்டினேண்ட் சூரிய கிருஷ்ணனோ தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே தமிழ் உலகுக்கு நீங்கள் செய்யும் கொடையாக இருக்கும்.

ரீனா ஜோசப்பும், ஆராதனாவும், கல்யாணியும், மாலினி கிருஷ்ணனும், மேக்னாவும், ஜெஸ்ஸி தெக்கேகுத்துவும், நித்தியா வாசுதேவனும், ஹேமானிக்காவும், தேன்மொழியும், எலிசபெத் லிசாவும், லீலா ராமனும், கூடவே லேகாவும் வாழ்வாங்கு வாழட்டும்.

டர்புக்கா சிவா அடக்கி வாசித்திருக்கிறார். எல்லாத்துறையினரும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இடைவேளை வரைக்கும் படம் மெதுவாகப் போனாலும் நன்றாக இருக்கிறது. இடைவேளைக்குப் தியேட்டருக்குள் ஒருவித மந்த நிலை நிலவுவதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

தனுஷுக்கும் மேகா ஆகாஷுக்கும் வசனமே இல்லை. இருவரது உதடுகளும் பெரும்பான்மையான நேரங்களில் ஒட்டியேயிருப்பதால் வசனம் தேவையில்லை என்று வசனகர்த்தா நினைத்திருக்கலாம். வழக்கம் போல ங்ஙோ, ங்கொம்மாக்களுக்கு குறைவில்லை. காதல் வசனங்கள் சூப்பர், ‘உன்னோட கழுத்துலயே ஆறு மாசம் வாழ்ந்து இருக்கேன்’, தொட்டுப் பார்ரா! மற்றும் “நீ என்னிய சுட்ட? ஆனா நீ செத்துக் கெடக்க! பாத்தியா? இதான் விதிங்குறது!” இப்படி நிறைய சொல்லலாம். தனித்தனியா பாத்தா படம் ஒரு ஹைக்கூ! மொத்தமா பாக்கும்போது படம் இந்த விமர்சனக் கட்டுரை மாதிரியே அகோரமா இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

முற்பாதியில் தனுஷை நோக்கி வரும் தோட்டா, பிற்பாதில் ஆடியன்ஸை நோக்கி வருகிறது. ஆக மொத்தம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ எகனாமிகல் வீக்கர் செக்ஷனுக்கு வழங்கப்பட்ட கோட்டா!

0 Comments

Write A Comment