Tamil Sanjikai

எமலோகத்தில் இருக்கும் மரணத்தின் கடவுளான எமனுக்கு வயதாகி விட்டதால் புதிய எமதர்மனை நியமிக்க முடிவெடுக்கிறார். அவரது மனைவி அய்யோ கொடுக்கும் நெருக்கடியின் நிமித்தம் வாரிசு அரசியல் செய்யும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார் எமதர்மராஜா. திருவள்ளுவரின் பள்ளியில் எமன் கோட்டாவில் போய்ப் படிக்கும் தனது மகனை அடுத்த எமனாக நியமிக்கிறார் அப்பா எமன்.

தன்னைத்தான் அடுத்த எமனாக நியமிப்பார் என நம்பியிருந்த சித்திரகுப்தனுக்கு இந்த நியமனம் அதிர்ச்சியைத் தருகிறது. சித்திரகுப்தன் சிவபெருமானிடம் சென்று முறையிடுகிறான். அப்போது சிவபெருமான், நாற்பத்தெட்டு மண்டலத்துக்கு புது எமன் அறிவுள்ளவனாக செயல்பட்டால் அவனை யாராலும் அசைக்க முடியாது எனவும், அப்படியில்லாத பட்சத்தில் அவனை அரியணையில் இருந்து இறக்கி விட்டுவிட்டு வேறொரு ஆளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று சொல்கிறார்.

சித்திரகுப்தன் தன்னுடைய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களை விசாரிக்கவே அவர்கள் ராஜதந்திரியான சோ.ரங்குசாமி என்பவரின் ஆத்மாவை அழைத்து ஆலோசனை கேட்கச் சொல்கிறார்கள். சோ'வின் ஆலோசனைப்படி ஒருசில ஐடியாக்கள் தோல்வியடைய இறுதியில் உள்ள ஐடியா செயல்படுகிறது. சித்திரகுப்தன் பூமிக்கு வந்து மரணக் கணக்கில் கொஞ்சம் குளறுபடிகள் செய்தால் எமதர்மனின் வேலைக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று தீர்மானம் ஆகிறது.

சித்திரகுப்தனைத் தொடர்ந்து எமதர்மனும் பூமிக்கு வரவே , விபத்தில் சிக்கி சாகவிருந்த ஒரு சிறுமியை எமன் காப்பாற்றுகிறார். இது எமதர்மனின் தர்மத்துக்கு எதிரானது என்றும், அந்த சிறுமியைத் தொடர்ந்து சாகவிருந்த அரக்கன் ஒருவனும் எமனால் தப்பினான் என்றும் சிவபெருமான் கோபமடைகிறார். மேலும் ஏழு மண்டலங்களுக்குள் அந்த அரக்கனைக் கொல்லுமாறும், இல்லாவிட்டால் எமலோகத்தை அழித்து, புது எமலோகத்தைப் படைப்பதாகவும் சொல்லிவிட்டு போய்விடுகிறார் சிவபெருமான். எமலோகம் என்னவானது என்பதுதான் மிச்சக்கதை.

படத்தின் துவக்கத்திலேயே அமைச்சர் வயலூர் ராஜு என்பவரது வீட்டின் முகப்பைக் காட்டுகிறார்கள். அந்த வீட்டிற்குள் சிலைகள் எடுத்துவரப்படுகின்றன. அமைச்சரின் மனைவி, இந்த சிலையெல்லாம் எங்கிருந்து வருது ? எனக்கேட்கவே, அதற்கு அமைச்சர், மியூசியத்துக்குப் போயிருந்தேன்! இந்த சிலையெல்லாம் அனாதையாக் கிடந்தது! அதனால் ஆதரவு கொடுத்தேன்! என்று பதிலளிக்கிறார்.

அப்போது டீவியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த செய்தியைத் தொடர்ந்து அமைச்சருக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் அமைச்சர் பேசுகிறார்,

ஆமா நான்தான் சுடச் சொன்னேன்! எல்லாத்துக்கும் போராடுனா அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்! மேலிடத்து அதிகாரத்துல இருந்தா எமனே என்னய கண்டு பயப்புடுவான்!

என்று சொல்ல எருமையின் தலை போன்ற சிலையைச் சுமந்து சென்ற ஆளது கைதவறி, வெண்கலச் சிலை மாடியிலிருந்து அமைச்சரின் மண்டையின் மீது விழுவதையடுத்து ரகளையாக டைட்டில் கார்டு போடுகிறார்கள்.

எமலோகம் சென்று தனக்கான தண்டனையை வாங்கிக் கொண்டு செல்லும் அமைச்சர் எமனிடம்,

இனிமே எமலோகத்துல உள்ள நீர்நிலையெல்லாம் வற்றாம நா பாத்துக்குறேன்! ஃபுல்லா தேர்மாகோல் போட்டு மூடிறலாம்! என்று சொல்கிறார். இப்போது புரிந்திருக்குமே கதையின் போக்கு!

எமன், சித்திரகுப்தன், சிவபெருமான், முருகன், விநாயகர் முதற்கொண்டு ரஜினி, நித்தியானந்தா, திமுக, அதிமுக கும்பல்கள் வரைக்கும் கலாய்த்திருக்கிறார்கள். யாரையும் விட்டுவைக்கவில்லை. ஆனாலும் டைரக்டர் ஒரு அதிபுத்திசாலி. சிவனாக மொட்டை ராஜேந்திரனையும், எமனாக யோகி பாபுவையும் நடிக்க வைத்ததிலிருந்து, கருணாநிதியும், ஜெயலலிதாவும் சொர்க்கத்தில் நின்று கொண்டு பரஸ்பரம் பேசிக்கொள்வது போல காட்டி பேலன்சிங் ஆக நடந்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு வசனமும் தெறிக்கிறது. அரசியல்வாதிகள் துவங்கி தனிமனிதத் தவறுகள் வரைக்கும் வஞ்சனையில்லாமல் வெளுத்திருக்கிறார்கள். பிரியாணிக் கடைக்காரனுக்காக தான் பெற்ற பிள்ளைகளைக் கொன்ற பெண் முதல், ஹெல்மெட் போடாத தம்பதியை காலால் எட்டி உதைத்த போலீஸ்காரர் என்று பட்டியல் நீளம். அதிலும் கடவுள் மீதான மூட நம்பிக்கைகளைக் கடவுளின் வாயாலேயே எகத்தாளம் பண்ணியிருப்பதில் இயக்குனரின் சாமார்த்தியம் பளிச்சிடுகிறது. அதிலும் அந்தப் பாம்பு வந்து, தன் புற்றின் மீது பாலை ஊற்றி, தனது பத்து குட்டிகளை கொன்றதால் அந்தப் பெண்ணைக் கொன்றதாக வைக்கும் வாக்குமூலமும், அதன் குரலும் அசாத்தியம். தியேட்டரில் வெடித்துச் சிரிக்கிறார்கள்.

ஒரே மாதிரியான இடத்தில் நாடகத்தன்மையோடு நகரும் படத்தில் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யோகிபாபுவின் டயலாக் டெலிவரி பறக்கிறது. வசனங்களும் அருமை.

முதலில் எமதர்மனுக்கு ஒரு மகனையும், மனைவியையும் கற்பனை செய்ததே பெரிய காமெடி. அதிலும் அம்பேத்கர், பெரியார், நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் மற்றும் காந்தியை அழைத்து எமதர்மன் அவசரக் கூட்டம் நடத்துவதெல்லாம் காமெடியைத் தாண்டிய காம்ரெட் காட்சிகள்.

இயக்குனருக்கு என்ன கோபமோ? சோ.ராமசாமி கதாபாத்திரத்தை சோ.ரங்குசாமியாக மாற்றி உலவ விட்டிருப்பதும், தப்பும் தவறுமான ஐடியாக்களை சித்திரகுப்தனுக்குக் கொடுத்து தவறுக்குத் துணை நிற்பதும், சித்திரகுப்தனும் சோ.ரங்குநாதனும் ஒரே சாதியினர் என்று சொல்லி, அதையே பெரியார் சித்திரகுப்தனைப் பார்த்து, இந்த வந்தேறிப் பயலுக்கு இங்கேன்ன வேலை? வெங்காயம்! என்று சொல்வது போல காட்சியமைத்திருப்பது எல்லாம் அக்மார்க் காமெடி.

சாதி மதங்களின் மீதான செருப்படி படம் முழுவதுமே தொடர்ந்தாலும் கூட நாத்திகர்கள் முதற்கொண்டு ஆத்திகர்கள் வரைக்கும் ரசிக்கலாம். அதை டைட்டில் கார்டிலேயே போடுகிறார்கள். ''இப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்துவதல்ல! அதையும் மீறி புண்பட்டால் அது அவர்களின் குற்றவுணர்ச்சியே ஆகும் '' என்று!

ஹாஸ்யமே ஆனாலும் ஒரு பெருங்கோபத்தோடுதான் திரைக்கதை அமைத்திருப்பார்கள் போல... முதல் காட்சியிலிருந்து எண்டு கார்டு வரை ப்ளூப்பர்ஸ் வரைக்கும் உட்கார்ந்து பார்க்கலாம். தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது என்பதால் ஒரு பத்து சதவீதத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன். மிச்சத்தை வெள்ளித்திரையில் காணுங்கள்.

படமே கூர்மையாக இருப்பதால் மற்ற டெக்னிக்கல் விஷயங்களின் மீதான விவரணைகள் தேவையில்லாத ஒன்று.

தர்மபிரபு சிரிப்பால் கொல்கிறார்.

0 Comments

Write A Comment