Tamil Sanjikai

தேவ் , விக்னேஷ் , நிஷா மூவரும் பள்ளிக்காலத்திலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். கல்லூரிக் காலத்திலும் சேர்ந்தே படித்து மேற்படிப்புக்காக உக்ரைன் சென்று கல்வி கற்கிறார்கள்.

பெரிய தொழிலதிபரின் ஒரே மகனான தேவ் ஒரு யாத்ரீகன். ஊர் சுற்றுவது, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு இருப்பது என்று அவனுடைய உலகம் தனியானது. தேவின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது. அவன் எங்கு போனாலும் தன்னுடைய நண்பர்களோடே போகிறான். இதனால் சலிப்படையும் விக்னேஷ் தேவுக்கு ஒரு காதலி வந்துவிட்டால் தாங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி முகநூலில் இருக்கும் மேக்னா என்ற பெண்ணை கோர்த்துவிடுகிறான். மேக்னாவைப் பார்த்ததும் காதலில் விழும் தேவ் அவள் ஒரு பெரிய தொழிலதிபர் என்பதையும் மேக்னா அமெரிக்காவில் இருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொள்கிறான். மேக்னா ஒரு கறார் பேர்வழி, தானுண்டு தன்னுடைய பிஸினஸ் உண்டு என்று இருப்பவள்.

தேவ் மற்றும் நண்பர்கள் படிப்பு முடிந்து இந்தியா வருகிறார்கள். ஒருநாள் நிஷா ஏர்போர்ட்டில் வைத்து மேக்னாவைப் பார்த்து வியந்து தேவுக்கு போன் செய்கிறாள். தேவ் மேக்னாவைத் தேடிப் போகிறான்.

பிறக்கும் போதே தன்னுடைய அம்மாவை இழந்த தேவும், தன்னையும், தன்னுடைய அம்மாவையும் நடுத்தெருவில் அம்போவென விட்டுச் சென்ற அப்பாவின் மேலும் சக ஆண்களை வெறுக்கும் மேக்னாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். தேவும், நண்பர்களும் மேக்னாவைப் பின்தொடர மேக்னா கோபம் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் தேவின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டு தன்னைவிட்டுப் பிரியவே கூடாது என்ற நிபந்தனையை வைக்கிறாள். அப்படி இருக்கும்போது ஒருநாள் தேவ் ஒரு வேலை விஷயமாக பிஸியாக இருக்கிறான், அப்போது மேக்னா ஒரு மீட்டிங்குக்காக மும்பை செல்கிறாள். பிஸியாக இருக்கும் தேவ் தன்னுடன் ஐந்து நாட்கள் சரியாகப் பேசவில்லை என்று சண்டையிட்டு பிரிந்து மேக்னா அமெரிக்கா திரும்புகிறாள். அவளைத் தேடி வரும் தேவ் ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கி மீண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது பனிப்புயலில் மாட்டி ஜீவ மரணப்போராட்டம் நடக்கிறது. மேக்னா தேவை சந்தித்தாளா ? தேவ் உயிர் பிழைத்தானா என்பது மிச்சக்கதை.

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி சிவகுமார், ரகுல் பிரீத் சிங் , பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வி.ஜே.விக்னேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தேவ். போராட்டங்கள், சாதீய வன்முறைகள், ஹீரோயிசம், சர்ச்சைகள் என்று வளவளவென படங்கள் வெளியான சூழலில் சமீப காலத்தில் வெளியான அருமையான காதல் படம்.

வி.ஜே.விக்னேஷின் பார்வையில் படம் Voice narration ல் சொல்லப் படுகிறது. தேவாக கார்த்தி நடித்திருக்கிறார். பிறக்கும்போதே தாயை இழந்து தகப்பனின் அரவணைப்பில் வளரும் கார்த்திக்கு தன் தாயின் தொப்புள் கொடியை கழுத்தில் அணிந்து கொண்டு ரகுல் பிரீத் சிங்கோடு காதல் செய்யும் கதாபாத்திரம். மிகவும் பாஸிட்டிவான ரோல். அந்தக் கதாபாத்திரத்துக்கான சிறப்புத் தேர்வு. அழகாக இருக்கிறார். நடனக் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் நேர்த்தி.

மேக்னாவாக ரகுல் பிரீத் சிங் பிரமாதப் படுத்தியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கான மிடுக்கோடு தெனாவட்டாக வந்து போகிறார். அந்த பொசசிவ்நெஸ் கேரக்டருக்குக் கச்சிதம். முதலில் முறைப்பதும், பின்பு காதலாகி கசிந்துருகி, கார்த்தியோடு சண்டையிட்டுப் பிரிவதுமாக நல்ல நடிப்பு.

வி.ஜே.விக்னேஷ் கலகலப்பூட்டுகிறார். நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். நண்பர்களில் குழுவில் ஒருவராக வரும் அம்ருதா ஸ்ரீனிவாசன் அழகு, நன்றாக நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜுக்கு அவ்வளவாக வேலையில்லை. ரம்யா கிருஷ்ணனும் கூட அளவாகவே பயன்பட்டிருக்கிறார்.

இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இளைஞர். ஆகையால் காதல் உணர்வை அருமையாகக் கையாண்டிருக்கிறார். ஆண் , பெண் இடையிலான காதல் உணர்வுகள், ஈகோ, பொசஸிவ்நெஸ், சண்டைகள் என்று ஒரு மெல்லிய காதல் உணர்வை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. படம் தொய்வின்றிப் பயணிக்கிறது. கிராஃபிக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அத்தனை அடிவாங்கிய நிலையிலும் கயிறோ, எந்தப் பிடிமானமோ இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஒருவரால் ஏற முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. ரொம்ப ரிச்சான காட்சியமைப்புகளும், இயல்பான அந்த காதலும் ஊடுருவியுள்ள படமாக இருந்தாலும்கூட சண்டைக்காட்சிகளும், இந்த கிளைமாக்ஸ் காட்சியும் கொஞ்சம் துருத்திக் கொண்டுதானிருக்கிறது. வாழ்த்துக்கள் ரஜத் !

ஹாரிஸ் ஜெயராஜ் கொஞ்சம் ஏமாற்றியது போலத் தோன்றுகிறது. அணங்கே சிணுங்கலாமா பாடல் துள்ளல், மீதிப்பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் ஜீவனில்லை. என்னாச்சி ஹாரிஸ் ?

ஒளிப்பதிவு அழகு. உக்ரைனின் அழகை அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகு. சண்டைக்காட்சிகளில் கேமரா நன்றாக வேலை செய்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உழைப்பு வீணாகவில்லை.

அன்பறிவ் மாஸ்டரின் முயற்சியில் சண்டைக்காட்சிகள் அனல் பறக்கின்றன. எடிட்டர் ரூபன் காட்சிகளை சரியாக செலுத்தியிருக்கிறார். கலை இயக்குனர் ராஜீவன் ஒவ்வொரு காட்சிகளையும் செம்மையாகச் செய்திருக்கிறார். உடையலங்காரம் அருமை. மேக்னாவின் உடைகள் சிறப்பு.

மொத்தத்தில் தேவ் காதலர் தினத்து காதல் ரோஜாப் பூச்செண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

0 Comments

Write A Comment