Tamil Sanjikai

சைதன்யா எனும் பாபி, அபர்ணா தேவி எனும் லில்லி ஆகிய இருவருக்கும் நிகழும் காதல்தான் படத்தின் கதை என்றாலும்கூட அதுதான் ஒட்டுமொத்தக் கதை என்று சொல்லிவிட முடியாது. தூத்துக்குடியிலுள்ள கல்லூரியில் படிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் மாணவன் பாபி. யாருக்காவது ஒரு பிரச்சினை என்று குரல் கொடுத்தால் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து களத்தில் இருப்பவன். தொடர் போராட்டங்களில் வாயிலாக பல்வேறு தொல்லைகள் வந்து சேர்கிறது.

அப்படியொரு நாள் சக மாணவி ஒருத்தியை லோக்கல் எம்.எல்.ஏவின் தம்பி தொல்லை கொடுக்கவும் பாபி அவனைப் போட்டு வெளுக்கிறான். பகை மூள்கிறது. எதற்காகவும் தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காத பாபியை சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். அவன் மறுத்து விடுகிறான்.

இடையில் தன்னுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் குடும்பத்துக்கு, தன்னுடைய அக்காவின் திருமணத்திற்காக வந்து சேரும் பால்ய காலத்து சிநேகிதி லில்லியைச் சந்திக்கிறான் பாபி. அவள் ஒரு கிரிக்கெட் வீராங்கனை. ஒரு கட்டத்தில் அவள் மீது காதல் வந்து விடுகிறது. முதலில் மறுத்து பின்பு ஏற்றுக் கொள்கிறாள் லில்லி. பாபியின் மூர்க்க குணத்தால் லில்லிக்கும் பாபிக்குமிடையில் சிறுசிறு வாக்குவாதங்கள் வருகின்றன.

மீண்டுமொருமுறை எம்.எல்.ஏவின் தம்பி பிரச்சினை செய்யவே பாபி அவனைத்துரத்த அவன் லாரியில் அடிபடுகிறான். எம்.எல்.ஏ பாபியைக் கொல்ல கூலிப்படையை ஏவி பாபியைக் கொலை செய்ய முற்படுகிறது. லில்லி அவனை விட்டுவிடுமாறு கெஞ்சிக் கேட்க குற்றுயிரும், குலையுயிருமாகப் போட்டுவிட்டுச் செல்கிறார்கள். மருத்துவமனையில் உயிர்பிழைக்கும் பாபியிடம் இந்த கோபத்தை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள் லில்லி. கோபத்தில் அவளைத் துரத்திவிடுகிறான் பாபி. இதில் மனமுடைந்த லில்லி பாபியை வெறுத்து ஒதுங்கிக் கொள்கிறாள்.

பாபி தொடர்ந்து லில்லியை தொடர்பு கொள்ளவே அவள் இவனைச் சந்திக்க மறுத்துவிடுகிறாள். இதனால் மனமுடைந்த பாபி மூன்று வருடங்களாக வீட்டிற்கே வராமல் காஷ்மீர், லடாக் என்று ஊர் சுற்றி, ஒலி தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்கிறான். இயற்கையிலிருந்து வரும் ஒலி அவனை ஆற்றுப் படுத்துகிறது. ஒரு கட்டத்தில் மருத்துவமனை ஒன்றிற்கு வரும் பாபி லில்லியின் அக்காவின் வாயிலாக லில்லி ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் புத்தி தெளியாமல் கிடப்பது தெரியவரவே விக்கித்து நிற்கிறான். அங்கே அவளை கட்டிப் போட்டிருப்பது கண்டு கலங்கி அங்கிருந்து அவளைக் கடத்திச் செல்கிறான். அவளுக்கு பழைய நியாபகங்களை வரத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

கிரிக்கெட்தான் தன்னுடைய எதிர்காலம் என்று இருந்த லில்லி அந்த விபத்திற்குப் பின்னர் கிரிக்கெட் என்றாலே அலறுகிறாள். ஒரு கட்டத்தில் லில்லிக்கு நடந்த அந்த விபத்தின் பின்னால் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி இருக்கிறது. அதை வெளியுலகிற்குக் கொண்டு வர பாபி எடுக்கும் முடிவானது லில்லியை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது. லில்லி மீண்டாளா ? பாபி என்னவானான் ? அந்த விபத்தின் பின்னணி என்ன ? என்பது மிச்சக்கதை.

இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவாரகொண்டா, ரஷ்மிகா மாண்டானா, ஸ்ருதி ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் டியர் காம்ரேட். படத்தின் பெயரில் காம்ரேட் என்று இருப்பதால் கம்மியுனிச சித்தாந்தம்தான் படத்தின் அடிப்படை கிரகிக்க முடிகிறது. ‘உன்னுடைய உரிமைக்காக நீ போராடியே ஆகவேண்டும்!’ என்று சொல்கிறான் கதாநாயகன். படத்தின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் ஹீரோயிசமாகப் போகிறது. பாபியாக விஜய் தேவாரகொண்டா நிறைவான நடிப்பு. கோபத்தில் பொங்கி எழுவதும், காதலில் கசிந்துருகுவதுமாக நடிப்பில் நாள் முதிர்ச்சி.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ என்றொரு படம் வெளிவந்தது. லைட்டிங், கலர் மற்றும் துல்கரின் முக அமைப்பைக் கொண்ட விஜய் தேவார கொண்டா என்று அந்தப் பாதிப்பில் இந்தப்படம் நமக்குத் தெரிந்தாலும் கூட இதன் கதை வேறு. கதாநாயகியாக ரஷ்மிகா மாண்டானா பேரழகு மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காதலிப்பதாகட்டும், இயலாமையில் குமுறுவதாகட்டும் என்று சிக்சர் அடிக்கிறார். தன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லும் பாபியிடம், “நீ வேறு ! நான் வேறு ! உன் பாதை வேறு ! என் பாதை வேறு!” என்று தீர்க்கமாகச் சொல்லும் பெண் அந்த விபத்துக்குப் பின்னால் தனக்கிருக்கும் மன உளைச்சலின் வெளிப்பாடு எப்படி இருக்கிறது என்பதைத் தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள் ரஷ்மிகா ! தமிழ்த் திரைத்துறையில் ஒரு பெரிய சிவப்புக் கம்பளம் காத்திருக்கிறது.

லில்லியின் அக்காவாக வரும் ஸ்ருதி ராமச்சந்திரன்தான் இயக்குனரின் மிகப்பெரிய ரசனை. கதாநாயகியாக நடிக்க வைக்க என்ன தயக்கமோ ? கதாநாயகன் முதலின் லில்லியின் அக்காவுக்கு லவ் லெட்டர் கொடுத்திருப்பதாக ஒரு ஒன்லைனை செருக்கியிருக்கிறார். ஸ்ருதி ராமச்சந்திரன் அத்தனை அழகு ! கண்கள் , கன்னக்குழிகள் , அழகான பல்வரிசை என்று அம்சமான நடிகை.

‘கல்லூரிக் கட்டண உயர்வீனால் அனிதா தற்கொலை முயற்சி’ மற்றும் ‘அனிதா தன்னுடைய சொந்த பிரச்சினைக்காகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்’ என்ற ஒன்றை அனிதா எனும் பெண் கதாபாத்திரத்தில் நிறுவ முயற்சித்திருப்பது அத்தனை ஆரோக்கியமானதா என்பதுதான் புரியவில்லை. நிஜத்தில் இந்தக் காட்சியைக் காணும் பார்வையாளனுக்கு ‘நீட் தேர்வு சம்பந்தமாக தற்கொலை செய்துகொண்ட அனிதா என்னும் மாணவி’ நினைவுக்கு வருவாள் என்பது இயக்குனருக்குத் தெரியாதா ? அப்படியென்றால் குறைந்த பட்ச நேர்மைக்கு இடம் கொடுத்திருக்கலாம். பாத்திரத்துக்குப் பெயர் வைப்பதில் அப்படியென்ன கற்பனை வறட்சி இயக்குனர் அவர்களே ?

ஒரு இடத்தில் லில்லி தன்னுடைய சித்தப்பாவிடம் கேட்கிறாள், காம்ரேட்’னா என்ன என்று, அதற்கு அவர், அமைதியாய் இருக்கும் சிகப்பு என்ற அர்த்தத்தில் ‘காமா இருக்குற ரெட்’ என்று சொல்கிறார். கம்ம்யூனிஸ்டுகள் மீது இயக்குனருக்கு என்ன கோபமோ ? ரியல் கம்மியுனிஸ்டாக நடிகர் சாருகாசன் நடித்திருக்கிறார்.

படம் ஒரு கிளாசிக்கான காதல் படம். ஆனால் நீண்டு கொண்டே போய் ‘இப்போது முடிந்து விடும்!’ என்று நினைக்கும்போது படம் தடம் மாறி வேறு பாதையில் பயணிக்கிறது. கிளைமாக்சுக்கு முந்தைய மூன்றாம் பகுதியில் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை கிளைமாக்ஸ் நேரத்தில் வைக்கிறார்கள். ஆனாலும் ரசனையான காட்சிகள் மூலம் சீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள். நீளத்தைக் குறைத்தால் நலம். மல்டி லிங்குவல் விஷயத்தில் சின்னச் சின்ன இடங்களில் சொந்த மொழியின் வாடை வந்து விடுகிறது. வசனங்கள் வேறு ! உதட்டசைவு வேறு! சென்னையில் நடப்பதாகக் காட்டப்படும் ஒரு காட்சியில் வைத்திருக்கும் போர்டு ஒன்றில் செகந்தராபாத் என்று போட்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் ஆக்டிவா ஒரே கட்சியில் ஏபி மற்றும் டிஎன் என்று மாறி வேறுவேறு மாநில ரெஜிஸ்ட்ரேஷன்களைக் காட்டுகிறது. போலீசின் உடைகளும் அவ்வண்ணமே!

வில்லன் கதாபாத்திரம் சீயான் விக்ரமை நினைவூட்டுகிறது. கிளைமாக்ஸில் பொறுமையை சோதிக்கிறார்கள். ஆடியன்சுக்கு பாபி மீது கோபமும், லில்லி மீது கடும்கோபமும் வர வைப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, பின்னணி இசை அற்புதமாக இருக்கிறது. பாடல்கள் கேட்கலாம் அவ்வளவுதான்...

இடைவேளைக்கு முன் ஒரு கால்மணிநேரத்தையும், இடைவேளைக்குப் பின் ஒரு கால்மணிநேரத்தையும் வெட்டினால் காம்ரேட் காம்ப்ரமைஸ் ஆகலாம். ஆனாலும் பார்க்கவேண்டிய படம். நீளம் கொஞ்ச்.....சம் அதிகம்!

டியர் காம்ரேட்! காதல் காம்ரேட்!

0 Comments

Write A Comment