Tamil Sanjikai

1999 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ரவி தன்னுடைய வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் நிகிதாவைக் காதலிக்கிறான். அந்த ஆண்டின் முடிவில், அதாவது 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தின் முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய காதலை நிகிதாவிடம் சொல்லி தன்னுடைய வீட்டிலிருக்கும் ஒரு பழங்கால சிலை ஒன்றைப் பரிசளிக்கும் நோக்கில் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.

அந்த நேரத்தில் ரவுடி ஒருவனைக் கொலை செய்து விட்டு ஓடி வரும் லோக்கல் ரவுடி கும்பல் ஒன்று அந்த சிலையை ரவியிடமிருந்து பிடுங்கி அதன் கூர்மையான முனையை நிகிதாவின் கழுத்தில் வைத்து மிரட்டி தப்பி ஓடுகிறது. அப்போது தடுமாறி கீழே விழும் நிகிதாவைத் தூக்கப் போகும் ரவியை லாரி ஒன்று மோதி தூக்கியெறிகிறது. கோமாவில் விழும் ரவி மீண்டும் 16 ஆண்டுகள் கழிந்து 2016 ஆம் ஆண்டு மீண்டு எழுகிறான்.

16 ஆண்டுகளில் காலம் அசுர மாற்றங்கள் பெற்றிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறான். அப்பா இறந்து விட்டார், தன்னுடைய தங்கையை தனது வகுப்புத் தோழன் மணியே திருமணம் செய்ததோடு நில்லாமல், தன்னுடைய மருத்துவச் செலவையும் மணியே செய்து வருவதைக் கண்டு மகிழ்ந்தாலும், தன் வாழ்வில் பெரும் பகுதியை இழந்து விட்டதை எண்ணிக் கண் கலங்கி நிற்கிறான். மேலும் அவன் தன்னுடைய மனதளவில் பதினேழு வயது பள்ளிச் சிறுவனாகவே இருப்பதால், அவன் விருப்பப் படுவதை நிறைவேற்றி வைக்குமாறு ரவியின் டாக்டர் சொல்கிறார்.

முதல் ஆசையாக ரவி தன்னுடைய பள்ளிக்காலத்து காதலி நிகிதாவைச் சந்திக்கிறான். அவள் ரவிக்கு சிகிச்சையளித்த டாக்டரோடு திருமணமாகி ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். ரவி அவளைச் சந்திக்கும் போது அவள் ரவியின் மீதான காதலை மறுதலிக்கிறாள். இதனால் ரவியின் மனம் உடைந்து போகிறது.

ரவியின் தந்தை ஒரு சாதி மறுப்பாளர் ஆகையால் ரவிக்கு தான் இன்ன சாதி என்பது தெரியாமல் போகிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண் யாராவது இருக்கிறார்களா ? என்று மேட்ரிமோனியில் தேடுகிறார்கள். அப்படி ஒரே ஒரு பெண் இருப்பது தெரிந்து அவளை சந்திக்கிறான். 2016-ன் கலாச்சாரம் ரவிக்குத் தெரியாமல் அந்தப் பெண்ணோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள நினைக்கும் போது, அந்தப் பெண் உதட்டைக்குவிப்பது புரியாமல் அவளின் உதட்டோடு முத்தமிட்டு பொதுமக்களின் கையில் சிக்கி தலைப்புச் செய்தியாகிறான். போலீசிடமிருந்து மீட்கப்பட்டு, தன்னுடைய தங்கையின் வசவுக்கு ஆளாகி செய்வதறியாமல் நிற்கிறான். படிப்பு இல்லை, வருமானம் இல்லை, வேலை கிடைப்பதில் சிக்கல், தங்கையின் வீடு கடனில் சிக்கி ஜப்திக்குத் தயாராக இருக்கிறது. ரவி என்னவாகிறான் என்பது மிச்சக்கதை.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கோமாளி. கோமாவில் இருந்த ஒருவன் பதினாறு வருடங்கள் கழித்து நினைவு திரும்பி வந்து வாழ்வியல் ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்திருக்கும் அந்த அதிநவீன உலகைக் கண்டு மிரண்டு அவன் சந்திக்கப் போகும் அடுத்த கட்டம் எத்தனை துயர்மிக்கதாகவும், ஆச்சர்யங்கள் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல், ஆடியன்ஸை சிரிக்க மட்டுமே வைக்க வேண்டும் என்று எண்ணி திரைக்கதை அமைத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் நடிப்பு பிரமாதம். இத்தனை நகைச்சுவைக்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் தன்னுடைய துயரை நினைத்து வெடித்து அழும் காட்சிகளில் அமர்க்களப் படுத்தியிருக்கிறார். காமெடியிலும் குறை வைக்கவில்லை. சக்திமான் டீ சர்ட்டும், பிரபுதேவா ஸ்டைல் தொளதொள டிரெஸ்ஸும் போட்டுக் கொண்டு வரும் இடங்கள் காமெடி. ஒரே சீனில் வேறு வேறு கெட் அப்புகளில் ஜெயம் ரவி வருவது, படம் பிடிக்கப் பட்ட கால இடைவெளிச் சிக்களைக் காட்டுகிறது. சின்ன வயது ஜெயம் ரவி மேக்கப்பும், விக்’கும் கொஞ்சம் உறுத்தல்.

காஜல் அகர்வாலும், சம்யுக்தா ஹெக்டேவும் நிறைவு. யோகிபாபு வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார். பள்ளி மாணவனாக வரும் காட்சிகள் துவங்கி, ஐ.டி ஊழியர் என்று சொல்லிக் கொண்டு திரியும் ஆசாமியாக செம்மையாக காமெடி பண்ணியிருக்கிறார்கள். டாக்டர்.கிருஷ்ணமூர்த்தியாக வரும் ஷா.ரா கலகலப்பு.

இசை. ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் மற்ற துறைகள் சார்ந்த வேலைகள் அனைத்தும் நலம்.

நீர்நிலைகளை மூடி மனிதர்கள் எழுப்பிய கட்டிடங்கள், பம்பரம், கோலி, பாண்டியாட்டங்கள், நிலாச்சோறு என்று மனிதர்கள் தொலைத்த அநேகம் விஷயங்களைப் போகிற போக்கில் விதைத்துச் சென்றிருப்பதற்காக இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை பாராட்டியாக வேண்டும். படம் நெடுகிலும் சின்னச் சின்ன விஷயங்களை வசனங்களின்மூலம் தெளித்திருப்பது அழகு.

கே.எஸ்.ரவிக்குமார்ட் வில்லனாக வந்தாலும் கூட முதல் காட்சியில் பொன்னம்பலத்தைப் போட்டுத்தள்ள விஜய் டி.வி ராமரோடு சேர்ந்து திட்டம் போடுவது, கடைசி நேரத்தில் கத்தி நழுவி தரையில் வீழ்வது, அடுத்த கத்தி ராமரின் மர்ம பாகத்தைத் தகர்த்து டீக்கடைக்கார ஆண்டியின் இடுப்பில் போய் விழுவது, அந்த ஆண்டியின் இடுப்பில் தெறிக்கும் பொன்னம்பலத்தின் ரத்தத்தை எடுத்து ராமர் தன்னுடைய நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது என்று ஏக அலப்பறைகள் செய்வார்கள். காட்சிகளும், வசனங்களும் கொஞ்சம் விரசம்தான் என்றாலும் தியேட்டரில் வெடித்துச் சிரிக்கிறார்கள். ராமரையும், பிஜிலி ரமேஷையும் கொஞ்சம் யூஸ் பண்ணியிருக்கலாம். சின்னச் சின்ன கவனக்குறைவுகள் இருந்தாலும் கூட இன்றைய சூழலில் சிரிப்பதற்காக மன்னித்து விடலாம்.

கோமாளி – செம்ம காமெடி

0 Comments

Write A Comment