Tamil Sanjikai

அத்தனை வில்லன்கள் அவ்வளவு பாடுகள் படுத்தியும் கூட கிளைமாக்ஸ் வெறுமனே ஒரு ஃபுட்பால் மேட்சின் வெற்றியோடு முடியும். அதற்கப்பால்தான் அட்லீ மற்றும் விஜய் டச்கள் வரும். வலது பக்கத்தில் படக்குழுவினரின் பெயர்களும், இடது பக்கத்தில் பழிவாங்கலும் படமாய் விரியும்.

ஒரு திரைப்படமென்பது நூற்றுக்கணக்கான மனிதர்களின் ஒட்டுமொத்த உழைப்பு. அதில் யூனிட் வண்டி ஓட்டுனர் துவங்கி, உதவியாளர்கள், சமையல்காரர்கள், சாப்பாடு பரிமாறுபவர்கள், லைட்டுகள் சுமப்பவர்கள், அட்லீ மற்றும் விஜய் வரைக்கும் பட்டியல் வெகு நீளம். ஒரு சினிமா வேலைக்காரன் தன்னுடைய பெயரை வெள்ளித் திரையில் கண்டு ரசிப்பதென்பது அவனுடைய வாழ்நாள் சாதனையாகக் கருதக்கூடும். வழக்கமாக ஒரு படம் முடிந்தவுடனேயே பார்வையாளர்கள் எழுந்து வெளியே சென்று விடுவார்கள். ஆப்பரேட்டர்களும் கூட ஒரு ஐந்து யூனிட்டுகள் மின்சாரத்தைச் சேமித்து விடும் பாங்கில் திரையை அணைத்து விடுவார்கள். அதனாலேயே இம்மாதிரியான டெக்னிக்குகளை இயக்குனர்கள் கையாள்வதுண்டு.

படத்தில் வேலை செய்த ஊழியர்கள் அனைவரது பெயரையும் அந்த காட்சிகளில் சேர்த்து அதை அந்த ஊழியர்கள் பார்த்த மகிழவே இம்மாதிரியான உத்திகளை ஜாக்கி சான் கையாள்வார். அந்த வகையில் பிகில் பட இயக்குனர் அட்லீக்கு வாழ்த்துகள். அதற்காகவே படத்தைப் பாராட்டிவிட முடியாது.

பிகில் என்ற மைக்கேல் ஒரு கால்பந்தாட்ட வீரன். பிகிலின் அப்பா ராயப்பன் ஒரு டான். வில்லன்கள் ராயப்பனைப் போட்டுத் தள்ளவே கால்பந்தைக் கைவிட்டு கத்தியைக் கையில் எடுக்கிறான் பிகில். ஏழை மாணவிகளின் கால்பந்தாட்ட கனவை நிறைவேற்றும் நோக்கில் பிகில் பின்னணியில் இருந்து கொண்டு உதவ, பிகிலின் நண்பன் கதிர் மாணவிகள் கொஞ்சம் பேர் கொண்ட கால்பந்தாட்டக் குழுவை வழிநடத்துகிறான்.

போட்டி ஒன்றின் நிமித்தம் டெல்லி செல்லும் வழியில் பிகிலுக்கும், அவனது எதிரிகளுக்கும் நடக்கும் சண்டையில் கதிருக்கு கத்திக் குத்து விழுந்து படுக்கையில் இருக்கிறான். அந்தக் கால்பந்தாட்டக் குழுவை மீண்டும் வழிநடத்த வேண்டிய சூழல் பிகிலுக்கு வருகிறது. எதிரிகளை முறியடித்து போட்டியில் வென்றார்களா என்பது மிச்சக் கதை.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் பிகில். விளையாட்டுத் துறை, அதிகாரிகள், ஏழைகள், அவர்களது கனவுகள், அதன் தடைகள் என்று விவாதிக்கும் பத்தோடு பதினொன்றாக வந்திருக்கும் படம். ஆனால் காட்சியமைப்புகளும், டெக்னாலஜியும் சேர்ந்து ஒரு கலர்ஃபுல் படத்தைத் தந்திருக்கிறார்கள். விஜய்க்கு நாற்பத்தி சொச்சம் வயது என்றும், நயன்தாராவுக்கு முப்பத்து சொச்சம் வயது என்று நம்புவதற்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. விஜய் மற்றும் நயன்தாராவின் வடசென்னை மாடுலேஷன் ரசனையாக இருக்கிறது.

தான் மிகவும் கஷ்டப்பட்டு செய்யும் ஃப்ரேம் ஃபில்லிங்கை தன்னுடைய மாணவன் அட்லீ, லைட்டையும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளையும் வைத்து அசாத்தியமாக நிரப்பிவிடுவதைக் கண்டு ஷங்கரே வியந்திருக்கலாம். அந்த அளவு நேர்த்தியாக இருக்கிறது காட்சிகள். நிறைய பிளாக் லென்ஸ் க்ளோஸ் அப் காட்சிகள் வைத்திருக்கிறார்கள். கேமரா நிறைய உழைத்திருக்கிறது. கேமரா மேனுக்கும், லைட்மேனுக்கும் வாழ்த்துக்கள்.

சீரியசாக நகரவேண்டிய படம் திடீர் திடீரென பிரச்சார நெடிக்குள் நகர்ந்து விடுவது கொஞ்சம் பாய்ச்சல் குறைவு. சினிமாவேயென்றாலும் கூட சினிமாத்தனம் அதிகப் படியாக இருப்பதை இப்போது உள்ள சாமானிய ரசிகர்கள் கண்டுபிடித்து லாஜிக் பேசிவிடுகிறார்கள். ஆகையால் அட்லீ இன்னும் கொஞ்சம் சினிமாத்தனத்தைக் குறைத்துக் கொள்வது அவசியம். தியேட்டரில் விஜய் ரசிகர்களும், குழந்தைகளும், பெண்களும் சந்தோஷமாக இருப்பதைக் காண முடிகிறது. அதேவேளையில் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் பதறித்தான் போகிறார்கள். படம் கொஞ்சம் வேகமாகவும், சில இடங்களில் நிதானமாகவும் பயணிக்கிறது.

ஐயர்வீட்டில் நயன்தாரா பேசும் வசனங்கள் கூராக இருக்கிறது. பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய வசனங்களும், காட்சிகளும் இருப்பது படத்திற்குக் கூடுதல் பலம்.

சண்டைக்காட்சிகள் நன்றாக எடுத்திருக்கிறார்கள். நடன அமைப்பும் அப்படியே. அப்பா விஜய்யின் காட்சிகள் அருமை. லாஜிக் என்பதை கிஞ்சித்தும் சிந்திக்காமல், படம் முழுக்க பக்கா கமர்ஷியல் கண்டெண்டுகளும், காமெடியும், ஆக்ஷன் ஹீரோ சீக்வென்சுகளுமாக வைத்து தகர்க்க வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட திரைக்கதையில் பிகில் ஒரு மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம். டெக்னிக்கலாகவும் மாஸ் படம்தான்.

மெர்சல், தெறி வரிசையில் பிகில் ஆகிய அட்லீ மற்றும் விஜய் பட காம்போவில் ரசிகர்களுக்கு டைட்டில் குழப்பம் வராமல் அடுத்தடுத்த படங்களில் பார்த்துக் கொள்ள வேண்டியது அட்லீ மற்றும் விஜயின் கடமைகள். ஏ.ஆர் ரகுமான் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். உதயா மற்றும் அழகிய தமிழ்மகன் படங்களில் இருந்த துள்ளல் பிகிலில் இல்லாதது குறை.

பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமை குறித்துப் பேசும் படத்தில் கொஞ்சம் குழப்பங்கள் இருப்பது உறுத்துகிறது. ஆசிட் வீச்சில் தனது கால்பந்துக் கனவைக் கைவிடும் பெண், திருமணமானவுடன் தன்னுடைய கால்பந்துக் கனவைக் கைவிடும் பெண் என்று பார்த்துப் பார்த்து மீட்டெடுக்கும் விஜய் ஏழு வருடங்களாக நயன்தாராவின் கல்யாணத்தைக் கெடுத்துக் கொண்டே வருகிறார், காமெடிக்காக வைத்துக் கொண்டாலும் கூட அதில் ஒரு தகப்பன் மற்றும் அவளது குடும்பத்தின் வலி என்பது உறுத்துகிறது. அது தேவையேயில்லாத செக்மெண்டுகள்தான்.

ரயில் நிலையத்தில் வைத்து ஒருவனை அடித்துக் கொண்டே நயன்தாரா இப்படிச் சொல்லுவார், “நீ கண்ணக் காட்டியிருந்தாலே அவ ஃபோன் நம்பர் குடுத்துருப்பாளே?” இதுவும் பெண் சுதந்திரத்தில் சேருமா இயக்குனர் அட்லீ அவர்களே?

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அடுத்த படைப்புகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். படத்தைக் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கலாம் என்பது ஆறுதல். பிகில் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.

0 Comments

Write A Comment