Tamil Sanjikai

ஆவிகள் குறித்த ஆராய்ச்சியாளர்களான புகழ்பெற்ற வாரன் தம்பதியினர், அனபெல் என்னும் கொடூரமான அசுத்த ஆவிகள் நிரம்பிய பொம்மையை ஒரு வீட்டிலிருந்து மீட்டு வந்து தங்களுடைய வீட்டின் அறையிலிருக்கும் கண்ணாடி பெட்டிக்குள் அடைத்து வைக்கின்றனர். அந்த அறை முழுவதுமே அமானுஷ்யமான பொருட்கள் வைக்கப் பட்டிருக்கிறது.

வாரன் தம்பதி உண்மையான கதாநாயகர்களா? போலிகளா? என்று நாளிதழ் ஒன்று வாரன் தம்பதியினர் குறித்து செய்தி ஒன்றினை வெளியிடுகிறது. இது வாரன் தம்பதியினரின் ஒரே மகளான ஜூடியின் மனதைக் காயப்படுத்துகிறது. ஜூடியின் வீடு முழுவதும் பேய்களே நிரம்பியிருப்பதாகக் கூறி அவள் படிக்கும் பள்ளி மாணவர்கள் அவளைக் கேலி செய்கிறார்கள்.

ஜூடியைப் பார்த்துக் கொள்வதற்காக மேரி எல்லன் என்கிற இளம்பெண் வேலைக்கு அமர்த்தப் பட்டிருக்கிறாள். அப்போது ஜூடியின் பிறந்தநாள் வருகிறது. அந்த நாள் வாரன் தம்பதியினர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிடுவதால் ஜூடியின் பிறந்த நாளைக் கொண்டாட மேரி திட்டமிடுகிறாள். இந்த கொண்டாட்டத்தில் மேரியின் தோழி டேனியலா என்றொரு இளம்பெண்ணும் இணைந்து கொள்கிறாள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பாக டேனியலாவும் அவளுடைய அப்பாவும் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் விபத்தைச் சந்திக்கிறது. அதில் டேனியலாவின் தந்தை பலியாகிறார். காரை டேனியலா ஓட்டியதால், தன் அப்பாவின் மரணத்துக்குத் தானே காரணம் என்று நம்பிக் கொண்டிருக்கும் டேனியலாவுக்கு தன்னுடைய தகப்பனின் ஆவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அவள் ஜூடியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறாள்.

ஜூடியின் பெற்றோர் ஆவிகள் சம்பந்தப் பட்டவர்கள் என்ற காரணத்தால் அவர்கள் வீட்டில் தன்னுடைய பிரச்சினைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கலாம் என்ற ஆசையில் யாருக்கும் தெரியாமல் அந்த குறிப்பிட்ட அறையைத் திறந்து அனபெல்லை விடுவிக்கிறாள். அதற்குப் பின் நடக்கும் ரகளைதான் கதை.

புகழ் பெற்ற கதாசிரியரும், இயக்குனருமான ஜேம்ஸ் வானின் கதைதான் அனபெல். 2013 ல் வெளிவந்து திரை உலகையே மிரள வைத்த ‘தி கான்ஜூரிங்க்’ படத்தில் இடம்பெற்ற அனபெல் பொம்மை, 2014 – ல் தனி பாகமாக வெளிவந்து மிரட்டியது. அதற்குப் பின் 2015 ஆம் ஆண்டை விட்டு வைத்து விட்டு 2016 – ல் வெளியான ‘தி கான்ஜூரிங்க் 2 ’ பார்வையாளர்களை அசைத்துப் பார்த்தது.

இந்த அனபெல் பொம்மை எப்படி உருவானது என்று ஒரு பாகத்தை 2017 ல் ‘அனபெல் கிரியேஷன்’ என்ற பெயரில் ப்ரீக்வெல்லாக எடுத்தார்கள். அதுவும் சக்கை போடு போட்டது. அதன்பின் இந்த எல்லா பாகங்களுக்குமே மணிமகுடம் வைத்தாற்போல 2018 ல் வெளிவந்த ‘ தி நன் ‘ திரைப்படமெல்லாம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு எழுந்து வெளியில் ஓடுமாறு செய்த திகிலின் உச்சகட்டம். அதில் வரும் கன்னியாஸ்திரி பேயான ‘வாலக்’ அந்தப் படத்தைப் பார்த்த அத்தனை பேரின் உறக்கத்தையும் கெடுத்தாள் என்றே சொல்லலாம்.

அதன் பின்னர் 2019 – ல் வெளியான கான்ஜூரிங்க் சீரிசில் ‘ தி கர்ஸ் ஆஃப் தி வீப்பிங்க் உமன்’ நன்றாகப் போனது. அந்த உஷ்ணம் குறையாமல் இந்த ஆண்டிலேயே வெளிவந்திருக்கும் படம் ‘அனபெல் கம்ஸ் ஹோம்’.

கதையைக் கேட்கும் போது புல்லரித்ததை நம்பி கதாசிரியர் ஜேம்ஸ் வான் இயக்குனர் கேரி டாபர்மேனிடம் படத்தை ஒப்படைத்திருக்கிறார். படத்தின் துவக்கத்தில் ஒரு ஐந்து நிமிடங்கள் கொஞ்சம் திகில் இருக்கிறது. அதற்குப் பின்னான சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் டாக்குமெண்டரி படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

வாரன் தம்பதியினர் ஊரில் கிடையாது ! வீட்டில் ஒரு சிறுமியும், இரண்டு இளம்பெண்களும் மட்டுமே இருக்கிறார்கள்! கொடூரமான பேயாகக் கருதப் படும் அனபெல் விடுவிக்கப்படுகிறது! வாரன் தம்பதியையே தண்ணீர் குடிக்க வைக்கும் அனபெல்லை இந்த மூவரும்தான் விரட்டியாக வேண்டும்! இப்படி ஒரு சிக்கலை சுமந்து கொண்டிருக்கும் இந்தக் கதையையெல்லாம் சும்மா அலற விட்டிருக்க வேண்டாமா?

வாயால் வடை சுட்டு வைத்திருக்கிறார் இயக்குனர். முந்தைய படங்களில் இருந்த செட் பிராப்பர்டிக்களை வைத்துக் கொண்டு படம் பிடித்திருக்கின்றனர். கூடவே வேன் ஹெல்சிங் படத்தில் வரும் ஓநாய் மனிதனை இலவச இணைப்பாய்க் கொடுத்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். உலகமே எதிர்பார்க்கும் இம்மாதிரியான பேய்ப்படங்கள் இப்படி புஸ் என புஸ்வாணமாகப் போவதுதான் சோகம்.

நடிகர்களின் நடிப்பில் எந்தக் குறையுமில்லை. காட்சிகள், ஒளி என்று மேக்கிங்கிலும் குறை இல்லை. ஒரு பேய்ப்படமென்றால் சப்தமேயில்லாமல் திகிலைக் கிளப்புவதுதான். இந்தப்படத்தில் வரும் திடீர் ஒலிகள் கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சிகளின் மீது தூவப்பட்ட ஒலி போலவே தோன்றுகிறது.

படத்தின் இறுதியில் வரும் இருபது நிமிட திகில் காட்சிகளுக்காக ஏன் ஒருமணி நேரம் தியேட்டரில் குத்த வைக்க வேண்டும் திரு கேரி டாபர்மென் அவர்களே?

ஆசிரியர். ஜேம்ஸ் வான் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். உலகின் கொடூரமான பேயான அனபெல் மாதிரி ஒரு கனம் மிகுந்த பாத்திரத்தை நீங்கள் இயக்காமல் கேரி டாபர்மென் போன்ற ஒருவரிடம் ‘ஹேண்டில் வித் கேர்’ என்று சொல்லிக் கொடுங்கள். இல்லையென்றால் நீங்கள் இயக்குங்கள்.

அப்படியும் இல்லையென்றால் கொடூரமான அனபெல்லை, ஏதோ ஊரில் கிடைக்காத வஸ்து மாதிரி இந்த வாரன் தம்பதியினர் ஏன் தங்கள் வீட்டின் பீரோவில் அடைத்து வைக்க வேண்டும்? இழவை எரித்துத் தொலைக்க வேண்டியதுதானே?

Annabelle comes home , Audience stay home

 

0 Comments

Write A Comment