Tamil Sanjikai

அபார்ட்மெண்ட் ஒன்றுக்குக் குடிவருகிறார்கள் லிவிங் டுகெதர் ஜோடிகளான ரீட்டாவும், வெங்கியும். அங்கே ரீட்டாவுக்கு நான்கு பெண்தோழிகள் அறிமுகமாகிறார்கள். முறையே பாரு, காஜல் , சுகி மற்றும் தாமரை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிக்கதைகள் இருக்கின்றன. ஒருநாள் இவர்கள் ஐந்துபேரும் சேர்ந்து தாமரையின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது மது அருந்துகிறார்கள். அப்போது அவர்கள் அனைவரும் ஒருவித மன இறுக்கத்தில் இருந்து விடுபட்டு ஒருவருக்கொருவர் பேசி மகிழ்கிறார்கள்.

பாருவுக்கு திருமணமாகி வெகுநாட்களாகியும் தன்னுடைய கணவனோடு இல்லற வாழ்வில் இணையாமல் இருக்கிறாள். பாருவின் மாமியார் வேறு வாரிசு எங்கே என்று கேட்டு இம்சிக்கிறாள். ஒருகட்டத்தில் பாரு தனது கணவனிடத்தில் வெடிக்கவே , கணவன் தான் வேறொரு பெண்ணைக் காதலித்ததாகவும், தன் அம்மாவுக்காக பாருவைத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னால் தன்னுடைய காதலியை மறக்க முடியவில்லை என்று கூறுகிறான்.

தாமரை தன்னுடைய பள்ளி நாட்களில் ஒரே பகுதியில் உள்ள ரவுடி ஒருவனைக் காதலித்துத் திருமணம் செய்து விடுகிறாள். முதலில் அன்பாக இருந்த கணவன் ஒருகட்டத்தில் வேலைக்குப் போகாமல் , சதா குடித்துவிட்டு , பாண்டி என்றொரு ரவுடிக்கு வேலை செய்கிறான். இது தாமரைக்குக் கோபத்தை உண்டு பண்ணுகிறது.

காஜல் வடநாட்டுப் பெண், தன் கணவனோடு சந்தோஷமாக ஒரு குழந்தையோடு வாழ்ந்து வருகிறாள். எப்போதும் குழந்தையைக் கவனித்துக் கொண்டிருப்பதால் அவளால் தன்னுடைய கணவனை சரிவர கவனித்துக் கொள்ளமுடியவில்லை. அவளது கணவன் வேறொரு பெண்ணோடு கள்ளக்காதலில் ஈடுபடுகிறான்.

சுகிக்கு கிரிஸ் என்னும் காதலன் இருக்கிறான். மதம் அவர்களது காதலுக்குத் தடையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாண்டிச்சேரியில் வைத்து கிரிஸ்சுக்கு திருமணம் நடைபெறுவதாக சுகி சொல்லிவிட்டு அழவே தோழிகள் எல்லாரும் சேர்ந்து கிரிஸ்சை மணப்பெண்ணோடு சேர்த்து மணக்கோலத்தில் கடத்துகிறார்கள். கடத்தியபின்னர்தான் தெரிகிறது. கிரிஸ் என்பது மணமகன் அல்ல ! மணமகள் கிரிஸ்டினா என்று !

ரீட்டா எப்போதும் தன்னுடைய ஜோடியான வெங்கியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டேயிருக்கிறார். அப்படி ஒருநாள் இரவு படுக்கையில் இருக்கும்போது வெங்கி ரீட்டாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவே ரீட்டா வெங்கியின் கோரிக்கையை நிராகரிக்கிறாள். வெங்கி ரீட்டாவை விட்டு வெளியேறுகிறான்.

இப்படி இந்த ஐவரின் பிரச்சனைகளும் தீர்ந்ததா ? என்பதுதான் மிச்சக்கதை.

என்விஸ் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் அனிதா உதீப் இயக்கத்தில், சிம்பு இசையில் ஓவியா மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 90ML.

ரீட்டாவாக ஓவியாவும், மசூம் சங்கர் காஜலாகவும், சுகியாக மோனிஷா ராமும், பாருவாக ஸ்ரீ கோபிகாவும், தாமரையாக பொம்மு லக்ஷ்மியும் , வெங்கியாக ஆன்சன் பவுலும் நடித்திருக்கிறார்கள்.

குடிப்பழக்கத்திலிருந்து தன் மனைவி விடுபட வேண்டி தாமைரையின் கணவன் தாமரையை மன நல மருத்துவரிடம் அழைத்து வருகிறான். தாமரையின் வாயிலாக கதைவிரிகிறது.

பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளால் எத்தனை மன அழுத்தங்களைச் சந்திக்கிறார்கள் என்பதைச் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர். அவரும் ஒரு பெண் என்பதால் அவர் பேச நினைத்ததை ஒளிவு மறைவின்றி பேச முயற்சித்திருக்கிறார். இதில் கூடி ஒரு அங்கமாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

நகரத்துப் பெண்கள் இப்படிக் குடிப்பார்களா? என்று தோன்றினாலும்கூட குடி என்பது ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா ? என்ற கேள்வியை முன்வைப்பது பெண்ணியத்தின் ஒரு பகுதியாக இந்த சமூகத்தில் கேட்கப்படுகிறது. ஒரு பெண் யாரிடமும் தன்னுடைய வாழ்க்கையை அடகு வைக்காமல் தனியே தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது குறித்த ஆதங்கம் இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும். அதை ஓவியா கதாபாத்திரம் மூலம் நிறுவ முயன்றிருக்கிறார். அதை பேலன்ஸ் செய்வது போலவே அதற்கு எதிர்மறையான கதாபாத்திரங்களும் படத்தில் இருக்கின்றன. அட இது தப்பாச்சே? என்று தோன்றும் முன்னே, இதுவும் ஒருவகையில் சரிதான் என்று தோன்ற வைக்கும் கதாபாத்திரங்கள் அவை.

படத்தில் முதலில் இருந்தே முத்தக் காட்சிகள் அனல் பறக்கின்றன. எது குறித்தும் இயக்குனர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த ஒரு குணம் மட்டுமே ஒரு இயக்குனரின் முதல் தகுதியாக இருந்தாலும் கூட தான் சொல்ல வந்த விஷயத்தை விடவும் , செக்ஸ் குறித்தே அதிகம் பேச முற்பட்டிருப்பது என்னவோ படத்தின் வியாபாரத்திற்காக மட்டும்தான் என்பது கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரிகிறது. பாலுறுப்புகள் குறித்து பேசும் காட்சிகள் கொஞ்சம் நெளிய வைக்கின்றன என்றாலும் சென்சார் போர்டு நிறைய இடங்களில் கத்திரி போட்டு ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஒரு முழுமையான செக்ஸ் காமெடி கதையாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அத்தனை சறுக்கல்கள். குடியை மட்டுமே முன்னிறுத்தியிருப்பதால் பேச வேண்டிய பெண்ணிய விஷயங்களைப் பேச முடியாமல் திரைக்கதை வீங்கிப் போயிருப்பது தெரிகிறது.

ஆண்கள் மட்டும்தான் இதையெல்லாம் செய்யலாமா ? பெண்கள் செய்தால் என்ன தப்பு ? என்ற கோபம் இருந்தாலும் அதையும் பேலன்ஸ் செய்யவில்லை. படத்தை கொஞ்சம் ஆபாசமான டயலாக்குகள் நிறைந்த கொஞ்சம் குறும்படங்களின் தொகுப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குனர் நிறைய சென்ஸிட்டிவான விஷயங்களைப் பேசியிருந்தாலும் கூட அவைகள் முழுமை பெறவில்லை அல்லது வேறு சில விஷயங்கள் முன்னால் நிற்பதால் அந்த விஷயங்கள் கண்ணில் படாமல் போயிருக்கின்றன.

பெண்கள் தங்களுக்கான சுதந்திரங்கள் இவைகள்தான் என்று ஒருபோதும் எண்ணிக் கொள்ள முடியாது என்றுதான் படம் பேசுவதாகத் தோன்றுகிறது.

உதாரணமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சொல்லிவிட முடியும்.

திருமணத்தைத் தாண்டிய செக்ஸ் தனக்குக் கிடைத்தாலும்கூட ரீட்டாவை நேசிக்கும் வெங்கி அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதும் , திருமணம் என்ற ஒரு கட்டு தனக்கு வேண்டாமென்று தன்னை அளவில்லாமல் காதலிக்கும் வெங்கியைத் துரத்திவிட்டு விட்டு, தன்போலவே குணம் கொண்ட இன்னொருவனுக்காக காத்திருப்பது ஒருவகை தனிக்குணம் என்பதைப் போலக் காட்டியிருக்கிறார்கள். அதில் வெங்கி தனக்கு மட்டும் ஒரு பெண் அடிமை வேண்டும் என்பது போலவும், அவள் தன்னைத் தவிர வேறு யாருக்கும் சொந்தமாகக் கூடாது என்ற ஆணின் பொதுப்புத்தி வெங்கிக்கு இருப்பதாகக் காட்டிவிட்டு, ரீட்டாவுக்குத் தேவை தனக்கு சமையல் முதற்கொண்டு தன்னுடைய செக்ஸ் தேவைகளுக்கு ஒரு அடிமை வேண்டும் என்பது போலத்தான் காட்டியிருக்கிறார்கள்.

ஒரு பெண் இன்னொரு பெண்ணை அளவில்லாமல் நேசிக்கும் போது அதில் ஓரினச் சேர்க்கை அல்லது செக்ஸ் தேவை மட்டுமே பிரதானம் என்று காட்டியிருப்பது கொஞ்சம் நெருடுகிறது.

தன்னுடைய மனைவி காஜல் தன் குழந்தையின் பால் தனக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறாள் என்று தெரிந்து அந்தக் கணவன் இன்னொரு பெண்ணிடம் போகிறான் என்னும் பட்சத்தில் அந்தக் கணவன் கேரக்டரை மிக நுட்பமாகக் கையாள்வதாக நினைத்துக் கொண்டு அந்தக் கேரக்டரைக் கலாய்த்திருக்கிறார்கள். காஜலை அவளது கணவனிடம் சேர்த்து வைத்தால் , பெண் ஏன் அடிமையாக இருக்க வேண்டும் ? என்ற கேள்வி எழும். ஒருவேளை காஜல் அவளது கணவனை சந்தித்து அவனிடம் அல்லது அவனது கள்ளக் காதலியிடம் தனக்குத் தாலிப்பிச்சை வழங்குமாறு மண்டியிட்டிருந்தால் அது ஒருவேளை மடிப்பிச்சை கேட்பதாக அமைந்து போகும்.

செக்ஸ் ஒரு மனிதனுக்கு முக்கியமான தேவை எனும்போது அதைத் தீர்த்துக் கொள்வதற்காகத்தான் இந்த சமூகம் திருமணம் என்ற ஒன்றை வழங்கித் ஆணும் , பெண்ணும் தங்கள் இச்சைகளை விரட்டலாம் என்றாலும் அதை பழமை வாதமாக மாற வாய்ப்பிருக்கிறது. காஜலை அவளது திருமண பந்தத்தில் இருந்து பிரித்து கூட்டிக் கொண்டு வருகிறார்கள். காஜலின் மகளுக்கு என்ன தீர்வு ? இப்படி பல்வேறு சிக்கல்களைக் கையாளாமல் அம்போவென விட்டிருக்கிறார்கள். இப்படி நிறைய சொல்லலாம்.

கூடி சீன்களுக்கும், முத்தக் காட்சிகளுக்கும், பாலுறுப்பு வர்ணனைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை கொடுத்து அழகான திரைக்கதை அமைத்திருந்தால் ஒரு நல்ல தரமான படமாக இருந்திருக்கும். முத்தமும் , கெட்டவார்த்தைகளும், குடியும் யாரும் செய்யாத ஒன்றெல்லாம் கிடையாது என்றாலும் அதையே ரசிக்கும்படியாகத் திரைப்படமாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஜாலியாகப் படமாக்கிவிட்டு ஆடியன்சுக்கு முகம் சுழிக்கும் போரிங் ஃபீலிங்கைக் கொடுத்திருக்கிறார்கள். சிம்பு ஒரு சீனுக்கு வருகிறார். பாடல்கள் சுமார் ரகம்.

பிரதான உணவை சுவையாகச் சமைக்காமல் கறிவகைகளை ருசிக்க முடியாது என்பது போல படத்தில் டெக்னிக்கலாக சொல்ல நிறைய இருந்தும் கூட அந்த விஷயங்கள் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராகவே அமையும். இந்தப் படத்தை இயக்குனர் தான் பெற்றோரோடு பார்க்க முடியுமா என்பதுதான் கேள்வி !

90 ml ! டிரெய்லர் மேக்கிங்கோடு நிறுத்தியிருக்கலாம்.

0 Comments

Write A Comment