Tamil Sanjikai

தியேட்டருக்குள் நுழைந்து டிக்கெட்டை கொடுத்தால், டிக்கெட் கிழிப்பவர் டிக்கெட்டில் வீற்றிருந்த போட்டோவில் சரியாக ரஜினியின் வாயிலேயே கிழித்தார். அப்போதே உள்ளுக்குள் மணியடித்தது. சகுனம் சரியில்லையே ! ஓடிருடா கைப்புள்ள ! என்ன செய்ய ? விமர்சனம் எழுதணுமே !

‘இந்தியா இன்னொரு சிங்கப்பூராக மாறும்’ என்று கூவிக்கொண்டே இருப்பவர்களை நாம் இதுவரையில் கோமாளிகளாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் உண்மையில் குறிப்பிடும் சிங்கப்பூர் என்பது வேறு.

Singapore is a fine Country என்று சொல்வார்கள். Fine என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘அழகான, நேர்த்தியான’ மற்றும் ‘அபராதம்’ என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. சிங்கப்பூர் ஒரு அழகான நாடு மற்றும் சின்னஞ்சிறிய விதிமுறை மீறல்களுக்குக் கூட கடுமையான அபராதங்கள் விதிக்கும் நாடு என்பது அங்கு போய் வந்தோருக்குத் தெரியும். தற்போது அபராத முறைகளின்படி இந்திய நாடும் பாதி சிங்கப்பூர் ஆகிவிட்டதாய் அறிவுள்ளவர்கள் ஒத்துக் கொள்வார்கள். வித்தியாசம் என்னவென்றால் சிங்கப்பூரில் தவறிழைத்தவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப் படும். இந்தியாவில் கதை வேறு. இந்தியா எப்படி மீதிப்பாதி சிங்கப்பூராய் மாறும் என்பதே 2.0 படம் பறவைகளை முன்னிறுத்தி சொல்லும் கிளி ஜோசியம்.

பூமியில் பறவைகளை விட ஆயிரம் மடங்கு பூச்சிகள் இருப்பதாகவும், பூச்சிகளால் தாவரங்கள் மொத்தமும் அழிவதாகவும், பறவைகள் பூச்சிகளை உண்ணாவிட்டால் மனிதனுக்கு தாவரங்களின் வாயிலாகக் கிடைக்கும் உணவு கிடைக்காது என்றும், செல்போன் கதிரியக்கத்தால் பறவைகள் மடிந்து போய் மனிதனுக்கும் மற்றும் பிற உயிரினங்களுக்கும் உணவே கிடைக்காமல் போய்விடுவதாகவும் பறவைகள் நிபுணர். பக்ஷிராஜன் சொல்கிறார். தன்னுடைய அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப் பட்டு, இறுதியாக தன் வீட்டிலுள்ள பறவைகள் பண்ணை அருகிலேயே செல்ஃபோன் டவர் அமைக்கப்படுவது கண்டு மனம் வெம்பி அந்த டவரிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்கிறார்.

தற்கொலை செய்துகொள்ளும் பக்ஷிகுமார் ஒளியாக ( ‘ஆவியாக’ என்று சொன்னால் பேய்படம் ஆகிவிடும் ) உருமாறி வந்து சென்னையிலுள்ள அனைத்து மொபைல் ஃபோன்களையும் பறித்து வைத்துக் கொள்கிறார். அந்த அனைத்து மொபைல் போன்களும் மாயமாய் மறைந்து கொள்கின்றன. அந்த போன்களின் வாயிலாக ராஜாளி கழுகாக வரும் பக்ஷிகுமார், சம்பந்தப் பட்ட செல்ஃபோன் முதலாளிகளையும், அளவுக்கு மீறிய கதிரியக்கத்துக்கு அனுமதி கொடுத்த முக்கிய அமைச்சர் ஒருவரையும் பழிவாங்குகிறார். அதைத் தொடர்ந்து விஞ்ஞானி. வசீகரனும் அவரது உதவியாளரான ரோபோ நிலாவும் சேர்ந்து எந்திரன் படத்தில் செயலிழக்க வைக்கப்பட்ட சிட்டி ரோபோவுக்கு உயிர் கொடுத்து, பக்ஷி ராஜனின் நாச வேலைகளைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.

இதுதான் இயக்குனர். ஷங்கர் இயக்கத்தில், நடிகர்.ரஜினிகாந்த் , இந்தி நடிகர். அக்ஷய்குமார், நடிகை.எமி ஜாக்சன் மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் 2.0 வின் கதைச் சுருக்கம்.

பிரம்மாண்டமாகவே படமெடுத்து பழக்கப்பட்ட இயக்குனர்.ஷங்கருக்கு ஒருமணிநேரத்தில் குறைந்த செலவில் எடுத்து முடிக்க வேண்டிய ஆவணப்படத்தின் ஒருவரிக் கதைக்கு ஐநூறு கோடிகள் செலவழித்து ஒரு பொம்மைப் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்.

சுஜாதா என்றொரு மிகப்பெரிய திரைக்கதையாளரின் பின்பக்கம் ஒளிந்திருந்த பிரம்மாண்ட ஷங்கரிடம் தற்போது பிரம்மாண்டம் மட்டுமே இருக்கிறது. திரைக்கதை சர்வநாசம்.

வசீகரனாக ரஜினி வசீகரிக்கவில்லை. சிட்டி ரோபோ கலகலப்பு இல்லை. இரண்டு மணிநேரம் திரையரங்கில் வெந்து, நொந்து போன ரசிகனுக்கு, சிட்டி ரோபோ 2.0 வெர்ஷன் திரையில் சண்டையிட வரும்போது தூக்கம் மட்டுமே போட்டுத் தாக்குகிறது. முதல் பாகத்து சனாவான ஐஸ்வர்யா ராய் தனக்கு பின்னணிக் குரல் கொடுத்த யுவதியின் வடிவில் ஒலியாய் நினைவூட்டுகிறார். ரோபோவாக வரும் நிலா எமி ஜாக்சன் ரோபோவாக நடித்திருக்கும் பட்சத்தில், கவர்ச்சியான உடலுக்குள் மின்சார ஒயர்களும், சர்க்கியூட்டுகளுமாக ரசிகனின் மனதில் ஒட்டவில்லை. பறவைகளை நேசிக்கும் முதியவர் பக்ஷிராஜனாக அக்ஷய்குமார் மட்டுமே மனதில் நிற்கிறார். கடைசியில் அவரையும் கூர்மையான பல்லனாக்கி, கூரான வில்லனாக்கி காலி செய்து விட்டிருக்கிறார்கள்.

முதல் பாதி முழுவதும் ரோபோட்டிக்ஸ் , ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் , இயற்பியல் , புவியியல் வகுப்புகள் எடுக்கிறார்கள். இடையிடையில் மொபைல் ஃபோன்கள் பறக்கின்றன. இயக்குனருக்கு கார்கள் மீது என்ன கோபமோ ? கார்கள் பறக்கின்றன. என்னடா இது சோதனை என்று பார்த்தால் இடைவேளை வந்து விடுகிறது. இரண்டாம் பாதியில் ஆர்னித்தாலஜி (பறவைகள் குறித்த பாடம்) எடுக்கிறார்கள். அப்புறம் ஒரு மிகப்பெரிய மைதானச் சண்டை நடக்கிறது. காயலான் கடையிலுள்ள உடைசல்கள் அனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்து சண்டை போடுகின்றன. வசீகரனுக்கு அவ்வப்போது ‘ஆல்டர் ஈகோ’ எழுந்து அந்நியன் எட்டிப்பார்க்கிறான். எந்திரன் படம் முதல் பாகமே உங்களுக்கு ஒரு பாடமாய் அமைந்திருக்க வேண்டாமா இயக்குனர் ஐயா ?

இப்போது வெளிவருகிற தரமான கிராஃபிக்ஸ் வீடியோ கேம்கள் குறித்து குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ஷங்கர் சார்.... தமிழில் மட்டுமல்ல எல்லா மொழியிலேயும் வந்த முதல் முப்பரிமாண (3D) படம் மைடியர் குட்டி சாத்தான் மட்டுமே என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் அனலாக் சினிமாவுக்கும், டிஜிட்டல் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் என்றால் அனலாக் சினிமா மீதான ஏக்கமே அதிகரித்திருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமான் பின்னணியில் பின்னியிருக்கிறார். இரண்டு பாடல்கள் மட்டுமே படத்தில் வருகிறது. கிராஃபிக்ஸ் ஓரியண்டட் படமாதலால் கேமரா ஆங்கிள் வைப்பதில் நிரவ் ஷாவுக்கு பெரிய மெனக்கெடல் இருந்திருக்க வாய்ப்பில்லையோ எனத் தோன்றுகிறது.

பேய்ப்படமா ? சைக்கோ திரில்லரா ? சூப்பர் ஹீரோ படமா ? சமுதாயத்துக்கான குழந்தைகளுக்கான படமா ? ஹீரோயிச படமா ? ஜனரஞ்சகமான படமா என்ற எந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை. ஆனால் கார்ப்பரேட்டு கல்ப்பிரிட்டுகளின் படம் என்றொரு புது பிரிவை உருவாக்கி அந்தப் பிரிவில் 2.0 வை தைரியமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

என்னடா வாழ்வின் இன்றியமையாத தொழில்நுட்ப சாதனமான மொபைல் ஃபோனை வைத்துக் கோர்த்து , பாவம் பறவைகள்! பாவம் தாவரங்கள் ! ஐயோ பாவம் மனிதர்கள் ! பூச்சிகள் தின்று கொழுத்துவிட்டால் மனிதர்கள் என்னத்தைத் தின்பார்கள் ? என்று நீங்கள் கதறும்போதே தமிழ் சினிமா ரசிகனுக்கு புரிந்து விடும் திரு.ஷங்கர் அவர்களே ! உங்களுடையது முதலைக் கண்ணீர் என்று ....

அவ்வளவு பெரிய அமெரிக்காவில் ஐந்தே செல்ஃபோன் நெட்வொர்க்தான் இருக்கிறது .... உலகின் அதிக மக்கள் தொகைக் கொண்ட சீனாவில் வெறும் மூன்றே செல்ஃபோன் நெட்வொர்க்தான் இருக்கிறது. இந்தியாவில் எதற்கு பத்து கம்பெனி? என்று நீங்கள் அழுவது அம்பானிக்காகத்தானே ஷங்கர் ஐயா ? ஜியோ சிம்மு ஓசில தரும்போதே தமிழர்களுக்குத் தெரியும்... அம்பானி தொடர்ந்து விளம்பரப்படம் எடுப்பார்னு ... அதை நீங்கள் டைரக்ட் செய்திருக்கிறீர்கள்.. அவ்வளவுதான் கதை... இதுக்குப்போயி ஐநூறு கோடி , அறுநூறு கோடின்னு வம்படியா செலவு செய்யணுமா ? இதுக்கு கார்ட்டூன் நெட்வொர்க் ஆயிரமடங்கு அதிக எண்டர்டெயின்மெண்டாக்கும்...

சிங்கப்பூரில் வெளிவரும் நாளிதழ்கள் , தொலைக்காட்சிகளில் அரசாங்கம் குறித்த எதிர்ப்பு செய்திகள், கொலை, கொள்ளை தொடர்பான எந்த செய்திகளும் வெளியாகாது. சமூக வலைத் தளங்களில் அவதூறு பரப்பமுடியாது. ஏனெனில் அது மன்னராட்சி முறையைக் கொண்ட நாடு. மொபைல் நெட்வொர்க்குகளும் அரசின் நேரடிக் கண்காணிப்பிலேயே இருக்கும். அதை மீறியாரும் செயல் பட முடியாது.

இதுதான் இந்தியாவின் மீதி சிங்கப்பூர் திட்டம். மற்ற அனைத்து மொபைல் நெட்வொர்க்குகளையும் பால் ஊற்றி மூடி விட்டு, ஒரே ஒரு மொபைல் நெட்வொர்க் மட்டும் வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப் பட்ட படமோ என்று தோன்றுவதுதான் லேசாக இடிக்கிறது.

கடைசிக்காட்சியில் துப்பாக்கிக் குண்டடி பட்ட ரஜினி மருத்துவமனையில் தோன்றி , தொழில்... நுட்ப... மேல்லாம்... ஷரிதான்... ஆனா... அது... வேறே உய்ரினங்களே பாதிக்காமே இர்க்கோனும் ! என்று பிடில் வாசிப்பதோடு படம் முடிகிறது.

ஒருமுறை கூட பார்க்க முடியாத இந்தப் படம் ஷங்கரின் ரசிகர்களான எங்களுக்கு எழுத்தாளர்.சுஜாதாவின் மறைவு குறித்த கவலையையும், ரஜினி ரசிகர்களுக்கு அதீத பணச் செலவையும் ஒருசேர ஏற்படுத்தி ஏமாற்றியிருக்கிறது.

எந்திரன் 2.0 கள்ளிப்பால், ஜியோ வெர்ஷன் 3.0 மனப்பால்...

0 Comments

Write A Comment