Tamil Sanjikai

இதுவரை தமிழ் நகைச்சுவை நடிகர்கள் ஒருவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு ஒன்று நடிகர் யோகிபாபுவுக்கு கிடைக்கவுள்ளது. மிக விரைவில் அமீர்கானின் இந்திப்படம் ஒன்றில் நடிக்க மும்பை செல்லவுள்ளார் யோகி பாபு. ஏற்கனவே இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய் சேதுபதியின் சிபாரில்தான் இந்த வாய்ப்பு யோகிபாபுவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஜெமிக்கிஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986ல்- வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பெயர் பெற்று, உலகளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.

இந்நிலையில், அப்படத்தில் நடிப்பது தனது நீண்டநாள் கனவு என்று பேட்டிகளில் அடிக்கடி சொல்லி வந்த அமீர்கான் ஒரு வழியாக அப்படத்தைசில மாதங்களுக்கு முன்பு தொடங்கினார். லால் சிங் சிட்டா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் அமீர்கானின் ராணுவத் தோழனாக தமிழக ராணுவ வீரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அதே ராணுவ வீரர்கள் தொடர்பான காட்சியில் நடிக்க தமிழ் நடிகர் ஒருவரை அமீர்கான் கேட்க, சற்றும் யோசிக்காமல் யோகிபாபுவின் பெயரைச் சொல்லியுள்ளார் விஜய் சேதுபதி.

தமிழில் ரஜினி உட்பட அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் படுபிசியாக நடித்துவரும் யோகிபாபு தற்போது இந்திக்கும் செல்லவிருப்பது கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தியாகியிருக்கிறது.

0 Comments

Write A Comment