Tamil Sanjikai

கன்னட எழுத்தாளரும் பிரபல நடிகருமான கிரிஷ் கர்னாட் ( வயது 81) பெங்களூரில் இன்று காலை காலமானார்.

அவர், தனது குடும்பத்தாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில், சிகிச்சை பெற்று அவர், பெங்களூரில் வைத்து இன்று காலை காலமானார். கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், எழுத்தாளர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

1938-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி மும்பையில் பிறந்த கிரஷ் கர்னாட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் நாடக எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் மேடை நாடகங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். இவரின் "ராக்ட் கல்யாண்" சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தமிழில் குணா, காதலன், செல்லமே, ரட்சகன், ஹேராம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தாது மட்டுமில்லாமல் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கிரிஷ் கர்னாட்டின் திறமையை பாராட்டும் விதமாக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவப்படுத்தியுள்ளது.

தமிழில் இயக்குநர் ஷங்கரின் காதலன் படத்தில் நக்மாவின் அப்பாவாக நடித்திருந்த கிரிஷ் கர்னாட் எதார்த்தமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்திருப்பார். வில்லன் வேடத்திலும் குணச்சித்திர வேடத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். நடிகர் சூர்யாவின் "24" படம் தான் கிரிஷ் கர்னாட்டின் கடைசி தமிழ் படம் ஆகும்.

0 Comments

Write A Comment