கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் லஞ்சம் வாங்கும் இளம் கமலை தாத்தாவாக வரும் கமல் விமானநிலையத்தில் புகுந்து கத்தியால் குத்துவார். பின்னர் அவர் தப்பி செல்லும் வேன் டேங்கர் லாரியில் மோதி தீப்பிடிக்கும். அந்த விபத்தில் இந்தியன் தாத்தா செத்து விட்டதாக கருதுவார்கள்.
ஆனால் அவர் வெளிநாட்டில் இருப்பதுபோல் படத்தை முடித்தனர். 22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் மீண்டும் இணையவிருக்கின்றனர். இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியன் தாத்தா, இந்தியா திரும்புவது போல் கதையை ஆரம்பிக்கின்றனர்.
இந்தியன் 2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இந்த படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலிடமும், கமலின் இளமை தோற்றத்தில் நடிக்க துல்கர் சல்மானிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியாகி இருந்தது.ஆனாலும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன்-2 படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. படத்திற்காக கமல்ஹாசன் தீவிரமாக தயாராகி வருகிறார்.
0 Comments