Tamil Sanjikai

1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார்.

அதன்பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிக் பிரதர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளராகவும் ஆனார். தற்போது டி.வி. நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஷில்பா ஷெட்டி 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். இந்தியில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த படத்தை சபீர்கான் இயக்குகிறார். இதுகுறித்து ஷில்பா கூறும்போது, “இயக்குனர் சபீர்கான் சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. இதில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

0 Comments

Write A Comment