Tamil Sanjikai

இயக்குனர்.மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளும், இயக்குனர். மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானமும் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன. மனுவின் பெருமைக் கதைகளைப் பேசும் ஒருவரும், மனுவால் தாங்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்துப் பேசும் ஒருவரும் தத்தமது படைப்புகளை ஒரே நேர்கோட்டில் இணைப்பது சாத்தியமா?
மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட ஒரு படமும், எவ்வித பிரபல்ய அடையாளமுமற்ற ஒரு சாமானிய முகத்தையுடைய ஒரு நடிகனின் படமும் எப்படி போட்டியிட முடியும்? அதுதான் வரும் 28ஆம் தேதி நடக்கவிருக்கும் சம்பவம்...

இதிகாச, புராணக் கதைகளைத் தன்னுடைய கதாபாத்திரங்களில் புகுத்தி நடமாட விடுவது மணிரத்னத்தின் யுத்தி. கதைக் களமும் அப்படியே அமைத்து விடுவது மேற்படியாரின் படைப்புத் தந்திரம். நல்லவன் வாழ்வான், தீயவன் கொல்லப் படுவான் என்று மறைநீதியைத் தூக்கிப் பிடிப்பது என்பது ஒரு பொதுவாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், நல்லவன் மனு சார்ந்தவனாகவும், தீயவனை மனுவுக்கு எதிரானவனாகவும் சித்தரிப்பதுதான் மனுதர்மமாய் சினிமாவில் சித்தரிக்கப் படுகிறது.

இதை ஒருசார்பு தத்துவமாக எடுத்துக் கொண்டு, மனு சாராத மற்ற அனைத்து மனிதர்கள் மீதான போர் என்று எடுத்துக் கொள்ளலாம். இதை மணிரத்னத்தின் டெம்ப்ளேட் வடிவ சாதீயப் பீத்தல் எனக் கொள்வதா? அல்லது புராண, இதிகாசக் காதல் எனக் கொள்வதா? அல்லது அவர் தன் படங்களின் வாயிலாக சமூக மாற்றத்தை முன்னெடுக்கிறாரா? அப்படியானால் அது என்ன மாதிரியான மாற்றம்? என்று நிறைய கேள்விகள் நமக்குள் எழும்.

ஆனால் ஒரு உரிமை மறுக்கப் பட்ட இனத்திலிருந்து ஒரு ஈனக்குரல் அபஸ்வரத்தில் ஒலிக்கும் போது அந்தக் குரல் இச்சமூகத்தில் ஒரு அபலைக் குரலாகவும், ஓலமாகவும் அல்லது சாதீயவாதமாகவும் எப்படி மாறிப் போகிறது என்பதுதான் கேள்வி.

சாதியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடலாம், ஆனால் ஒரு சாதியின் வலியைப் பதிவு செய்யக் கூடாது என்பதெல்லாம் என்ன மாதிரியான கருத்தியல் என்பதுதான் இங்கே நாம் சந்திக்கும் புதிர்.

இங்கே அடுத்த பிரச்சினை என்னவென்றால், பரியேறும் பெருமாளின் தயாரிப்பாளர் கபாலி, காலா படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித் என்பது இன்னும் உறுத்துகின்ற ஒரு விஷயம். இலங்கைக் காரர்களான லைக்கா ப்ரொடக்ஷனை ஏற்றுக் கொள்ளும் இந்த மனிதர்கள், இந்த மண்ணின் மைந்தனை ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். அதுதான் ஆதிக்க சாதி மனோபாவம்.

மேலும், இந்த இரண்டு படங்களின் வெளியீடுகளையும் வியாபார ரீதியில் பார்த்தாலும் கூட பா.ரஞ்சித் எடுப்பது விபரீத முயற்சி.

விற்கும் பொருள் என்னவென்பது விற்பவனுக்குத் தெரியும். கவர்ச்சிகரமான அட்டைப் படம் புத்தகத்தைச் சொல்லாது. நுகர்ந்தவனுக்கே மலரின் வாசம் புரியும். ஆனாலும்கூட சினிமாவுக்கென்று தமிழ் நாட்டில் சில சாதீய வன்புரிதல்கள் நிறைய உண்டு. சாதியை ஆதரித்தாலும் ரஜினிக்காக கபாலியையும், காலாவையும் கண்டுகளித்தோர் உண்டு. அதுதான் கலை யுத்தி. கசப்பு மருந்தை சர்க்கரை கலந்து ஊட்டும் தாயின் கைகள் ரஞ்சித்தின் சினிமாவாக இருந்தது.

எந்த வகையிலெல்லாம் இந்த மண்ணின் பிள்ளைகளுடைய கல்வியும், உரிமைகளும் மறுக்கப் படுகிறது என்பதை இந்த நாட்களில் மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூக நீதி மறுக்கப் படுவது எல்லார்க்கும் தெரியும். ஆனால் யாரும் வாயே திறப்பதில்லை. ஏனென்றால் சாதியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறோம். ராமாயணமும், மகாபாரதமும் ஒரு கல்வியாய் ஓதப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த பஞ்சகாலத்தில், எதிர்காலத்தில் சோறு போடப் போகும் கல்வி சொட்டு நீர்ப் பாசனம் வறண்ட நிலத்தில் பெய்யப் படுவதைத் தோலுரிக்கும் படம்தான் பரியேறும் பெருமாள்.

மக்கள் புராதனப் புனைவுகளைத் தொட்டு நக்குகிறார்களா? தங்கள் எதிர்கால விதையை மண்ணில் விதைக்கிறார்களா என்பதைக் காலம் கணிக்கட்டும். ஏனென்றால் இது நூலோடு கோல் மோதும் காலம். எழுதுகோல்களே எங்கள் நூல்களின் ஆதார ஸ்ருதி. மாறாக தோள்களில் கிடக்கும் நூற்செங்கோல்களல்ல.... ஏனென்றால் இது எங்கள் சொந்த மண். எங்களை நாங்கள் பெற்ற கல்வியே ஆளும். எங்கள் கல்வி மறுக்கப் பட்டால் நாங்கள் கற்ற நூல்களே உங்களுக்கு கோலாய் மாறும் என்கிறான் பரியேறும் பெருமாள்.

வானம் சிவக்குமா? குதிரை குதிக்குமா? என்பது வரும் 28ஆம் தேதி தெரியும்.

0 Comments

Write A Comment