Tamil Sanjikai

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘பேட்ட’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த ஜுன் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதியில் முடிவடைந்தது. இதனிடையே படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை விரைந்து முடித்த படக்குழு பொங்கலுக்கு படம் திரைக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படம் ரிலீசை நெருங்கி வரும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பேட்ட படத்தின் முதல் பாடல் டிசம்பர் 3-ஆம் தேதியும், இரண்டாம் பாடல் 7-ஆம் தேதியும், எஞ்சிய அனைத்து பாடல்களும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகும் என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது முதல் பாடலின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மரண மாஸ் என்று தொடங்கும் இந்தப் பாடல் திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment