பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், பிரதமர் ஆனபின்பு அவர் நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவை இந்த படத்தில் உள்ளன.
இந்த படத்தை ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் இந்த படம் நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள். அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் படம் 11-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும் என மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மோடியின் பயோபிக்கை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. என்.டி.ஆர்.லட்சுமி, கே.சி.ஆர். பயோபிக் படங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத்திரைப்படங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதற்கு வாய்ப்பு உள்ளது, எனவே தடை விதிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
0 Comments