Tamil Sanjikai

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் அரசு மக்களுக்கு கொடுக்கும் இலவசங்களை தவறாக விமர்சித்திருப்பதாகவும், படத்தின் வில்லி கதாபாத்திரத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்திருப்பதாகவும் கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில திரையரங்குகளில் சர்கார் படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, தமிழக அரசின் எதிர்ப்புக்குள்ளான சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கைது செய்யப்படுவார் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சர்கார் பட இயக்குநர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இயக்குநர் முருகதாஸை நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தனது வாதத்தை வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், 'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார். அரசின் கோரிக்கை குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கமளிக்க உத்தரவிட்டு முன் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது இந்த மனு மீதான விசாரணையின் போது சர்கார் படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்கமுடியாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் காட்சி அமைப்பது எனது சுதந்திரம் என்றும், இனிவரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்திரவாதமும் தர முடியாது என்று முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment