நடிகர் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மாரி 2’ படம் உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் முதல் பாடலை வெளியிட்டிருக்கும் படக்குழு டிசம்பர் 21-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநாளில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் கனா படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 21-ஆம் தேதி இந்த இரு படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் டிசம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 80 வயது முதியவராக விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். சீதக்காதி வெளியாகும் அதேநாளில் ஜெயம் ரவி நடித்திருக்கும் "அடங்க மறு" படமும் வெளியாகிறது. டிசம்பர் மாத இறுதியில் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியாகும் இந்தப் படங்கள் வெளியாகின்றன.
0 Comments