Tamil Sanjikai

உலகளவில் நடைபெற்ற ‘தி வேல்ர்ட்'ஸ் பெஸ்ட்' (The World's Best) என்ற நிகழ்வில், தன் பியனோ இசைத் திறமையால் டைட்டில் வென்று, சர்வதேச அரங்கில் மிளிர்ந்தவர் 13 வயதே ஆன சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். லிடியன் இசை பயின்றது சென்னையிலுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி.

லிடியனை ஊக்குவிக்கும்பொருட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவருக்குப் பாராட்டு விழா நடத்தினார். அப்போது பேசிய ரஹ்மான்,"லிடியன் தற்போது சர்வதேச கவனத்தை சென்னை இசைக்கலாசாரம் பக்கம் திருப்பியிருக்கிறார். இவரைப் பயிற்றுவித்ததற்குப் பெருமைகொள்கிறேன். சினிமாக்களில் என்னோடு அவர் இசையமைப்பதைவிட, வெவ்வேறு உயரங்களைத் தொட வேண்டும். அவருள் நல்ல ஒரு எதிர்காலத்தைப் பார்க்கிறேன்" என்றார்.

இதற்கிடையே, தொடர்ந்து தனது செயல்பாடுகளால் கவனம் ஈர்த்துவந்த சிறுவன் லிடியன் தற்போது ஒரு திரைப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். அதுவும் மலையாள சினிமாவில். மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் முதல்முறையாக `பரோஸ்' படத்தின் மூலம் இயக்குநராக மாறவுள்ளார். பல மொழி திரைப்படமாக அவர் இயக்கும் இந்தப் படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்தப் படத்துக்குதான் லிடியன் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.

நேற்று நடந்த படத்தின் தொடக்க விழாவில் லிடியனை அறிமுகப்படுத்தினார் மோகன்லால். சிறுவர்களுக்காக இந்தப் படம் தயாராகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்றாக ஏ.ஆர். ரஹ்மானால் வர்ணிக்கப்பட்டுள்ள லிடியன் தற்போது திரைப்படத்துக்கு இசையமைக்க உள்ளதால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

0 Comments

Write A Comment