Tamil Sanjikai

மூச்சுத் திணறல் காரணமாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று அதிகாலை மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் லதா மங்கேஷ்கர் சிகிச்சையில் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, அவர் தனது சமூக ஊடக கணக்கில் வரவிருக்கும் பானிபட் படத்தில் நடித்ததற்காக நடிகை பத்மினி கோலாபுரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

லதா மங்கேஷ்கர் செப்டம்பர் 28 அன்று 90வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது, நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என இப்படி பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.

தன்னுடைய நான்கு வயதிலேயே பாடத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய திரையுலகில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார்.

0 Comments

Write A Comment