2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சி தொடங்கப்பட்ட பின்னர், இந்தியன் 2 படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
இந்நிலையில் “தலைவன் இருக்கின்றான்” திரைப்படம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் “ ஒன் அண்ட் ஒன்லி கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து மகத்தான பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் இதனை உறுதிசெய்த கமல்ஹாசன் “ உங்கள் பங்களிப்பால் எங்கள் அணியை வலுப்படுத்த உள்ள ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி. நாம் இணைந்து உருவாக்கிய படங்களில் ஒரு சில படங்களே சிறப்பானதாகவும், நன்றாகவும் வந்திருக்கின்றன. தலைவன் இருக்கின்றான் படமும் அதுபோன்ற சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தின் உற்சாகத்தின் அளவு மிகவும் பரவக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை நம் குழுவின் மற்றவர்களுக்கு பரப்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 3 முடிந்த பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2000-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் தெனாலி படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அதன்பின்னர் தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் இசைப்புயலும், உலகநாயகனும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments