Tamil Sanjikai

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

சின்னப்புள்ள' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், 2008-ல் வெளியான 'நாயகன்' படத்தில் நாயகனாகவும், பெண்சிங்கம் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்தார். 2009 மக்களைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியிலிருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியம் பெற்றார். அது மட்டுமன்றி தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கப் பணிகளிலும் முனைப்புடன் இவர் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டு தி.மு.க-விலிருந்து விலகிய இவர், அ.தி.மு.க-வில் இணைந்து தனது அரசியல் பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார்.

இவர் தற்போது ராமநாதபுரம் ராஜா சேதுபதி நகரில் உள்ள இவரது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி ராமநாதபுரம் வந்த நிலையில், இவர் போகலூர் பகுதி நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர்து உதவியாளர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ரித்தீஷை தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரித்தீஷின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.

பரபரப்பாகத் தேர்தல் பணிகள் நடந்துவரும் வேளையில் இவரது இறப்பு அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாது சினிமா வட்டாரங்களில் உள்ளவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறப்புக்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

Write A Comment