Tamil Sanjikai

நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘‘பி.எம். நரேந்திரமோடி” எனும் திரைப்படம் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது

இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கான முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குப் பிறகு இந்தத் திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அதை வெளியிடுவதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோத் பல்பாசு ஆகியோர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்களை திங்கள்கிழமை நேரில் சந்தித்து, நரேந்திரமோடியின் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு மனு அளித்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகாரை தொடர்ந்து பி.எம்.நரேந்திரமோடி என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, பி.எம்.நரேந்திரமோடி படத்தின் போஸ்டர்களை வெளியிட்ட 2 செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 Comments

Write A Comment