நகைச்சுவை நடிகர் கருணாகரன் மீது "பொதுநலன் கருதி" திரைப்படத்தின் இயக்குநரும், இணை தயாரிப்பாளரும், சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி வெளியான திரைப்படம் பொதுநலன் கருதி. ஸியோன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் 3 கதாநாயகர்கள் உள்ளனர், அதில் ஒருவராக கருணாகரன் நடித்து இருக்கிறார். அவர் மீது தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில். படத்தின் இயக்குனர் ஸியோனும், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தும் புகார் அளித்துள்ளனர். அதில், கருணாகரனுக்கு படத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளிலும் அழைத்த போதும் கருணாகரன் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து விஜய் ஆனந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கருணாகரன் மிரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கருணாகரனிடம் இருந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ஸியோன் ஏற்கனவே கந்துவட்டிக்காரர்களால் படத்தை வெளியிட சிக்கல்களை சந்தித்ததாகவும், தற்போது கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே கருணாகரன் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நடிகர் சங்க தலைவர் நாசர் ஆகியோரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments