கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான படங்கள், அதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரும் சர்ச்சையில் சிக்குகின்றன. பொழுதுபோக்கை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து, அதில் ஒரு சர்ச்சை வருவது என்பது இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
இந்த சர்ச்சைகள் பாலிவுட்டிற்கும், கோலிவுட்டிற்கும் புதியதல்ல. அந்தவகையில் திரையில் வெளிவந்து சர்ச்சைக்குள்ளான படங்கள் பல இருக்கின்றன. பாபா, விருமாண்டி, படங்களைப் போல "விஸ்வரூபம் 1" படம் கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்த படம் பெரும் பிரச்சனைக்கு உள்ளானது.
இந்த படத்தை முதலில் DTH-ல் வெளியிடப் போவதாக நடிகர் கமல் அறிவித்த போது, அதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பினையடுத்து DTHல் வெளியிடும் திட்டத்தை கமல் கைவிட்டார். இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி இதற்கு தடை விதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்த இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கூறி இப்படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று கூறியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. ஒருவழியாக கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வர, இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
அது போல 2013-ம் ஆண்டில் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சனை முடிந்த சில மாதங்களில் விஜய் நடித்த "தலைவா" படமும் சர்ச்சைக்குள்ளானது. தலைவா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் இப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்ட நாளன்று மாலை, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார் விஜய். ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவில்லை. பின்னர் தலைவா படத் தலைப்பில் Time to Lead என்ற வாசகத்தை எடுத்த பிறகு படம் வெளியானது.
இதே மாதிரி துப்பாக்கி போன்ற பல்வேறு படங்கள் பெரும் சர்ச்சைக்கு பிறகே வெளியானது. அது போல சமீபத்தில் இந்திய அளவில் பத்மாவத் திரைப்படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் திரைப்படத்தில் முஸ்லிம் பேரரசர் அலாவூதின் கில்ஜி, ராஜபுத்ர இளவரசியான பத்மாவதியும் நெருக்கமாக இருப்பது போல காட்சிகள் இருப்பதாகவும், இந்து அமைப்புகள் மற்றும் ராஜபுத்ர அமைப்புகள் சிலவும் குற்றம் சாட்டின. படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. தீபிகா படுகோனின் தலையை வெட்டி விடுவோம் என்ற அச்சுறுத்தலும் கர்னி சேனாவிடம் இருந்து வந்தது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது. தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுகள் விதித்த தடை பேச்சுரிமைக்கு எதிரானது. இந்திய தணிக்கை குழுவினால், தணிக்கை செய்யப்பட்டு வெளியாக இருந்த படத்தை தடை செய்திருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அந்தவகையில் ,தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் திரைப்படம் விஜய் நடித்த சர்கார். தமிழக அரசையும், அரசின் திட்டங்களையும் விமர்சித்து மறைமுகமாக இப்படம் விமர்சிக்கிறது என ஆளும் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் சில காட்சிகளை நீக்க சம்மதித்தது. படத்தை படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் சர்காருக்கு ஆதரவு கொடுக்கின்றனர் .
0 Comments