சிறுவயதில் தாய்தந்தையை இழந்த கர்ணன் திருட்டுத்தனங்கள் செய்துவருகிறான். போலீஸ் வேலைக்குப் போனால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று படித்தும், காசுகொடுத்து சான்றிதழ்கள் வாங்கியும் தகிடுதத்தங்கள் செய்து இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்கிறான். காசுமழை பொழிகிறது. பிணத்தையும் பேரம் பேசி விற்கிறான்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் காளிராஜன் தன்னுடைய தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்கும் இன்ஸ்பெக்டருக்கு மாற்றாக தன்னைவிட ஒரு அயோக்கினை இங்கு மாற்றல் செய்யவேண்டி மந்திரியிடம் கேட்க, மந்திரியும் தூத்துக்குடியில் இருந்து கர்ணனை சென்னைக்கு மாற்றல் செய்கிறார்.
சென்னைக்கு மாற்றலாகி வந்த கர்ணன் காளிராஜனுக்கு பக்கபலமாக இருந்து, காளிராஜனின் போக்கிரித்தனங்களுக்கு துணை நிற்கிறார். இடையில் ஒரு பெண்ணோடு காதல் மலர்கிறது. ஒருகட்டத்தில் காளிராஜன் & கோ ஒரு பெண்ணைக் கொலைவெறியில் துரத்துகிறது.
அந்தபெண்ணிடம் ஒரு கேமரா இருக்கிறதென்றும், அதில் தங்கள் தம்பிகள் நால்வரின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்றும் அந்த கேமரா தனக்கு வேண்டும் என்றும் காளிராஜன் உத்தரவிட அதைத் தேடிப்போகும் கர்ணனுக்கு அந்த கேமராவில் இருப்பது பவானி என்னும் பெண்ணை நால்வர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொல்லும் வீடியோ ஆதாரம் என்றும், காளிராஜன் கொள்ள நினைக்கும் அந்தப் பெண் சந்தியாவின் உடன்பிறந்த தங்கை என்றும் தெரிய வர, கர்ணன் மனம்திருந்தி அந்த நால்வரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றத் தயாராகிறார். அப்போது அந்த வீடியோ ஆதாரம் அழிக்கப் படுகிறது. ஆதாரமே இல்லாமல் விடுதலையாகப் போகும் அந்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க கர்ணன் என்ன செய்கிறார் என்பதுதான் அயோக்யா படத்தின் கதை.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை நினைவில் கொண்டு கதை பின்னப்பட்டு, பாலியல் குற்றவாளிகளுக்கு எந்த நிபந்தனையுமின்றி இருபத்தி நான்கு மணிநேரத்தில் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் அயோக்யா.
எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்காக இயக்குனர் வெங்கட் மோகனுக்கும், நடித்துக்கொடுத்த நடிகர் விஷாலுக்கும் பாராட்டுக்கள்.
எல்லாத் திரைப்படங்களும் இப்படித்தான் வரவேண்டும் என்ற சட்டங்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட வெறும் சண்டைக்காட்சிகளாலும், அதிரடி வசனங்களாலும் ஒரு படத்தை எடுத்துவிட வேண்டும் என்ற போக்கு தமிழ் சினிமா கைவிடவேண்டிய ஒன்றாகும். லாஜிக் பார்க்க வேண்டாமென்றால் பார்க்கத் தேவையில்லைதான். ஆனாலும் படம் பார்ப்பவரை லாஜிக் மீறல் என்ற உறுத்தலில்லாமல் பார்க்க வைப்பதுதான் படத்தின் வெற்றி ஆகும்.
ஃபேண்டசி ஜானரில் படம் எடுக்கும் போது லாஜிக் தேவை கிடையாது. யானையைக்கூட பறக்க வைக்கலாம். ஆனால் நீதிமன்றம், சட்டங்கள், காவல்துறை, ஒரு முக்கியமான சம்பவங்களின் தொகுப்புகளை திரையில் வைத்து திரைக்கதை பின்னும் போது கவனமாக இருத்தல் அவசியமாகிறது.
முக்கியமான விஷயம் என்னவென்றால் படத்தின் முக்கியமான லாஜிக் ஓட்டை என்பது ஸ்டோரிலைன்தான். ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் கும்பலின் தலைவன் ஒரு சாதாரண இன்ஸ்பெக்டருக்குப் பயந்து தூத்துக்குடியில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டரை வரவழைப்பது, அதுவும் கூட ஒரு மந்திரியின் உதவியோடு.... மந்திரி நினைத்தால் கமிஷனரையே மாற்றலாம் என்பதுதானே லாஜிக் ?
இன்ஸ்பெக்டர் கர்ணனாக விஷால். இப்போதெல்லாம் விஷாலின் பட போஸ்டர்களின் இருக்கும் தலைப்பைப் பார்த்துதான் படங்களை வேறுபடுத்த வேண்டியிருக்கிறது. எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான முகம், சிகையலங்காரம், பாடிலேங்குவேஜ். மாற்றங்கள் தேவை விஷால் அவர்களே !
முதல் காட்சியில் விஷாலின் மண்டையை உடைத்து, மணலில் புதைக்கும்போதே பிறிதொரு காட்சிகளுக்குப் பின்னர் அந்த மணல்குவியலில் இருந்து ஒரு கைமுளைத்து விஷால் வெளியே வருவார் என்பது ஆடியன்சுக்குத் தெரிந்து போவதுதான் ஆகப்பெரிய சோகம்.
அதிலும் காமெடி என்னவென்றால் இரும்புக் கம்பிகளால் அத்தனை அடிகளை வாங்கிக்கொண்டு புதைந்து கிடக்கும் விஷால் வெளியே வந்து அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்வார் என்று பார்த்தால் காலையில் எழுந்து சட்டையைப் போட்டுக்கொண்டு ஏதோ ராத்திரி கொசு கடித்த மாதிரி முகத்தில் சிறிய தழும்போடு கோர்ட்டுக்குப் போவதெல்லாம் என்ன மாதிரியான காமெடி என்றுதான் தெரியவில்லை.
விஷால் வாங்கும் அடிகளும், அதற்குப் பின்னணியில் ஒலிக்கும் சப்தங்களும் ஒருவனுக்கு நிஜ வாழ்க்கையில் கிடைத்தால் அவனது பாடியைப் போஸ்ட்மார்ட்டம் செய்வது கஷ்டம் என்று டாக்டர்கள் சொல்லிவிடுவார்கள்.
போலீஸ்காரர்கள் பிடித்து வைத்து, எஃப்.ஐ.ஆர் போடப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகள், பழைய இன்ஸ்பெக்டருக்கு சலாம் போட்டு அனுப்பி புது இன்ஸ்பெக்டர் தூத்துக்குடியில் இருந்து வந்து தப்ப விடும்வரைக்கும் லாக்கப்பில் வாசம் செய்வது என்ன லாஜிக்கோ ?
இறைவா காப்பாற்று என்று உட்கார்ந்தால் அடுத்தடுத்த காட்சிகளில் வைத்து வெளுக்கிறார்கள். சத்தமோ சத்தம் ! விஷாலின் வாய்ஸ் மாடுலேஷன் வேறு பயங்கரம். இப்படியெல்லாம் ஒரு காவல் நிலையத்தில் நடக்குமா என்ற ஐயம் எழுந்து விடுகிறது. கருப்புநிறக் காரில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி, போலீஸ் விளக்கு வைத்து என்று நிறைய காமெடிகள்...
இத்தனை கசவாளித் தனங்களைச் செய்கிறாரே விஷால் என்று நினைத்து, ஒருவேளை விஷாலின் கேரக்டரை ஜஸ்டிஃபை செய்வார்களோ நினைத்தால் விஷால் பார்த்திபனை விட மகாவில்லனாக இருந்து திருந்துகிறார்.
காளிராஜனாக பார்த்திபன். தன்னுடைய கதாபாத்திரத்தை ஒழுங்காகச் செய்துவிடும் நடிகர்களில் ஒருவர் பார்த்திபன். இதிலும் அப்படித்தான்.. ஒரு சிறிய வார்த்தைப் பிரயோகத்தில் சிக்சர் அடித்துவிடும் கேரக்டர் அவருடையது. விஷாலோடு மல்லுக்கு நிற்பது, டயலாக் டெலிவரி, பாடிலேங்குவேஜ் என்று போட்டுத் தாக்குகிறார்.
ஏட்டு காதராக கே.எஸ்.ரவிகுமார். நடிப்பில் நிறைவு என்றாலும் கூட ஒரு இயக்குனராக சில திருத்தங்கள் செய்து கொடுத்திருக்கலாம். விஷாலின் கூடவே திரிந்து கொண்டு அரைமணிநேர நன்னெறிப் பாடங்கள் எடுப்பது, திருந்திய விஷாலிடம் வந்து நின்று, எழுந்திரு அஞ்சலி ! எழுந்திரு ! என்கிற ரீதியில் உட்கார்ந்து டயலாக் பேசிவிட்டு , சல்யூட் அடிப்பதெல்லாம் விசு காலத்து எஃபெக்ட்.
இயக்குனர் அவர்கள் தொண்டிமுதலும், திருக்ஸாஷியும், ஆக்சன் ஹீரோ பிஜு போன்ற மலையாளப் படங்களைப் பார்ப்பது நலம். அத்தனை டீட்டெய்லிங் இருக்கும்.
யோகிபாபு, ராகுல் தாத்தா, தேவதர்ஷினி, ஆனந்தராஜ் என்று தேவையில்லாத கதாபாத்திரங்கள். ராசி கண்ணாவும்,பூஜா தேவாரியாவும் கவனிக்க வைக்கிறார்கள். கதைக்குத் தேவையற்ற பாடல்கள், அதுவும் ரசிக்கும் படியில்லை. வழக்கமான விஷாலின் சண்டைக்காட்சிகள், பரபரக்கும் கேமரா கோணங்கள், செண்டிமெண்ட்கள், காட்டுக்கத்தல் வசனங்கள் என்று அயோக்கியாவை அலங்கோலமாக்கி வைத்திருக்கிறார்கள்.
-பிரபு தர்மராஜ்
0 Comments