தன் மூன்றாண்டுக்கால காதலனைக் கரம்பிடிக்கவிருக்கிறார் 'அவெஞ்சர்ஸ்' நடிகை, எலிசபெத் ஒல்ஸென். மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸில், ஸ்கார்லெட் விட்ச் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு வயது 30.
சுயாதீன இசைக் கலைஞரான ராபி ஆர்நெட்டும், எலிசபெத்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன் கெர்ஷ் ப்ரீ-எம்மிஸ் பார்ட்டியில் முதல் முறையாக இணைந்து கலந்துகொண்டனர். அவர்கள் அதற்கு ஓராண்டுக்கு முன்னதாகச் சந்தித்ததாகவும், அதன்பின் நட்பு காதலாகி, ராபி முதலில் அதை வெளிப்படுத்தியதாகவும் எலிசபெத்துக்கு நெருக்கமான சிலர் கூறுகின்றனர். இருப்பினும், அவர்கள் காதலிப்பதாக வெளியான செய்திகள் உண்மையா பொய்யா என்பதை இதுவரை இருவரும் ஏற்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவர்கள் இருவரும் கைகோத்து நியூயார்க் நகரில் உலா வந்ததையும் பல அமெரிக்கச் செய்தித்தாள்கள் படம்பிடித்து வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தச் செய்தியால், அவர்களுடைய காதல் குறித்த தகவல்கள் எல்லாம் உண்மைதான் என உறுதியாகியுள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இப்போது அவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் ரகசியமாக நடைபெற்றதாகவும் ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே ஹாலிவுட் நடிகரும் இயக்குநருமான பாய்டு ஹால்ப்ரூக்குடன் எலிசபெத்துக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு அவர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
0 Comments