நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அந்தப் படத்ததைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 9,000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இரு பரிமாணத்திலும் முப்பரிமாணத்திலும் இந்தப் படம் வெளியானது.
அமெரிக்காவில் மட்டும் மூன்று மொழிகளிலும் சேர்த்து சுமார் 850 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. மலேசியா, பிரிட்டன், வளைகுடா நாடுகளிலும் இந்தப் படம் வழக்கமாக தமிழ் படம் வெளியாகும் திரையரங்குகளைப் போல இரு மடங்கு திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1080-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 480 திரையரங்குகளில் 3-டி தொழில்நுட்பம் உள்ளது. இந்தத் திரையரங்குகள் அனைத்துமே 3 டி முறையில்தான் 2.0 திரைப்படத்தை வெளியிட்டன.
இந்தப் படம் வெளியாகி நான்கு நாட்கள் கடந்திருக்கும் நிலையில், உலகம் முழுவதுமாக நான்கு நாட்கள் வசூல் சுமார் 400 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக படத்தைத் தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த வசூலில் பெரும்பகுதி, முப்பரிமாணத்தில் வெளியான திரையரங்குகளில் இருந்தே வந்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முத்து திரைப்படத்திற்குப் பிறகு, ரஜினியின் படங்களுக்கு சீனாவிலும் ஜப்பானிலும் சந்தை உள்ள நிலையில் இந்த இரு நாடுகளிலும் இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. சீனாவில் படத்திற்கான தணிக்கை முடியவே மூன்று மாதங்களாகும். அதற்குப் பிறகே அங்கு படத்தை எப்போது வெளியிட முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்கிறது தயாரிப்புத் தரப்பு. அதேபோல, ஜப்பானில் ரஜினிக்கென ரசிகர் வட்டாரம் உள்ள நிலையில், ப்ரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அதன் பிறகு ரிலீஸ் தேதி முடிவுசெய்யப்படுமெனவும் தயாரிப்புத் தரப்பு தெரிவிக்கிறது.
0 Comments