திரைப்படங்கள் மற்றும் பிரபலமான தொலைக்காட்சி சீரிஸின் ரேட்டிங்கை வெளியிட்டுவரும் பிரபல இணையதளமான ஐ.எம்.டி.பி (Internet Movie Database) 2018ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் சில தமிழ்படங்களும் இடம்பெற்றிருப்பது தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எம்.டி.பி மதிப்பீட்டை வைத்து ஒரு படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கக்கூடிய அளவிற்கு திரை ரசிகர்களிடையே நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது ஐ.எம்.டி.பி. அதனால், இந்நிறுவனம் வெளியிடும் சிறந்த படங்களின் பட்டியல் மற்றும் மதிப்பீடு சினிமா ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும்.
பெரும் சர்ச்சைக்கிடையே வெளியான சர்க்கார் திரைப்படம், ரஜினியின் 2.0 திரைப்படம் இந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது விஜய், ரஜினி ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ராட்சசன் மற்றும் 96 திரைப்படம் சிறந்த படங்களின் பட்டியலில் 2ம் மற்றும் 3ம் இடத்தையும் பிடித்திருப்பது தமிழ்ப்பட ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்ற ஆண்டு விக்ரம் வேதா, பாகுபலி 2, மெர்சல் ஆகிய மூன்று தமிழ் திரைப்படங்கள் டாப் 10 இந்திய சினிமாக்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2018ம் ஆண்டின் சிறந்த 10 இந்திய திரைப்படங்கள்:
1. அந்தாதுன் - இந்தி
2. ராட்சசன் - தமிழ்
3. 96 - தமிழ்
4. மகாநதி - தெலுங்கு ( நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியானது)
5. பதாய் ஹோ - இந்தி
6. பத்மன் - இந்தி
7. ரங்கஸ்தலம் - தெலுங்கு
8. ஸ்ட்ரீ - இந்தி
9. ராஜி - இந்தி
10. சஞ்சு- இந்தி
0 Comments