Tamil Sanjikai

அதுதான் அந்த ஊர்லயே பெரியவீடு. ஆனந்த பவனம்னு பேரெழுதுன பெரிய பலக தொங்குனாலும் எல்லாரும் அத கிளிவீடுன்னுதான் சொல்லுவாங்க. தெனமும் இருபத்துநாலுதடவ அந்தவீட்லயிருந்து கிளிச்சத்தங்கேக்கும். சனிக்கெழமயில மட்டுஞ் சத்தமே கேக்காது. ஆனா யாருமே இதுநாவரைக்கும் அந்தவீட்டோட சன்னல்லயோ வாசல்லயோ ஒரு கிளியக்கூட பாத்ததில்ல. இருந்தாலும் மணிக்கொருதடவ கிளிச்சத்தங்கேக்காத ஆளேயில்ல. அது ஒரு சித்திரமாசம்.வெயிலு கொளுத்துற அந்த வேனக்காலத்துல ஊராளுக எல்லாம் களத்துமேட்டுக்கிட்ட இருக்கிற தோப்புலதான் இருப்பாங்க. அந்தத்தோப்புல இல்லாத மரமேயில்லன்னு பெருமபேசியே "பெரும்பேச்சு"னு பேருவாங்குனவரு ராவணந்தாத்தா. அவருதான் அந்தத்தோப்புக்கு எல்லாம்.

ராவணந்தாத்தாவுக்கு மூனு பசங்களும் ஒரு புள்ளயும். கடைசிப்பய பொறக்கும் போது ஜன்னிவந்ததுல சீதாப்பாட்டி செத்துப்போச்சி. ராவணந்தாத்தாக்கு பாட்டி செத்ததுல வருத்தந்தான். ஆனாலும் கடைசிப்பயல கரிச்சுக்கொட்டாம பாசமாத்தான் வளத்தாரு. அவன வளத்ததுல தாத்தாவோட ஒத்தப் பொண்ணான கைகேயியக்காவுக்கும் பெரும்பங்கு இருக்கு.

கோடவிடுமொறைக்கு நண்பனோட ஊருக்குப்போயிருந்த எனக்கு இந்தவெவரம் சுவாரசியமா இருந்ததால அவஞ்சொல்றதுக்கு உம் கொட்டுறத நிறுத்தாம கேட்டுக்கிட்டேயிருந்தேன்.

"அது ஒரு காலம்"னு சொல்ற அளவுக்கு பழசில்லன்னாலும் சுமார் பதினஞ்சி வருசத்துக்கு முன்னால நடந்ததுதான் அந்த கிளிச்சத்தத்துக்கு காரணம்னு தாத்தா சொல்லுவாரு. அப்பவே அது மாடிவீடாம். மாடியில ஊஞ்சல் தொங்கவிட வச்சிருந்த ரெண்டு இரும்புக்கொக்கிலயும் ரெண்டு கூண்டிருக்குமாம். ஒன்னுல பேச்சிக்கிளியும் இன்னொன்னுல வளவனும் வளந்தாங்களாம். ரெண்டுபேருல பேச்சிக்குமட்டுந்தான் பேச்சு வருமாம். எம்புட்டு வசம்பத்தேச்சாலும் வளவனுக்கு கீச்சுமட்டுந்தானாம். தெருவுல யாருபோனாலும் பொண்ணுங்களாயிருந்தா "அக்கா"ன்னும் பசங்கள "எளவட்டம்"னும் கூப்பிடுமாம் பேச்சி. எம்புட்டுத்தான் பேச்சுவந்தாலும் ஒருமணிநேரத்துக்கு ஒருதடவ ரெண்டுஞ்சேந்து கீக்கீன்னுதான் கத்துமாம். இதுகளுக்குள்ள ஒத்துமயப் பாரேன்னு அம்புட்டுப்பேரும் ஆச்சரியப்படுவாங்களாம். இப்படி தெருவயே கலகலப்பா வச்சுக்கிட்டிருந்த கிளிரெண்டும் ஒருநா காணமப் போயிருச்சாம்.

காணாமப்போன ரெண்டயும் ஊரே தேடுச்சாம். வாய்க்கா வரப்புன்னு ஒருயெடத்தயும் விடாம அம்புட்டுப்பேருந் தேடியும் கெடைக்கலயாம். பக்கத்துவீட்ல இருந்த பத்துவயசுப் பயபேரு ஆராய்ச்சி. கிளிக காணாமப்போன ரெண்டாவதுநாளு சனிக்கெழம விடுமொறனால வெளாண்டுக்கிட்டிருந்தானாம். கொட்டடிச்சி வெளாடுறதுக்காக கொட்டுக்குச்சி செய்ய நெனச்சிருக்கான். ரெண்டு குச்சிய எடுத்துக்கிட்டு ஊரோட கெழக்கால ரோடுபோட வெச்சிருந்த தார்டிரம்முல தாரெடுத்து குச்சியோட மொனையில உருட்டி காயவெச்சா நல்லாருக்கும்னு போயிருக்கான். அவன் குட்டையா இருந்ததால வெளிலயிருந்து தார்டிரம்முக்குள்ள குச்சிய நீட்டிக்கிட்டே எட்டியெட்டி குதிச்சிருக்கான். அப்பயும் எட்டலன்னு பக்கத்துலயிருந்த கயத்தயெடுத்து குச்சிய அதுலகட்டி டிரம்முக்குள்ள எறிஞ்சிருக்கான். அப்புறம் கயத்தப்புடிச்சி வெளிய இழுத்தா குச்சியோடசேந்து என்னமோ ஒண்ணு ஒட்டிக்கிட்டிருந்திருக்கு. கையில தாரு ஒட்டிரும்னு கயத்தோடவே வீட்டுக்கு வந்திருக்கான். அவங்கம்மாவும் கிளிவீட்டம்மாவும் பேசிக்கிட்டிருந்தவங்க இவனப்பாத்து "என்னாடா"ங்க,

கயத்தோட குச்சியக் குடுத்துருக்கான். குச்சியப்பாத்த கிளிவீட்டம்மா மயங்கி வுழுகவும் பதறிப்போன ஆராய்ச்சியோட அம்மா கத்தியிருக்காங்க. அந்தக்கத்துல பயந்துபோன ஆராய்ச்சி கய்யவொதற கயறுங்குச்சியும் காத்துல எகிறுச்சாம்.

மயங்குன கிளிவீட்டம்மாவோட நெஞ்சுமேலயே "பொத்"ன்னு விழுந்துச்சாம் ஒரு கருப்புக்கிளி. "அந்த கருப்புக்கிளி யாரு"ன்னு கேட்டதுக்கு ஒதட்டப் பிதுக்குறாரு ராவணந்தாத்தா.

இன்னிவரைக்கும் கிளிவீட்டுல கேக்குற கிளிச்சத்தம் பேச்சியோடதுன்னு சிலரும் வளவனோடதுன்னு சிலரும் கிளிவீட்டம்மாவோடதுன்னு சிலரும் சொல்லிக்கிட்டிருக்காங்க.

நடுகல் இதழ் 1 ல் வெளிவந்த கதை

 

0 Comments

Write A Comment