Tamil Sanjikai

நீர் முழுதாக வற்றி ஆகாயத் தாமரைகள் அடர்ந்திருந்த குளத்தைத் தாண்டி நீண்ட சாலையில் அவன் நடந்து கொண்டிருந்தான். சட்டென்று செங்குத்தாகக் கீழிறங்கி மீண்டும் சாலை மேடேறிய இடத்தில் தண்டவாளங்கள் தரையோடு தரையாகப் பதுங்கிக் கிடந்தன. சற்றுத் தள்ளி தண்டவாள இரும்பின் இருபுறமும் குச்சிகளை நட்டு சிவப்புத் துணியொன்றை குறுக்கில் கட்டி வைத்திருந்தார்கள். எந்தவொரு காலத்திலோ நின்று போன ரயிலுக்கான சங்கேதக் குறி. தொலைவில் ஒரு புகை மூட்டமாகத் தெரிந்த கரிபடிந்த கட்டிடம்தான் அந்த கிராமத்தின் கை விடப்பட்ட ரயில் நிலையமாக இருக்கக்கூடும்.வெளிச்சம் மங்க ஆரம்பித்திருந்தது. பொன்மஞ்சள் நிறச் சூரியன் அந்திக்குள் வீழ்ந்து கொண்டிருக்க மேகங்கள் ஏதுமின்றி நிச்சலனமாக இருந்தது வானம். ஒரேயொருவெள்ளைப்பறவை, அநேகமாக அதுவொரு நாரையாய் இருக்கலாம், அவன் நடந்து வந்ததற்கு எதிர்த் திசையில் பறந்து சென்றது. இருட்டுவதற்குள் இலக்கை அடைந்து விடவேண்டுமென்பதில் அவன் தீவிரமாயிருந்தான். சாலையின் ஓரங்களில் அங்கொன்றும்இங்கொன்றுமாக சில பனைமரங்கள்தான் இருந்தன என்றபோதும் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த வயற்காடுகள் காற்றில் ஒரு அலையைப் போல அசைந்தாடிக் கொண்டிருந்தன. சட்டென்று தலைக்கு மேல் ஏதோ வினோதமான சத்தம் கேட்க வெருண்டு போனவனாக நிமிர்ந்து பார்த்தான். ஒரு வவ்வால் கூட்டம் வானத்தை மறைக்கும் போர்வையாய்த் தலைக்கு மேலே பறந்து சென்றது. அவன் இத்தனை வவ்வால்களை ஒருசேரத் தன் வாழ்நாளில் எப்போதும் பார்த்ததில்லை. எங்கும் இடைவெளியின்றி வானத்தை நிறைத்தபடி அவை பறந்து சென்றன.

மனதின் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவன் நடையை எட்டிப்போட்டான். மனதொத்து தன்னால் இந்த வேலையில் ஈடுபடவியலுமா என்பதில் பெரும் சந்தேகங் கொண்டவனாக இருந்தான் .தனக்குச் சொல்லப்பட்ட சங்கதிகளை மீண்டும் நினைவுறுத்திப் பார்த்தான். கிராமத்தை விட்டு வெகுதொலைவு சென்ற பிறகு அலங்கார வளைவு போல ஒன்றாகச் சேர்ந்து சாய்ந்திருக்கும் இரண்டு வேப்பமரங்களை அவன் காண்பான். அதிலிருந்து பிரிந்து வலதுபுறம் செல்லும் சாலையில் இரண்டு மைல்கள் நடந்தால் அவனுடைய புதிய வேலைக்கான இடத்தைச் சென்றடையலாம். யோசித்தபடியே நடந்தவனின் கால்களில் என்னவோ இடறியது. அவன் உடலைச் சற்றே வளைத்துக் கீழே பார்த்தான். பிறந்து சில நாட்களே ஆகியிருந்த ஒரு நாய்க்குட்டி அவன் கால்களின் நடுவே தவழ்ந்து கொண்டிருந்தது. ஆச்சரியம் கொண்டவனாகக் குனிந்து அதைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் சாலையின் இடப்பக்கச் சரிவில் குட்டை போல் தேங்கியிருந்த நீரில் மேலும் சில நாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றிடமிருந்து விலகி இந்த நாய்க்குட்டி சாலையை வந்தடைந்திருக்க வேண்டும். நாய்க்குட்டியின் தாய் அருகில் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் அதை அப்படியே விட்டுப்போக அவனுக்குத் தயக்கமாயிருந்தது. தன் கரங்களை நக்கிக் கொண்டிருந்த குட்டியைத் தூக்கியபடி மெல்லச் சரிவில் இறங்கியவன் அந்தக் குட்டையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மற்ற நாய்க்குட்டிகளை அவன் நெருங்கிய தருணத்தில் எங்கிருந்து வந்ததெனத் தெரியாமல் நாயின் பலமான குரைப்புச்சத்தம் கேட்கத் தொடங்கியது. குட்டியைக் கீழே போட்டு வேகமாக ஓடி வந்து சாலையைத் தொட்டு அவன் திரும்பிப் பார்க்கையில் நாய்க்குட்டிகள் தாயிடம் பாலருந்திக் கொண்டிருந்தன. ஆசுவாசமாக உணர்ந்தவன் தனக்கான பாதையில் நடப்பதைத் தொடர்ந்தான்.

இருட்டு வெகுவிரைவாக நிலத்தின் மீது கவிந்து விட்டிருந்தது. இரவின் நிழலில் வடிவமற்ற அந்தக் கட்டிடத்தின் முன் அவன் பதைபதைப்புடன் நின்றிருந்தான். நிலவின் நீலவெளிச்சத்தில் அதன் கூரைகள் பளபளப்பதைப் பார்க்க முடிந்தது. அவனை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு பயங்கர மிருகம் போல் அந்தக் கட்டிடம் மௌனத்தில் உறைந்திருந்தது. மனசாட்சி பார்த்தால் வேலை நடக்காது என்பதை மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான். ஊருக்குள் பால்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த வெகு அந்தரங்கமான ரகசியம்தான் அந்த வதைக் கூடம். பசுக்கள் தொடர்ச்சியாக பால் கறந்து கொண்டேயிருக்க வேண்டுமெனில் அவை கன்றுகளையும் ஈன்று கொண்டேயிருக்க வேண்டும். பிறந்து சிலமணி நேரங்களில் கன்றுகளையெல்லாம் மாடுகளை விட்டுப் பிரித்து இந்தக் கூடத்துக்கு கொண்டு வருவார்கள். பிறகு அவை கொல்லப்பட்டு ரகசியமாக உணவு விடுதிகளுக்கு இறைச்சியாக அனுப்பப்படும். கூடத்தினுடைய காவலனின் வேலை மிக எளிமையானதுதான். மாலையில் வண்டியில் வந்திறங்கும் கன்றுகளை கூடத்தில் வைத்துக்கொல்ல வேண்டும். பிறகு அதிகாலையில் வரும் விடுதிகளுக்கான வண்டியில் கணக்குப் பார்த்து அவற்றை ஏற்றி விடவேண்டும். ஒரு சில நாட்களில் வேலை அதிகமாக இருக்கும். சில சமயங்களில் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு வேலையே இருக்காது. ஆனால் வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனுக்குச் சம்பளமுண்டு. ஏற்கனவே வேலைக்கு இருந்த காவலாளி சட்டென்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன சமயத்தில்தான் ஏதாவது வேலை பார்த்துத் தருமாறு அவன் தனக்குத் தெரிந்த மனிதானொருவனிடம் சென்று நின்றான். உடலுழைப்பின் சாத்தியங்களை ஒருபோதும் அறியாது வளர்ந்தவனுக்கு இந்த வேலை சரியானதாக இருக்கக்கூடும் என்று மற்றவன் நம்பியதால் பால்பண்ணை முதலாளிகளிடம் சொல்லி அவனுக்கு இந்த வேலையை வாங்கித் தந்திருந்தான். காவலாளி இல்லாத காரணத்தால் கிட்டத்தட்ட நான்கைந்து நாட்களுக்கான உருப்படிகள் சேர்ந்திருக்கும் என்பதைச் சொல்லி அவற்றையெல்லாம் உடனடியாக முடித்து அனுப்பி விட வேண்டும் என்கிற எச்சரிக்கையோடும்தான் அவனிந்த முதல் நாள் வேலைக்கு அனுப்பப்பட்டிருந்தான்.

மெல்லிய கிறீச்சலோடு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் சடாரென்று நாற்றம் முகத்திலறைய மூக்கைப் பொத்திக் கொண்டான். ரத்தத்தின் கவுச்சை வாடை அந்த அறையை முழுக்க நிறைத்திருந்தது. கூடமெங்கும் இருள் சூழ்ந்திருக்க எங்கிருந்தோ கிளம்பிய சில தீனமான சத்தங்கள் மட்டும் ஒழுங்கின்றி ஒலிக்கும் ஒரு மந்திர உச்சாடனத்தைப் போல உட்புறச்சுவர்களில் மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தன. இருள் சற்று கண்களுக்குப் பழகியபின் சுவர் எங்கிருக்கிறதெனக் கண்டுபிடித்து விளக்குக்கான சுவிட்சைப் போட்டான். குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சம் சோகையாய் அந்தக் கூடத்துக்குள் பரவியது. ஒரேயொரு ஜன்னலை மட்டுமே கொண்டிருந்த சற்றே பெரிய கூடம். நிமிர்ந்து பார்த்தான். மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் வழியாக அறைக்குள் இறங்கிய வெப்பத்தில் உடல் தீயாய் கனன்றது. மெல்ல பார்வையைத் தரைப்பக்கம் திருப்பியவனின் உடல் ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது. வெட்டுப்பட்ட மரம் போல சுவரின் மீது சரிந்து தடுமாறி விழப்போனவன் சுதாரித்து நின்றான். வீசியெறியப்பட்ட அழுக்குப் பொதிமூட்டைகளைப் போல எதற்கும் உபயோகப்படாத குப்பையைப் போல அங்குமிங்குமாய் சில கன்றுக்குட்டிகள் விசிறியடிக்கப்பட்டிருந்தன. தரையெங்கும் உறைந்துபோன உதிரத்தின் தீற்றல்கள் மஞ்சளொளியில் பிரகாசமாக மின்னின. சின்னச்சின்னதாக எட்டு வைத்து தயக்கத்தோடு அவன் அந்த மிருகங்களை அல்லது அவற்றின் உடல்களை நெருங்கினான். அனேகமாக அந்தக்கூடத்துக்குள் பதினான்கு அல்லது பதினைந்து கன்றுக்குட்டிகள் கிடக்கலாம். அவசரம் உந்தித்தள்ள தரையில் கிடந்தவற்றினருகே சென்று தொட்டும் அசைத்தும் உயிரிருக்கிறதா எனச் சோதித்துப் பார்த்தான். பெரும்பாலான குட்டிகள் ஏற்கனவே இறந்து போயிருக்க அவற்றின் ஜீவனில்லாத கண்கள் மேற்கூரையின் ஏதோவொரு புள்ளியை வெறித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றாக அவன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கூரையிலிருந்த சின்ன இடைவெளியில் உள்ளே நுழைந்த காகம் இறந்துபோன ஒரு கன்றுக்குட்டியின் மீதமர்ந்து அதன் கண்களைக் கொத்தத் தொடங்கியது. ஆத்திரம் கொண்டவனாக பைத்தியம் பிடித்தாற்போல உரக்க வசைகளைச் சொல்லியபடி அதனிடம் அவன் ஓடினான். மிரண்டு ஒரு கணம் தயங்கிய பறவை சட்டென்று மீண்டும் கூரையின் இடைவெளியில் பறந்து வெளியேறிப் போனது.

இறந்து கிடந்த கன்றுக்குட்டிகளின் உடம்பில் அங்கங்கே தென்பட்ட சின்னச்சின்ன காயங்களுக்கான காரணம் அவனுக்கு புலப்பட்டது. என்றாலும் எலும்புகளை ஊடுருவும் அந்தத் தீனமான ஒலி எங்கிருந்து வருகிறதென்பதைக் கண்டறிய அவன் முயன்றான். வெகு சன்னமான ஒலியென்றபோதும் வலியின் உச்ச அரற்றல் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. எப்படியோ இன்னும் சில கன்றுக்குட்டிகள் அங்கே உயிரோடிருந்தன. அவற்றை அவன் கண்டுபிடித்தேயாக வேண்டும். சிறிதுநேரம் தேடியபிறகு கடைசியாக இரண்டு கன்றுக்குட்டிகளின் உடலில் மட்டும் ஜீவன் கொஞ்சமாக மிச்சமிருப்பதை மெலிதாக ஏறியிறங்கிய அவற்றின் வயிற்றிலிருந்து கண்டுகொண்டான். வேகவேகமாக அந்தப்பொதியிலிருந்து அவையிரண்டையும் கால்களைப் பிடித்து தரையோடு சேர்த்திழுத்து வந்து வெளியே போட்டான். உரத்துச் சத்தமிட முடியாமல் நுரைதள்ளிய அவற்றின் வாயிலிருந்து சின்னதாய் நூல்போல ரத்தம் ஒழுகிக்கொண்டே வந்தது. உடலில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச உயிரும் கண்களின் வழி கண்ணீராக வெளியேறிக் கொண்டிருக்க இனம்புரியாத அவற்றின் வலியில் அவனுக்கு அடிவயிற்றைப் பிசைந்தது. விலகி நின்று அவற்றின் கண்களுக்குள் உற்று நோக்கினான். அதற்குள் தென்பட்ட வலியும் இரைஞ்சலும் அவனைச் சுக்குநூறாக உடைத்துப் போட்டன. வெறிகொண்டவனாக கூடத்தைச் சுற்றிச்சுற்றிப் பார்த்தான். இரு சுவர்கள் சந்திக்கும் மூலையில் ஒரு ஓரமாக குண்டாந்தடி சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. கன்றுக்குட்டிகளை அடித்துக்கொல்ல முந்தைய காவலாளி பயன்படுத்திய தடி. அலறியபடி அதனை நோக்கி ஓடினான். கைப்பிடி தொடங்கி முனைவரை முழுக்க இரத்தமும் எண்ணற்ற கன்றுகளின் உயிரும் ஒன்றாய் உறைந்திருந்த அதனைத் தூக்கிக்கொண்டு ஒரு சாமியாடியின் ஆவேசத்தோடு கன்றுக்குட்டிகளிடம் அவன் திரும்பி வந்தான்.

சூரிய வெளிச்சத்திற்கு முன்னரே அவன் தனது வீட்டை வந்தடைந்திருந்தான். உருப்படிகளை ஏற்றிச்சென்ற வண்டியின் சக்கரங்கள் அவனுடைய தலைக்குள் பாரமாய்ச் சுழன் று கொண்டிருந்தன. நாக்கு வறண்டு தாகத்தால் தொண்டை எரிந்தது. மூடியிருந்த குடிசையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். குழந்தை ஒரு ஓரமாக தொட்டிலில் தூங்க அவளுடைய பாய் ஓரமாக சுருண்டு கிடந்தது. ஆளைக் காணவில்லை. பாத்திரங்கள் அங்ஙனத்தில் விளக்காமல் கிடந்தன. இந்தவேளையில் அவள் அவசரமாக எங்கே சென்றிருப்பாளென்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தண்ணீரைத் தேடி அடுக்களைக்குள் பாத்திரங்களை உருட்டினான். எல்லாம் காலியாகக் கிடந்தன. யார் அல்லது எதன் மீதென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாத ஆத்திரம் பெருகியது. மனதின் தீராத கசப்புகள் தீவிரமடைந்து தனக்குள் வெறுமை பரவுவதை உணர்ந்தான். சட்டென்று வீட்டை விட்டு வெளியேறி குடிசைக்கு சற்றுத் தொலைவிலிருந்த கிணற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டாற் போல ஆடாமல் அசையாமல் நின்றிருந்த மரங்களின் நடுவில் நடந்து அவன் ஊர்க் கிணற்றை அடைந்தான். ராட்சதனின் ஒற்றைக்கண் போலத் திறந்திருந்த அந்தக்கிணறு அகலமாகவும் ஆழமாகவும் இருந்தது. பாசி படர்ந்திருந்த படிக்கட்டுகளில் பாதங்களை கவனமாகப் பதித்து உள்ளிறங்கி நீரில் கால் பதித்தான். தண்ணீரை அள்ளிக்குடிக்க உடல் குளுமையை உணர்ந்து தணிந்தது. தலையின் பாரம் நீங்கி மனம் மெல்ல வசப்பட்டது. எதற்கும் அவன் பொறுப்பாக மாட்டான். பிழைப்புக்கு அவன் வேறு என்னதான் செய்து விட முடியும். கடைசி படிக்கட்டில் வாகாக அமர்ந்து கால்களை தண்ணீருக்குள் அலையவிட்டான். நாளின் அந்தநேரத்தில் கிணற்றின் படிக்கட்டுகளில் தான் இப்படி அமர்ந்திருப்பது அவனுக்கு ஒருபுறம் ஆசுவாசமாகவும், மறுபுறம் துயரமாகவும் இருந்தது. சிறிதும் பெரிதுமாய் கிணற்று மீன்கள் அவனுடைய கால்களைச் சுற்றி வட்டமிட்டுக் கடித்தன. ஒரு தியானத்தைப்போல மீன்களைப் பார்த்தபடி யோசித்தான். தனக்கெனச் சொந்தமாகக் குடிசை போட்டுக் கொள்ள வேண்டும் என ஒருபோதும் அவன் நினைத்ததில்லை. ஒரு இடத்தைச் சுட்டி இதுதான் உன்னுடைய நிரந்தரமான வசிப்பிடம் என்று சொல்வதை வெறுத்தவன். அதன் மீது அவனுக்கு ஒரு இனம்புரியாத அச்சமுமிருந்தது. எங்கும் நிலையில்லாது ஓடிக்கொண்டிருக்கும் நதியொன்று தனக்குள்ளும் இருப்பதாக அவன் நம்பினான். ஆனால் அவளுடைய வருகை அவனளவில் எல்லாவற்றையும் கலைத்துப் போட்டது. நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் சூதானமாகப் படிகளில் ஏறி கிணற்றை விட்டு வெளியேறி வந்தான். மீண்டும் அவன் குடிசைக்குத் திரும்பியபோதும் அவள் வந்திருக்கவில்லை. வாசலில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினான்.

ஊருக்கு வெ ளியேயிருந்த மைதானத்தில் ஓ’வென்ற இரைச்சலுடன் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததொரு மாலைவேளையில் வினோதமாக ஒலித்ததொரு மணிச்சத்தத்துடன் அந்தக் கோமாளி மூன்று சக்கர வண்டியில் நுழைந்தான். ஒருகணம் விளையாட்டை நிறுத்திய குழந்தைகள் ஊதா நிறத் தில் தொப்பியும் இளமஞ்சள் நிறத்தில் உடைகளும் அணிந்து வண்டியை மிதித்த மனிதனை யாரென்று நிமிர்ந்து பார்த்தார்கள். அவனுடைய உடைகளைக் கண்டவுடன் சிரிப்பு வந்தாலும் இதற்குமுன் அவர்கள் ஊருக்குள் பார்த்திராத புதிய மனிதனாயிருந்தான். மிகச்சரியாக குழந்தைகளின் நடுவில் வந்து வண்டியை நிறுத்திக் கீழே இறங்கினான். ஈயென்று இளிப்பது போலிருந்த உதடுகளில் அமைதியானதொரு புன்னகையும் தேங்கி நின்றது. கண்கள் மட்டும் அனைத்து திசைகளிலும் சுற்றிச்சுழல ஏதும் பேசாமல் நின்றிருந்தவனைக் குழந்தைகளின் புழுதிப்படலம் சூழ்ந்து கொண்டது. புன்னகை மாறாமல் திரும்பிச்சென்று வண்டியில் ஏறியமர்ந்து கைகளால் சைகை செய்து நகரத் தொடங்கியவனைப் பின்தொடர்ந்து குழந்தைகளும் ஊருக்குள் சென்றார்கள். அந்த ஊர்வலம் ஊர்ப்பொட்டலின் நடுவே சென்று நிறைவுற்றது. விசேசங்களும் பஞ்சாயத்துகளும் நடைபெறும் ஊர்ப் பொதுவிடம். குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதையறிந்து கொள்ள விரும்பிய பெரியவர்களும் ஊர்வலத்தில் இணைந்த காரணத்தால் தற்போது ஊர்ப்பொட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. கோமாளி வண்டியின் அருகில் நின்றிருந்தான் . அதன் முன்பகுதியில் சிறிதும் பெரிதுமாய் நான்கு பானைகள் இருந்தன. பானைகளின் வாய் துணியால் இறுகக்கட்டி மூடப்பட்டிருந்தாலும் அவற்றுக்குள் தண்ணீர் இருந்ததென்கிற சங்கதி துணியின் ஈரத்திலும் வண்டி குலுங்கியபோதெல்லாம் பானைகளின் விளிம்பில் பட்டுத் தெறித்த நீர்த் திவலைகளின் வழியாகவும் உறுதியானது. அவன் என்ன செய்யப் போகிறானென்பதைப் பார்க்கும் ஆவலில் பொறுமையிழந்தவர்களாக மக்கள் நின்றிருந்தார்கள்.

அவன் தன்னுடைய பானைகளை ஒவ்வொன்றாகத் தூக்கித் தரையில் வைத்து அவற்றை மூடியிருந்தத் துணிகளை அகற்றினான். அளவில் சின்னதாயிருந்த முதல் பானைக்குள் கையை நுழைத்து எதையோ தேடுவதுபோல நடித்தான். கண்கள் விரிய முகம் பிரகாசமடைந்து கையை வெளியே எடுத்தபோது வெளிறிய சாம்பல் நிறத்தில் ஒரு குட்டிப்பாம்பு அவன் விரல்களினிடையே நெளிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில்இருந்தவர்கள் ஒருகணம் மூச்சு விடவும் மறந்தார்கள். பாம்பின் சீற்றம் உண்டாக்கிய அச்சம் அனைவரின் உள்ளும் கூர்வாளாய் இறங்க மொத்தக்கூட்டமும் அமைதியானது. அந்த எதிர்வினையை எதிர்பார்த்தவனாக உடல்மொழியில் கோணங்கிச் சேட்டைகளைச் செய்தபடி கையில் பாம்போடு நடனமாடுவதைப் போல அவர்களைச் சுற்றி வந்தான் கோமாளி. மீண்டும் கூட்டத்தின் நடுவே வந்து நின்று கைகளை உயர்த்தியவன் மொத்தக்கூட்டத்தின் பார்வையும் தன் மீது நிலைத்திருப்பதை உறுதி செய்து வாயை அகலத்திறந்து உயிரோடிருந்த பாம்பை விழுங்க ஆரம்பித்தான். தலை உடல் வாலென்று மெல்லமெல்ல ஒவ்வொரு அங்கமாக நெளிந்து உள்ளே போவதைப் பார்த்த கூட்டம் வாய்பிளந்து நின்றது. பாம்பை விழுங்கிய பிறகு அவன் இரண்டாவது பானைக்குள் கைகளை நுழைத்தான். அதற்குள் இருந்தது சற்றே பெரிய பாம்பு. தன்னுடைய கோணங்கிச் சேட்டைகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை நிகழ்த்தி அந்தப்பாம்பையும் விழுங்கினான். ஒவ்வொரு பானையின் அளவுக்குத் தகுந்தாற்போல பாம்பின் அளவும் பெரிதாகிக்கொண்டே வந்தது. கடைசிப் பானையின் மிகப்பெரிய பாம்பையும் அவன் உயிரோடு விழுங்கி முடிக்க கூட்டம் பயந்தெளிந்து கைதட்டி ஆர்ப்பரித்தது. அவர்களின் ஆரவாரத்தை ஏற்றுக்கொள்வது போல குனிந்து வணங்கியவனின் முகம் சட்டென்று வலியை வெளிப்படுத்தி விகாரமாக மாறியது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கோமாளி தரையில் விழுந்து துடிக்க ஆரம்பித்தான். கூட்டத்தினரை மீண்டும் அச்சம் சூழ ஒருவர் கைகளை மற்றவர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். தட்டுத் தடுமாறி சமாளித்து எழுந்த கோமாளி பானைகளின் அருகே சென்று நின்றான். அவசரம் அவசரமாக நீரை மொண்டு அள்ளிக் குடித்தவன் வாயைத் திறந்து விரல்களை உள்ளே செலுத்தி வாந்தியெடுப்பதைப் போல செய்தான்.

சிறிது நேரத்தில் அவன் வாயிலிருந்து ஒவ்வொரு பாம்பாக மீண்டும் உயிரோடு வெளியே வர அனைத்தையும் அவற்றுக்கான பானைகளில் போட்டு நிரப்பினான். அவனுடைய வலியும் நடிப்பும் வித்தையின் ஒரு பகுதிதானென்பதைப் புரிந்து கொண்ட மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு கூச்சலிட்டு ஆர்ப்பரித்தார்கள். பானைகளைக் கவனமாகத் துணியால் கட்டிய பிறகு தன்னுடைய தொப்பியைக் கழற்றி மக்களிடையே ஏந்தத் தொடங்கினான் கோமாளி. சில்லறைக்காசுகளால் நிறைந்து கனத்த தொப்பியோடு வண்டியேறி அவன் திரும்பிப்போவதை, ஊர்க்காரர்களெல்லாம் கலைந்து சென்றபிறகும், கண்கொட்டாமல் ஒரு சிறுவன் மட்டும் பார்த்தபடி நின்றிருந்தான். ஊர் மக்களின் கரவொலி அவனுக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. வெகுநேரம் யோசித்தபடி அங்கேயே நின்றிருந்த சிறுவன் பிறகு கோமாளியின் வண்டித்தடத்தில் பாதம் பதித்து நடக்கத் தொடங்கினான். கோமாளியின் வார்த்தைகளில் சிறுவன் சமாதானமடைய மறுத்தான். இந்தத் தொழில் வேண்டாமென்பதற்கான அவனுடைய அத்தனை காரணங்களும் சிறுவனின் பிடிவாதத்தின் முன் காற்றுக்குமிழிகளாய் வெடித்துச் சிதறின. தனக்கென எந்த உறவுகளும் கொண்டிராத ஒருவனை நம்பி வந்த சிறுவனைத் துரத்தியடிப்பதற்கான உபாயங்களென வேறு எதுவும் கோமாளியிடம் மீதமிருக்கவில்லை. “நானொரு அனாதை .ஊரார் இட்ட வேலைகளை செய்து பிழைத்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்ட பிறகு புதிதாய் ஒரு நம்பிக்கை என்னுள் பிறந்திருக்கிறது. மீண்டும் அந்த புதைசேற்றுக்குள் விழுந்து உழல நான் விரும்பவில்லை. உன்னிடம் நான் யாசிப்பது வாழ்வையல்ல. எனக்கான அடையாளத்தை. உன்னுடைய சாகசங்களின் வழியே அதனை நான் மீட்டெடுப்பேன். இந்தவுலகின் அதியற்புத சாகசக்காரனாக நான் மாற வேண்டும். அந்தக் கைத்தட்டல்கள் ஓயாமல் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.” வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு, பத்து வயதுச் சிறுவனின் வார்த்தைகளாக அல்லாமல், அவை மிகுந்த தெளிவோடு ஒலித்தன. அந்த வார்த்தைகளின் தீர்க்கத்துக்குள் ஒரு புதிரைப்போல அவன் சந்தித்த வலிகளும் ஒளிந்திருந்தன. சிறுவனின் முன் மண்டியிட்டு அமர்ந்த கோமாளி அவனைத் தன் கரங்களுக்குள் இறுக்கிக் கொண்டான்.

பாம்புகளை வைத்துச் செய்யும் வித்தைகள், நீளமான வாட்களை வாய்க்குள் நுழைப்பது, ஆற்றின் இருகரைகளிலும் கம்பங்களை நட்டு அவற்றை இணைக்கும் கயிற்றின் மீதேறி நடப்பது, தரை யிலிறங்கா மல் பல நாட்கள் மிதிவண்டி ஓட்டுவது, மிகக் கடினமான மலைகளின் மீது ஏறுவதென சாமான்யர்கள் யாரும் எளிதில் செய்து பார்க்கவியலாத சாகசங்களைச் செய்யும் இளைஞனாக அவன் வளர்ந்து நின்றான். அவனளவில் அவை வெறும் சாகசங்களல்ல. வாழ்க்கையுடனான ஒரு மோதல். சாகசங்களைப் புறத்தில் மட்டுமல்லாது தனக்குள்ளும் அவன் நிகழ்த்தியவாறே இருந்தான். ஒவ்வொரு முறையும் மரணத்தைத்தோற்கடித்து வெற்றியடைவதை சாகசங்களின் உள்ளீடாக இருக்கும் அவற்றின் நிச்சயமின்மையை அவன் உளமார நேசித்தான். பணம் ஒருபோதும் அவனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. சாகசங்களை முடித்த பிறகு ஊரார் தரும் பணத்தைக் காட்டிலும் அவர்களின் கண்களில் தேங்கி நிற்கும் ஆச்சரியமும் கைதட்டல்களுமே அவனுக்கு போதையைத் தந்தது. புகழ்பெற்ற சர்க்கஸைச் சேர்ந்தவர்கள் தங்களோடு இணைந்து கொள்ளும்படி அழைத்தபோதும் சிரித்தபடி அவர்களை மறுத்தான். நீண்ட பெரிய கூடாரத்தினுள்ளே ஒடுக்கமான இடத்துக்குள் சுற்றிவர அவன் பிறந்தவனில்லை. அவனறிந்த ஒரே கூரை வானம் மட்டுமே. அதைப்போல ஒரே இடத்தில் தங்குவதில்லை என்கிற கோமாளியின் கொள்கையை அவனுடைய மரணத்துக்குப் பிறகு இவனும் பின்பற்றினான். ஊர் ஊராகச் சென்று சாகசங்கள் செய்வான். மனமுவந்து அவர்கள் தரும் பணத்தை வாங்கிக் கொள்வான். யாருக்காகவும் கவலைப்படத் தேவையில்லை எனும்போது கையிலிருக்கும் பணம் தீரும்வரை அந்த ஊரில் தங்கியிருப்பான். பிறகு அடுத்த ஊரைத் தேடிக்கிளம்புவதே அவனது வாழ்க்கையின் வழக்கமானது. அப்படியானதொரு சாகசத்தின்போது, ஆற்றில் கயிற்றைக் கட்டி வேகமாக நடக்க முற்படுகையில், தடுமாறி கீழே விழுந்தவனின் கால் முறிந்தது. வேறெங்கும் நகர முடியாமல் படுக்கையில் கிடந்தவனைப் பார்த்துக் கொள்வதாகவே அவள் அவனை வந்தடைந்தாள். அவளுக்கென்று தனியாய்ப் பெயரென்று எதுவும் இல்லாமலிருந்தது. ஊருக்குள் அவளை அனைவரும் அவுசாரி என்றே அழைத்தார்கள். கணவனும் மூன்று வயது குழந்தையும் விபத்தில் இறந்தபிறகு வாழ்க்கைப்பாட்டுக்கென புதிதாக வரித்துக்கொண்ட தொழில் அவளுக்கான பெயரையும் புதிதாகக் கொண்டு வந்து சேர்த்தது. கடந்து சென்ற நாட்களில் தன்னுடைய சொந்தப்பெயரை அவளும் மறந்து விட்டிருந்தாள்.

ஊருக்கு வந்த சாகசக்காரன் காலை முறித்துக்கொண்ட சூழலில் யார் அவனைப் பார்த்துக்கொள்வது என்றபோது யோசிக்காமல் முன்னே வந்து நின்றாள். அவளைப் பொருத்தவரை வாழ்வதே ஒரு சாகசமென்றான நிலையில் சாகசங்களையே தன் வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்தவன் மேல் அவளுக்கிருந்த பிரியமும் பிரமிப்பும் அதற்கான காரணமாக இருந்தது. இருட்டில் அவளுக்குள் தாவிப்படரும் எல்லோரையும் போல அவன் சாதாரணமானவன் அல்ல என்பதை அவனோடு பழகிய வெகுசில நாட்களில் புரிந்து கொண்டாள். தொலைந்து போயிருந்த சில உணர்வுகளை அவனுடையஅருகாமை மீட்டெடுப்பதை அவள் உணர்ந்தபோது சுயநினைவு வரப்பெற்றவளாக அவளுடைய பெயரும் மீண்டும் நினைவுக்கு வந்தது. அவனைப் பற்றிக் கொள்வதன் மூலம் தனக்கான புதிய கதவுகள் திறக்கும் என்கிற நப்பாசை அவளுக்குள் திரண்டெழுந்தது. ஒரு முழுநிலவு நாளில், மிகுந்த ஆசையும் லேசான நடுக்கமும் கொண்ட குரலில், அவனோடு வாழவிரும்பும் தனது விருப்பத்தை அவனிடம் தெரிவித்தாள். என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் அவன் நின்றிருந்தான். நினைவுகள் எங்கெங்கோ சுழன்றடிக்க தன் வாழ்வில் இப்படியொரு சம்பவம் நிகழ்வதை அவன் ஒருபோதும் எதிர்பார்த்திருக்கவில்லை. புகைபோலமெல்லக் கசிந்து மனதுக்குள் எங்கோ ஒரு ஆழத்தில் புதைந்திருந்த புதிரானதொரு உணர்வை அவள் அவனுக்குள் மீட்டெடுத்திருக்கிறாள். அவளுக்குச் சொல்வதற்கென ஏராளமான கதைகள் அவனிடமிருந்தன. சிறுவயதில் பார்த்திராத தாயையும் அவளது அன்பையும் பாதியில் தான் இழந்திருந்த கோமாளியின் அரவணைப்பையும் அவளிடம் தேடினான். கண்கள் துளிர்த்து அவன் குலுங்கும் சமயங்களில் அவனுடைய கைகளை நெஞ்சோடு சேர்த்து அவள் அணைத்துக் கொள்வாள். வாழ்வின் இறுதிக்கணம் வரை ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று அவன் முடிவெடுத்த தினத்தில் ஊருக்குள் பெருமழை பெய்தது. அங்கிருந்து எடுத்துச்செல்ல அவளுக்கும் அவனுக்கும் எதுவுமிருக்கவில்லை .ஆனால் விட்டுப்போக சில நினைவுகளும்ஒரு பெயருமிருந்தன. அவ்வூரை நீங்கிக் கிளம்பியவர்கள் பல எல்லைகளைக் கடந்து புதிய நகரமொன்றை வந்தடைந்தார்கள். அவளுடைய வருகை அவனுடைய வாழ்வில் எதிர்பார்த்திராத மாற்றங்களைக் கொண்டு வந்தது.

யாருக்கும் அடங்க மறுத்தவன் அவளுடைய கட்டளைகளை ரசித்து ஏற்றான். வானத்தை மறுத்து ஊரின் எல்லையருகே தங்களுக்கென ஒரு கூரையமைத்துக் கொண்டான். எளிய மனிதர்களுக்கான அந்த எளிய வீட்டில் இருவரும் தங்களை எளிதாகப் பொருத்திக் கொண்டார்கள். தான் கருவுற்றிருக்கும் செய்தியை அவனுடைய காதுக்குள் அவள் ரகசியமாகச் சொன்ன நாளில், இனி வாழ்வில் எதை எண்ணியும் தான் கவலைப்பட வேண்டியதில்லை, எனத் தீவிரமாக நம்பினான். ஆனால் வாழ்க்கை எப்போதும் நதியைப்போல ஒரே திசையில் பயணிப்பதில்லை. ஒரு மலைப்பாதையைப்போல ஏற்றங்களையும், இறக்கங்களையும் அது சேர்த்தே கொண்டு வருகிறது. வாழ்வின் நிதர்சனங்கள் புரிபட ஆரம்பித்தபோது என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றான். சாகசங்களைத் தவிர வாழ்வில் வேறெதையும் அவன் அறிந்திருக்கவில்லை. தனியொருவனாக இருந்தபோது கிடைத்ததை உண்டு வாழ்ந்தவனால் இப்போது அப்படி இருக்க முடியவில்லை. இருவருக்கான உணவைத் தேடும் சூழ்நிலை. பணம் அவர்களுக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியது. கூத்துக்கலைஞர்களும் பொம்மலாட்டக்காரர்களும் கூட உபரியாக மாறிப்போன நகரத்தில் அவனுடைய சாகசங்களை வெகு சிலரே ஆர்வத்தோடு பார்த்தார்கள். தொலைக்காட்சிகள் அவர்களுக்கான வெளியை ஆக்கிரமித்திருந்தன. நிழலுருவங்களின் முன்னால் அவனுடைய சாகசங்கள் எடுபடவில்லை. பாவப்பட்டு சில மனிதர்கள் தந்த பணமும் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருக்கவில்லை. அவன் பள்ளிகளுக்குச் சென்று தன்னுடைய சாகசங்களை செய்து காட்டினான். ஆனால் குழந்தைகளோ மாயாஜாலக்காரர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். தன்னுடைய தைரியத்தையும் நம்பிக்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் இழந்து கொண்டிருந்தான். நீரினடியில் மூழ்கியவர்களைப்போல நகரம் அவர்களை துயரத்தின் ஆழத்தில் அமிழ்த்தியது. குழந்தையால் குடும்பத்தின் சூழல் இன்னும் சிக்கலாகிட அவள் நார்க் கூடைகளை நெய்து சந்தைகளில் விற்கப்போனாள். எதைத் தன் வாழ்நாளெல்லாம் வெறுத்தானோ அப்படியொரு சாதாரணனாகவே அவனும் மாறிப்போனான். கடைசியாக, வாழ வேண்டுமெனில் வேலைக்குப் போய்த்தான் ஆகவேண்டுமென்கிற சூழலில், தெரிந்த மனிதரொருவரிடம் வேலை கேட்டுப்போய் நின்றான்.

சூரியனின் கிரணங்கள் தீண்டிய மரங்களின் கிளைகளிலிருந்து பறவைகள் சிறகடிக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. தூரத்தில் வரும்போதே அவளைப் பார்த்து விட்டான். அவளுடைய கைகளில் பால் சொம்பு இருந்தது. மார் வற்றிப்போன காரணத்தால் குழந்தைக்கு பசும்பால் வாங்கி வரப் போயிருந்தாள் என்பதைப் புரிந்து கொண்டான். வாசலில் அமர்ந்திருந்தவனைக் கண்டவுடன் அவளது கண்கள் இயல்பாக மலர்ந்தன. செருப்பை வாசலில் கழற்றிவிட்டு படலைத்திறந்து உள்ளே நுழைந்தவளை அவன் எழுந்து பின்தொடர்ந்தான். அவள் அடுக்களைக்குள் சென்று பாலை வைத்தபோது தொட்டிலில் குழந்தை சிணுங்கியது. அவன் அதனருகே சென்று ஆட்டிவிட்டான். புரண்டு படுத்த குழந்தை மீண்டும் உறங்கிப்போனது. பாயை எடுத்துத் தரையில் விரித்தமர்ந்தான். தானும் நெருங்கி வந்து கண்களை மூடிச் சுவரில் சாய்ந்து கொண்டாள். காற்றும் நின்றதைப் போன்ற கனத்த மௌனம் குடிசையைச் சூழ்ந்தது. மெல்ல தலையைத் தூக்கி அவள் மடியில் வைத்துக் கொண்டான். கண்களை மூடியபடியே குளிர்ந்த விரல்களால் அவனுடைய தலையைக் கோதினாள். பேச விருப்பமில்லாதவர்களைப் போல இருவரும் அமைதியாக இருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அவனுடல் குலுங்குவதின் மூலம் அழுகிறான் என்பதைப் புரிந்து கொண்டவள் பதறிப்போனாள். அவன் அழுது அவள் பார்த்ததில்லை, கால் உடைந்து பெரும் வலியால் துடித்தபோதும் கூட. அந்தத் தைரியமும் திமிரும்தான் அவனிடத்தில் அவளை முதலில் ஈர்த்த சங்கதிகள். ஆனால் இப்போது அவன் அழுகிறானெனில் ஒருவகையில் தானும் அதற்குக் காரணமென்கிற குற்றவுணர்ச்சி அவளைச் சூழ்ந்தது. அவன் தேம்பியழுவதைத் தடுக்க முடியாமல் அவளும் விசும்பியபடி முகத்தை நிமிர்த்தி அவன் கண்களுக்குள் பார்த்தாள். பயத்தின் ரேகைகள் பழுப்பு நிறத்தில் அந்தக் கண்களுக்குள் நெளிந்து கொண்டிருந்தன. அழுகையினூடாகத் தன் வேலையைப் பற்றி அவளிடம் சொன்னான். “நான் தோற்று விட்டேன். எல்லாவற்றிலும். வாழ்க்கையிலும். இதிலிருந்து என்னால் ஒருபோதும் மீள முடியாது.” அவளுடைய கரங்கள் ஆதரவாக அவனை அணைத்துக் கொண்டன. மார்பில் சாய்த்து அவனைத் தேற்றினாள். “நமக்காக நம் குழந்தைக்காக” அவனுடைய முகத்தை நிமிர்த்தி நெற் றியில் முத்தமிட்டாள். கண்களிலிருந்து வழிந்து கொண்டேயிருந்த நீரைத் தன் நாவால் நக்கித் துடைத்தாள். அவன் சிரித்துக் கொண்டான். அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்து உதடுகளில் அழுந்த முத்தமிட்டாள். மெல்லப் பாயில் அவளைச் சரித்து காதலோடு அவள் மீது படர்ந்தான்.

மூர்க்கமும் அவசரமும் நிரம்பிய அந்தக்கூடல் அந்நேரத்தில் அவனுக்கு மிகவும் தேவையாயிருந்தது. சற்று நேரத்தில் சோர்ந்து விலக முயன்றவனைக் குழந்தைபோலத் தன் மார்போடு இறுக கட்டிக்கொண்டாள். இருவரும் அப்படியே உறங்கிப் போனார்கள். மீண்டும் அவன் எழுந்த போது அவள் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தாள். மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு அவனுடைய கண்களைப் பார்த்தாள். இப்போது அவற்றில் குழப்பமில்லாமல் இருந்தது அவளுக்குள் ஆச்சரியத்தை உண்டாக்கியது. குழந்தையை அவளிடமிருந்து வாங்கித் தன் தோளில் சாய்த்துக் கொண்டான். “இதுதான் வாழ்வென்றான பின் எந்தக் கவலையுமின்றி அதனை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நியாயம். ஆனால் அதற்குமுன் இறுதியாய் ஒரேயொரு சாகசத்தை மட்டும் நிகழ்த்த விரும்புகிறேன். அது என் வாழ்நாள் சாதனையாக இருக்கும். ஏதேனும் ஒருவகையில் வாழ்வை நான் வென்றவனாவேன்.” அவள் எதையோ சொல்ல வாயெடுத்தாள். கைகளை அசைத்துத் தடுத்தவன் தயவு செய்து மறுக்க வேண்டாம் எனப் பார்வையால் கெஞ்சினான். அவள் அரை மனதோடுத் தலையசைத்தாள். சாகசத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. இரண்டு மலைகளினிடையே கயிறைக் கட்டி, அந்தக் கயிற்றைத் தன் தலைமுடியில் சுற்றிக்கொண்டு, அதன் வழியாகவே ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை அவன் பயணித்து பள்ளத்தாக்கைக் கடப்பான். சாகசத்துக்கென அவன் தன் முடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினான். அறிவிப்பு வெளியான சில நாட்களில் எதிர்பாராதவிதமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நிகழ்ச்சிக்கான செலவுகளைத் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னது. இதுவரை யாரும் முயற்சித்திராத சாகசமென்றும் மக்களுக்கான புதிய நாயகன் தோன்றி விட்டானென்றும் போஸ்டர்களும் செய்தித்தாள் விளம்பரங்களும் அவனுடைய பெயரை வாய்வலிக்காமல் நகரம் முழுக்க கூவிக் கொண்டேயிருந்தன. உள்ளுக்குள் அச்சமிருந்தாலும் அவள் அதனை அவனிடம் வெளிக்காட்டவில்லை. அவனுடைய தைரியத்தின் சாவி தன்னுடைய கண்களுக்குள் ஒளிந்திருப்பதை அவள் அறிந்திருந்தாள். அவனுக்கென பிரத்தியேகமானதொரு புன்னகையோடு ஒரு முகமூடியை வலிந்து மாட்டிக் கொண்டாள். மகிழ்ச்சியாகத் தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவன் நம்பிக்கையாய் உணர்வானென்பதை அவள் நன்கறிவாள். அவனோ கவலைகள் மறந்தவனாகக் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தான்.

சாகச நிகழ்வுக்கான நாள். மலைகளினிடையே கயிறு கட்டுவதில் தொடங்கி மக்களுக்கான பார்வையாளர் மாடங்கள் அமைக்கும் வேலை வரை அனைத்தையும் தொலைக்காட்சி நிறுவனமே செய்திருந்தது. சாகசம் நடக்குமிடத்துக்கு வந்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இத்தனை பெரிய கூட்டத்தை அவன் வாழ்நாளில் எப்போதும் பார்த்ததில்லை. தொலைக்காட்சி விளம்பரங்களின் பலனாகச் சுற்றியிருந்த அத்தனை ஊர்களைச் சேர்ந்த மக்களும் சாகசத்தைக் காண வந்திருந்தார்கள். அவனுக்கு மிகவும் பெருமையாகவும் இருந்தது. அவனைக் கண்டவுடன் கூட்டம் பலத்த கரகோஷத்தை எழுப்பியது. அவன் அவர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தான். வாழ்நாள் முழுதும் தான் கேட்க விரும்பிய கைதட்டல்களை வெகுநாட்கள் கழித்து மீண்டுமொருமுறை கேட்கிறான். மீண்டும் தன்னை ஒரு அதிநாயகனாக உணர்ந்தான். சாகசம் நல்லபடியாக நடந்து முடிந்தவுடன் அவனுக்கென ஒரு பெருந்தொகையைத் தருவதாக நிறுவனம் வாக்களித்திருந்தது. அதைக்கொண்டு அவன் தனக்கான புதிய வாழ்வைத் தொடங்கலாம். வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உறைந்திருந்தன. தளர்வான ஆடைகளைக் கழற்றி சாகச நிகழ்ச்சிக்கான ஆடைகளையணிந்து குழந்தையிடம் திரும்பி வந்தான். அதன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு அவளிடம் தந்தான். அவனுடைய கைகளை அழுத்தமாகப் பற்றினாள். சிரித்துக்கொண்டே கையசைத்து அவளிடம் விடை பெற்றான்.

மலையின் மீதேறி நின்றவன் கீழே பார்த்தான். தொலை தூரத்தில் மனிதர்கள் சிறுசிறு புள்ளிகளாகத் தெரிந்தார்கள் எனினும்‌ அவர்களுடைய ஆரவாரக் கூச்சலை அவனால் கேட்க முடிந்தது. அவர்கள் அத்தனை பேரும் அவனுக்காக இங்கே வந்திருக்கிறார்கள். இன்றைய நாள் முழுதும் அவனுக்காக அவர்கள் கரவொலி எழுப்புவார்கள். அவனுடைய முகத்தின் சந்தோச உணர்ச்சிகளனைத்தையும் தொலைக்காட்சியின் புகைப்படக்கருவி படம் பிடித்தபடி இருந்தது. அவன் மீண்டுமொரு முறை கைகளையுயர்த்தி காற்றில் அசைத்துக் காட்டினான். பிறகு கயிற்றை எடுத்துத் தன் தலையைச் சுற்றிக் கட்டினான். நன்கு இறுகக்கட்டிய பிறகு பலமாக அதனைப் பிடித்து இழுத்துப் பார்த்தான். வலித்தாலும் கயிறின் முடிச்சு நன்றாக இறுகியிருப்பது புலப்பட்டது.

சாகசத்தின் போது கைகளைப் பயன்படுத்தக் கூடாதென்பதற்காக அவனுடைய கைகள் பின்புறம் இழுத்துக்கட்டப்பட்டன. எப்படியிருந்தாலும் கயிறு அவிழாதென்பதை உறுதி செய்து கொண்டு அவன் தரையிலிருந்து உந்தித் தாவினான். கணநேரத்தில் அவனுடைய உடல் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தது. சட்டென்று அமைதியான மக்கள் கூட்டம் அடுத்த கணமே ஹோ’வென்று வெடித்து ஆர்ப்பரித்தது. சிறகுகளில்லாத பறவையைப் போல வானில் மிதந்தவன் மெல்லத் தன் உடலையசைத்து நகர ஆரம்பித்தான். உடலின் மொத்த பாரமும் தலைமுடியைக் கட்டியிருந்த கயிற்றில் தாங்கிப் பிடித்திருக்க வலி ஊசியைப் போல மெல்ல அவனுக்குள் இறங்க ஆரம்பித்தது. ஆனால் அவன் அந்த வலியை ரசிப்பவனாக இருந்தான். வெகு நாட்களாக அவனை விட்டு விலகியிருந்த வாழ்க்கையுடனான மோதலை இன்று அவன் மீண்டும் சந்திக்கிறான். புதிய உத்வேகத்துடன் நகர ஆரம்பித்தான். நேரமும் அவனோடு இணைந்து வெகுமெல்லமாக அந்தக் கயிற்றில் ஊர்ந்து கொண்டிருந்தது. திறந்த வாயோடு தரையிலிருந்து மக்கள் அந்த சாகசத்தை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவன் நகர்வதை நிறுத்தினான். உடல் அந்தரத்தில் ஊசலாடியது. வலி அவன் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமாயிருப்பதாகத் தோன்றியது. தலையைச் சற்றேத் திருப்பிப் பின்னால் பார்த்தான். கிட்டத்தட்ட பாதி தூரத்தைக் கடந்திருந்தான். இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருப்பதாகத் தோன்றியது. முதல்முறையாக இதைத் தன்னால் செய்து முடிக்க முடியுமா என்று சந்தேகம் எழுந்தபோது அவன் அதிர்ந்தான். ஒருநாளும் அதுபோல அவன் நினைத்ததே கிடையாது. அவனால் செய்ய முடியாத சாகசங்கள் என்று எதுவுமிருப்பதாக அவன் நம்பியதேயில்லை. கண்களை மூடிக் கோமாளியை நினைத்துக் கொண்டான். யாருமற்றவனாக நின்றபோது தன்னை இழுத்தணைத்துக் கொண்டவனுடைய கரங்களின் கதகதப்பு நினைவு வந்தது. நான் தோற்க மாட்டேன் என தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். அவன் அசையாமல் நிற்பதைப் பார்த்து என்னவென்று புரியாமல் அமைதியாகியிருந்த கூட்டம் மீண்டும் அவன் நகரத் தொடங்கியவுடன் பலமாக சத்தம் போட்டு ஆர்ப்பரித்தது.

உடலின் பாரம் மெல்ல கூடிக்கொண்டேவருவதை அவன் உணர்ந்தான். தரையில் மக்கள் இன்னும் சத்தம் போட்டபடிஇருந்தார்கள். கண்களுக்குள் சின்னதாய் ஒரு இருட்டு படர்ந்தது. தலைக்கு மேலேகடந்து போன ஒரு பறவை யின் சிறகடிக்கும் ஓசை கேட்டது. மிகுந்த பிரயாசையோடுகண்களைத் திறந்து பார்த்தான். அதுவொரு வெள்ளைப்பறவை, அனேகமாக ஒருநாரையாக இருக்கலாம், ஏற்கனவே அதனை அவன் எங்கோ பார்த்திருந்தான். ஆனால் எங்கே என்பது நினைவுக்கு வர மறுத்தது. மக்கள் கரகோஷங்களை எழுப்பியபடி இருந்தார்கள். அயர்ச்சியைப் போக்க தலையை சற்றே பலமாக அவன் அசைத்தபோ துதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. தலையைச் சுண்டிய வேகத்தில் தலை முடியை இறுகக்கட்டியிருந்த கயிறு சற்று தளர்ந்தது. பதற்றத்தில் அவன் தலையை முன்னும் பின்னுமாக அசைக்க கயிறின் சுருக்கு மிகச்சரியாக அவன் கழுத்தில் விழுந்தது. மக்கள் இன்னும் கைகளைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் தன்னை விடுவித்துக் கொள்ள செய்த அத்தனை முயற்சிகளும் வீணாகிக் கயிறு அவன் கழுத்தை இறுக்கியது. தரையிலிருந்து ஆரவாரமிட்ட மக்களின் சத்தத்தை மீறி எங்கிருந்தோகன்றுக்குட்டிகளின் தீனமான ஒலிகள் காதுகளில் கேட்டன. கண்களை மூடினான். கையில் குழந்தையோடு அவனைப் பார்த்துச் சிரித்துக் கையசைத்தாள். கரவொலிகள் அவனுக்குள் கேட்டுக் கொண்டேயிருந்தன. கயிறு இன்னும் இறுகியது. வெகுநேரம் யோசித்தபடி அங்கேயே நின்றிருந்த சிறுவன் கோமாளியின் வண்டித்தடத்தில் போகலாமா வேண்டாமா என்று யோசித்த கணத்தில் சடாரென்று அவனுடைய கழுத்தெலும்பு முறிந்தது. தரையில் மக்கள் தரையில் மக்கள் கைகளைத் தட்டிக் கொண்டேயிருந்தார்கள்.

-கார்த்திகைப் பாண்டியன்

0 Comments

Write A Comment