Tamil Sanjikai

தமையர்களின் கைகளினால் தகப்பன்கள் வெளுப்பு வாங்கும் தருணம்தான் எத்தனை உன்னதமானது ?

அந்திக்கருக்கலில் இரண்டு குப்பிகள் மாம்பட்டையினை அருந்தி வீட்டிற்கு வந்துதும், வராததுமாக தன் மனைவி அன்னபாக்கியத்தை அன்னக்கரண்டியால் விரச முற்பட்ட தங்கப்பன், கொத்தவேலைக்கு போய்விட்டு வந்து , வீட்டின் பின்பக்கம் குளித்துக் கொண்டிருந்த தன் மகன் லாசரைக் குறித்து விசாரிக்காமல் போனது ஒன்றும் அவரது தப்பில்லை என்றால் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அன்னக் கரண்டியைத் தன் நெற்றியில் ஏந்திக் கொண்ட அன்னபாக்கியத்தின் குரல் புழக்கடையைத் தாண்டி குளத்தின் கரை வரை எதிரொலித்தது. தன் தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த லாசர் கொடுத்த ஒற்றை மிதியில் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு வெளியில் போனார் தங்கப்பன்.

போதாக்குறைக்கு வெளியில் பாய்ந்த லாசர், தங்கப்பனை வெள்ளாவியில் வைத்து வெளுத்தான்.
தங்கப்பன் ஆட்டு உரலில் இருந்து வைக்கோல் போருக்கு இடம்பெயர்ந்தார். மறுபடியும் வைக்கோல் போரிலிருந்து குளத்துக்குள் பறந்தார், மீண்டும் குளத்திலிருந்து தூக்கப்பட்டு முற்றத்தில் கிடத்தப்பட்டார்.

லாசர் எச்சரித்தான். இனிமேலால் சிக்கப் போட்டுகிட்டு வீட்டுல வந்து நாடவம் ஆடுனீருன்னு வச்சிக்காரும்.... தவப்பம்ன்னீ பாக்க மாட்டேம் பாத்துக்கிடும் ! தெக்க தூக்கிட்டு போவேண்டியது வந்துரும்...

தெற்குப்பக்கம் சுடுகாடு இருப்பதை நினைவு கூர்ந்தார் மயக்கத்தில் இருந்த தங்கப்பன். கண்விழித்தால் மீண்டும் தாக்குவானோ என்ற எண்ணத்தில் மயங்கியது போல நடித்துக் கொண்டே முற்றத்தில் படுத்திருந்தார். மட்டக் கட்டையும், செங்கலும் பிடித்து பழகிய லாசரின் கைகள் கொண்டு தடவப்பட்டதால் தங்கப்பனின் திருமேனி கதகத’வென ஆகிப்போயிருந்தது.

குளித்துமுடித்து சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்த லாசர் தன் தந்தையின் உடல் அசைவற்றிருப்பதைப் பார்த்ததும் கண்டு பிடித்து விட்டான்,

செவம் எப்புடி நடிக்கி ? அடிபடாத மாடு தொழுவத்தச் சவுட்டுமா ? புள்ள மாதிரி ஒழுங்கா இருந்தீர்னா ஒம்ம தேகத்துக்கு நல்லது ! என்றவாறே ஊர்ச்சந்திக்கு நடையைக்கட்டினான். மகனின் தலைமறைந்ததும் தங்கப்பனின் உணர்வுகள் உயிர்த்தெழுந்தன....

எட்டீ ! மொவன கண்ண காட்டி வுட்டுகிட்டு , ஒண்ணுந்தெரியாத ஓம்பரம் மாறியா நிக்க ! இருட்டி... இன்னா வந்துகிட்டு... நல்ல காட்டுப்பன ஏறுன தெங்குட்டி நா ! எம்மேலயே ஒம்மொவன் வந்து ஏறிகிட்டு போறானா ? வருவாம்லா ! பெத்த புள்ளையாச்சேன்னி சீவனோட உட்டம்பாத்துக்கா ! இல்லையின்னா இந்நேரம் அவனுக்க தேகந்தான் இங்கன கெடந்துருக்கும்...

அன்னபாக்கியம் உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

அவம் வரதுக்க முன்னால கஞ்சிய குடிச்சிக்கிட்டு கெடந்தீருன்னா ! ராத்திரிக்கி அடி தப்பும்... இல்லையின்னா எண்ணைய தடவிக்கிட்டு படுக்காண்டி வந்துரும்... எப்புடி சவுரியம் ?

தங்கப்பன் திண்ணையில் அமர்ந்திருந்த தன் தாய் ஏசுவடியாளை ஏறெடுத்தார்.

ஏ தள்ளே ! இங்கன போட்டு அந்த வீசு வீசுனானே ! ஒரு வார்த்த வாயத் தொறந்து யாம்னு கேட்டியா சண்டாளப்பாவி ! எங்குறுக்குல சவுட்டும் போதாவது நீ சொல்லிறுக்காண்டாமா ? எலேய் லாசரு! ஒன்னயத் தூக்கிச் சொமந்த முதுவுன்னு ? இத்தன வருசத்துல நீயோ , என்னப் பெத்த தவப்பனோ எம்மேல கைய வச்சிருப்பீயளா? இல்ல அந்த மனுசன் உசுரோடயிருந்திருந்தா இந்த சின்னப் பெயக்கள்ளாம் என்னய கை நீட்டுவானுவாளா ?

ஏசுவடியாள் சொன்னாள். எம்மாளு அன்னபாக்கியம்! மாடு தொழுவத்துக்கு வந்துட்டுன்னி நெனைக்கேன்.... செவத்துக்கு தண்ணிய வையி ! பாழப்போன கண்ணு எழவுந் தெரியமாட்டங்கு... காதும் பூசுனாப் போலதான் கேக்கு....

அது காதா ? காக்கமூரு வாமடையா ? இவ்வளோ நேரம் ஓங்கிட்ட வந்து அழுதனே பாவி மட்ட ! தங்கப்பன் அயர்ந்து போனார்.

வீட்டுக்குள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மூன்றாவது மகன் மிக்கேல் தங்கப்பனிடம் கேட்டான்.

எப்பா ! நீ எதுக்குப்பா அண்ணன போட்டு அந்த அடி அடிச்சா ? பாவம்லா அவென் ?

தங்கப்பனுக்கு நாக்கு வற்றிப் போனது. குஞ்சாமணி போல கெடந்துட்டு எவ்வளவு பரியாச மயிரு அடிக்கி செவம் ?

வீட்டுக்குள் வந்து அமர்ந்தார். பாத்திரத்தை வைத்து கஞ்சியை ஊற்றினாள் அன்னபாக்கியம். காணத் துவையலைக் கண்டதும் தங்கப்பனின் முகம் மாறியது....

தேங்காத் தொவயல எங்கட்டி பாவி முடிவா ? ஒன்னயெல்லாம் கெட்டிக்கிட்டு வந்து பாடாப் படுகனே இறைவா ? எவம்ட்டி ஒனக்கு பேரு வச்சான்? அன்...........ன பாக்கியம் ........... யோக்கியமான பேரு ! த்தூ ! நீ என்னக்கி இந்த நடைய சவுட்டுனியோ அன்னைக்கே இந்த வூடு நாசமாப் போச்சி !

எந்த வூடு ? இது எங்க ஐயங்கெட்டித் தந்த வூடு ! ஒம்ம வூட்டுல தவாலி படுத்துருக்கான் ! அன்னபாக்கியம் ஆரம்பித்தாள்.

தவாலியோ ... தா.....ளியோ ! எனக்க வூடு அடமானம் போனதுக்கே ஓங்கப்பந்தானே காரணம் ?

என்னவாம் ? நீரு மட்டும் வாயி மயித்த வச்சிக்கிட்டு சூதானமா இருந்திருந்தீருன்னா அன்னிக்கி அந்த பெகளம் நடந்துருக்குமா ?

ஓங்கப்பன் அன்னிக்கி எனக்க வூட்டுக்கு எதுக்குட்டீ வந்தான்....?.இங்கன கெடக்க வேண்டியதானே? அங்க வராம கெடந்துருந்தா அது நடந்துருக்குமா ?

எங்கப்பன் வீட்டுக்குத்தானே வந்தாரு ? அவர எதுக்குச் சாராயக்கடைக்கி கூட்டிட்டு போனீரு ? போனதாலதானே கத்திக்குத்து வாங்குனீரு ?

எனக்க மாமனார கத்திய எடுத்துக்குத்துனவன நாஞ்ச்சும்மாவா வுட முடியும்? அதான்....

அதாம்ணா ! எங்கய்யன குத்துனவன நீரு குத்த வேண்டியதானே ? நீரும்லா கத்திக்குத்து வாங்கிட்டு வந்து ஆஸ்பத்திரில கெடந்தீரு ! ஆழமா குத்து வாங்குனதால எங்கய்யனும் வாயப் பொளந்தான்.... ரெண்டு பேருக்க பண்டுவமும், காடாத்தும், கல்லெடுப்பும் பாத்து வீட்ட நட்டாத்துல வுட்டதுதா மிச்சம் ?

என்னம்மோ.... வுட்டா ரொம்ப எகத்தாளமா பேசிக்கிட்டு கெடக்க ? வாயக் கிழிச்சிருவம்பாத்துக்கா ?

ம்க்கும் ... கிழிப்பீரு ! கிழிப்பீரூ ! இத்தன நேரம் முத்தத்துல மல்லாந்து கெடந்தது ஒர்மைல இருக்கா ?

வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் கிழவி சொன்னாள்... யம்மாளு தங்கப்பென் வந்துட்டாம்னு நெனைக்கேன்....

தங்கப்பன் சூடானார்... பாத்தியா கெழவிக்க ஏடாம்ப ? வெளிய நின்னு அவ்வளவு நேரம் கழுதையா கூவிருக்கேன்... மாடு தொழுவத்துக்கு வந்துருக்குன்னு சொன்னா ! இப்போ நாயி கொலைக்கி... என்னய சொல்லுதா ! இன்னிக்கி இவள ??? என்றவாறே எழுந்து வெளியே போனார்.

அப்போது வீட்டின் வெளியே வந்த முருகன் கேட்டான்.

என்ன தங்கப்பண்ணோ ! கொளத்துல சாடிச்சாடி குளிச்ச மாதி இருந்தே.... என்ன விசேசம் ? லாசரு ஒம்ம தூக்கிட்டு போனான்... என்ன கத ? ஒண்ணும் வெளங்கல ?

தங்கப்பன் சொன்னார்.... ஆமா ! ஒங்காத்தாளுக்கு ஏழாங்கெழம... அதாங்குளிச்சேன்.... போல அந்தால ! அரையள பட்டுட்டுப் போயிறப்புடாது....

போங்கண்ணே ! நீங்க பட்டததான் சாயந்திரம் நாம் பாத்தனே ?

தங்கப்பன் வீட்டை நோக்கிச் சொன்னார், எட்டீ ! இன்னிக்கி இருக்குட்டி அந்த காவக்கார நாய்க்கி.... பன மட்டையெடுத்து அவம் மண்டையில கோடு போடுகனா இல்லியான்னு இன்னிக்கி பாரு.... என்றாவாறே பனைமட்டையை எடுத்து உரிக்கத்துவங்கினார்.

தெருவில் போகிறவர்கள் , வருகிறவர்களெல்லாம் தங்கப்பனையே பார்த்துக் கொண்டு சென்றார்கள். கண்கொட்டாமல் பார்த்த வடிவழகியிடம் தங்கப்பன் கேட்டார்.

இங்க என்னத்தளா செறஞ்சி பாக்கிய? நா என்ன உரிஞ்சி போட்டுக்கிட்டா நிக்கேன் ?

இல்ல தங்கப்ப மச்சா ! பன மட்டய உரிக்கிதியளே... சொக்கப்பன கொளுத்தப் போறேளோன்னு பாத்தேன்....

யாம்டி ஒம்மாப்ளய உரிக்கச் சொல்லி பாக்க வேண்டியதானே... இங்க வந்து பாத்துட்டு கெடக்க.... போய்த் தொல அந்தால.... இங்க ஒருத்தன இன்னிக்கி.... தள்ளே....! அவனா நானான்னு இன்னைக்கி பாக்கட்டு.... என்று சொல்லிக் கொண்டே திரும்ப எதிரில் லாசர் நின்று கொண்டிருந்தான்.

எடீ பாக்கியம்.... மொவே வந்துட்டாம்ளா .... சோத்த போட்டு வையி... பசிக்கும்லாடியேய் .... நீ உள்ள போ மக்கா.... அப்பா காலத்த அடுப்பு பத்த வைக்க பன மட்ட வெட்டிக்கிட்டு நின்னேன்.... வெளிய போட்டம்னா மழ பெஞ்சி ஈரமாயிரும்லா.... நா லேசா மேலுக்கு நனச்சிக்கிட்டு வந்துருகேன் ... நீ போயி சாப்புடு ! என்று சொல்லியபடியே குளத்துக்குள் இறங்கினார் தங்கப்பன்.

- பிரபு தர்மராஜ்

4 Comments

  1. நீ உள்ள போ மக்கா.... அப்பா காலத்த அடுப்பு பத்த வைக்க பன மட்ட வெட்டிக்கிட்டு நின்னேன்.... வெளிய போட்டம்னா மழ பெஞ்சி ஈரமாயிரும்லா.... நா லேசா மேலுக்கு நனச்சிக்கிட்டு வந்துருகேன் ... நீ போயி சாப்புடு ! என்று சொல்லியபடியே குளத்துக்குள் இறங்கினார் தங்கப்பன்.// The Funny End bro! sirichi sethutten ! salute!

Write A Comment