அந்த கலெக்டர் மயிராண்டிக்கிட்ட போயி அக்கினி அனுப்புனாம்னு சொல்லு! கையெழுத்து போடலைன்னா அவனுக்க கையி பாரோதிவொரம் ( பார்வதிபுரம் ) சானல்ல மெதக்கும்னு சொல்லுடே! என்றுதான் பாஸ்கரனிடம் சொல்லி அனுப்பினான் அக்கினிராஜன். அன்று மாலையில் வீட்டில் படுத்துக் கிடந்த அக்கினியை போலீஸ் வந்து படுக்கையில் இருந்து அள்ளிக்கொண்டு போனது. அங்கே பாஸ்கரனை தலைகீழாகக் கட்டித் தூக்கியிருந்தார்கள். அக்கினிக்கு குழப்பமும், பயமும் ஏற்பட்டது. அக்கினியைக் கண்ட பாஸ்கரன் கதறினான்.
எண்ணே அக்கினியண்ணே ! காப்பாத்துண்ணே ! இந்தத் தொட்டிப் பயலுவ என்னய தொவச்சி தொங்கவுட்டுடானுவ? ஓய் எங்கண்ணன் வந்துட்டான் ! இனி எம்மேலே கைய வச்சிப் பாருங்கவோய்! எனவும் பாஸ்கரனின் மண்டையில் பேப்பர் வெயிட் பறந்து வந்து தாக்கியது. அக்கினியை பாஸ்கரனின் கண்முன்னால் போட்டு வெளுத்தார்கள். அக்கினி அணைந்து திரி மட்டும் தரையில் கிடந்தது. பாஸ்கரனைக் கீழே இறக்கி, ரெண்டு பேரையும் லாக்- அப்பில் ஜட்டியோடு போட்டார்கள். அக்கினிக்கு மயக்கம் தெளிய ஒரு மணிநேரம் ஆனது. பாஸ்கரன் துவண்டு கிடந்தான்.
என்னலே செஞ்சா ? என்னய கொண்டாந்து எதுக்குடே அடிக்கானுவோ? அக்கினியின் குரலில் அழுதுவிடும் தோரணை இருந்தது.
எண்ணே ! நீதானே சொன்னா ! கலெக்டருக்க கைய வெட்டி சானல்ல உட்டுருவம்னு.... இப்ப ஒண்ணுந்தெரியாத மாறி நடிக்க?
அட தம்மாக்காரப் பயல ! நா எப்பம்டே சொன்னேன்....?
அக்கினியின் மண்டைக்குள் பிளாஷ்பேக் ஓடியது. அன்று காலை முதலே செல்லப்பனின் தோப்புக்குள்தான் வடிப்பதும், குடிப்பதுமாக இருந்தார்கள். அக்கினிராஜ் ஒரு பிரமாதமான ஆள். அவன் மனது வைத்தால்தான் மழை பெய்யும் என்ற எண்ணம் அவனுக்குள் உறைந்து கிடந்ததால் தனக்குள்ளே அவனோரு மிகப்பெரிய ஆத்துமாவாக உருவெடுத்திருந்தான். குடிப்பதும், யாரிடமாவது வம்பிழுப்பதுமாக அவனது பொழுதுகள் கழிந்தன. அந்த பிரதேசங்களில் அவன் அடிவாங்காத தெருவோ, அவனை அடிக்காத ஆட்களோ இல்லை.
அன்றும் காலையில் அப்படித்தான்... தன்னுடைய தகப்பனின் ஏதோவொரு பத்திரத்தில் கலெக்டர் கையெழுத்திட மறுத்ததாகக் கூறிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த பாஸ்கரனை கூட்டிக் கொண்டு செல்லப்பனின் தோட்டத்துக்குள் புகுந்தார்கள் அக்கினிராஜனின் சகாக்கள். அன்று பாஸ்கரன்தான் ஆடு...
சூடான சாராயம் தொண்டையைக் கீறிக் கொண்டு நுழைந்து வயிற்றுக்குள் போய் தன்னுடைய புத்தியைக் காட்டத் துவங்கியதில் அக்கினியின் உள்ளம் கலெக்டருக்கெதிராக உழன்றது.
பாஸ்கரா! கையெழுத்து போட மாட்டேங்கான்னா ஒருவேள அந்தக் கலெக்டருக்கு எழுதப் படிக்க வராதோ என்னமோ? இல்லியா? என்ற ஒரு குழப்பத்தை முன்வைத்தான்.
என்னண்ணே சொல்லுக ? கையெழுத்து போடத் தெரியாதவன் எப்புடி கலெக்டராவ முடியும்?
இல்லடே! நாம பல்வேறு கோணத்துல சிந்திக்கணும்லா?
என்னது கோணத்துல போயி சிந்திக்கணுமா? இங்க இருந்தே சிந்திச்சா என்ன ? கோணம் ராஜாக்கமங்கலத்துகிட்டக்கல்லா இருக்கு?
எடே ! நாஞ்சொன்ன கோணம்னா ரீதி’ன்னு அர்த்தம்!
எலேய் ! அக்கினிக்கி தெரியாத காரியங்கள் எதுவுமே நம்மூருல கெடையாது... மனசிலாச்சா ? சாராய வடிப்பாளர் செல்லப்பன் இந்த தேனினுமினிய வார்த்தைகளை உதிர்த்தார். அதைக்கேட்டதும் அக்கினியின் மனம் குளிரவே, கூட ஒரு கப்பு குடித்து மனதைச் சூடாக்க எத்தனித்தான். அப்படியாக நான்கு கப்புகள் வயிற்றுக்குள் போன பிற்பாடுதான் மேற்கூறிய வார்த்தைகளை பாஸ்கரனிடம் கூறி, பாஸ்கரனை கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தான் அக்கினி. மூன்று கப்புகள் குடித்திருந்த பாஸ்கரனும் நேராக கலெக்டர் அலுவலகத்தில் வந்து வாசலில் நின்ற படியே,
எலேய்.......... எங்கண்ணன் இன்னிக்கி கலெக்டருக்க கைய வெட்டி பாரதியாபொரம் ( பார்வதிபுரம் ) சானல்ல உடப் போறாம்டோ ! என்று கூப்பாடு போட்டான்.
அடுத்த ஐந்து வினாடிகளில் பாஸ்கரனைப் பார்சல் செய்து ஸ்டேசனுக்குக் கொண்டு போய் பொளந்தார்கள். பாஸ்கரன் வாக்குமூலம் கொடுத்ததில் அந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அக்கினியும் சேர்க்கப்பட்டு காவல் நிலையத்துக்கு தூக்கி வரப்பட்டு கிடத்தப் பட்டான். அக்கினியும், பாஸ்கரனும் வெடிகுண்டு வழக்கில் சிறை சென்றதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். கூடுதல் கற்பனையாக அந்த இருவரும் கற்பழிப்பு வழக்கில் சிக்கிக் கொண்டதாக பிச்சைமுத்து ஊருக்குள் சொல்லி வைத்தான். தொண்ணூறுகளில் தொலைபேசிகள் மட்டுமே இருந்தது, அதுவும் ஊருக்கு ஒன்றுதான் இருந்ததால் அவர்களின் கதை அழகியபாண்டிபுரம் ஊருக்குள் வந்து சேர முப்பது மணிநேரங்கள் பிடித்தன...
அக்கினியின் வீட்டிலும் டெலிபோன் இருந்தது. ஆனால் ஊரிலுள்ள யாருக்கும் நம்பர் தெரியாது. அக்கினியின் தகப்பன் சுந்தரம் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். வெட்டுபட்ட கைக்கு சுண்ணாம்பு தடவ மாட்டார். இப்படியொரு தாராள மனதும், மகனை நல்லபடியாக வளர்த்து வைத்திருந்தமையாலும் ஊருக்குள் அவருக்கு இப்படி ஒரு பெயர் இருந்தது. ‘கம்புகாலன்’
கூடுதலாக நிறைய வாக்கியங்களும் அவரைச் சுற்றி திரிந்தன.... புள்ள மயிறு வளத்து வச்சிருக்கான் ! புள்ளய பெறச் சொன்னா தெண்டல பெத்து உட்டுருக்கு செவத்து நாயி ! ஈப்பி சுந்தரம் ஒரு காட்டுமுட்டாளு !
சுந்தரத்துக்கு போலீஸ் என்றாலே பயம். எப்படி காவல் நிலையத்துக்குப் போய் மகனை மீட்பது என்ற கவலை வேறு அவரை ஆட்கொண்டது. ஊருக்குள் யாரிடமும் சென்று ஒத்தாசை கேட்க மனமில்லை... கேட்டாலும் ஒருபயலும் செய்ய மாட்டான் என்பது தெரியும். குழம்பினார். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்... ஒரே ஒருவன் இருக்கிறான்.... அவன்தான் சரி !
சவடால் கோவிந்தன்...
கோவிந்தன் அந்த நாட்களில் வாழ்ந்து வந்த மிகப்பெரிய வாய்ச்சவடால் பேர்வழி. ‘சுட்ட காகம் பறந்தது’ என்று சொல்லிவிடுவான். அப்படி ஒரு நாநயம். சுந்தரம் கோவிந்தனின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இசக்கியப்பனின் டீக்கடை ரேடியோ கீழ்க்கண்டவாறு அறிவித்துக் கொண்டிருந்தது.
‘ வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து குமரி மாவட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் மக்களை அப்புறப்படுத்துமாறு மாவட்டக் கலெக்டர் உத்தரவிட்டார்! ‘
சுந்தரம் சொன்னார். இந்தக் கலக்டரால பெரிய எழவு ! கடசீல புயல வரவழச்சிட்டானே ?
லாக்கப்பில் அக்கினியும், பாஸ்கரனும் பசியில் கிடந்தார்கள். நல்ல வயிறு பசிக்கிண்ணே ! கடைல போயி எதையாவது தின்னுட்டு வருவமா ?
அக்கினிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது, நாம என்ன விருந்து ஊட்டுக்கா வந்துருக்கோம் ? பேசாம கெட ! கோவத்த வரத்திராத !
ரைட்டர் கேட்டார், அங்க என்னல கசகசப்பு ? பேசாம இருக்க மாட்டீயளா ?
சார் இவனுக்கு பசிக்காம் ! அக்கினி படாரென பதில் சொல்லவே ரைட்டர் சொன்னார். கொஞ்சம் பொறுங்கடே ! கான்ஸ்டபிள் வந்துரட்டும்... எல்லாருக்கும் புரோட்டாவும், சால்னாவும் வாங்கிட்டு வரச் சொல்லுகேன்... கையில சக்கரம் வச்சிருக்கீயளா ?
பாஸ்கரன் சந்தோஷத்தில், சார் எனக்க சட்டப்பையில முன்னூர் ரூவா இருக்கு....
அக்கினி, காலையில எங்கிட்ட அம்பது ரூவாத்தான் இருக்குனு சொன்ன ? தெம்மாடி நாய !
பாஸ்கரன் ஒன்றும் சொல்லவில்லை. வெளியில் மழை சோ’வென ஊற்றியது. கான்ஸ்டபிள் நான்கு பேட்டரி செல்களை வாங்கி வந்து ரேடியோவில் திணித்தார். ரேடியோ பேசத் துவங்கியது.
‘’ புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையைக் கடக்கவிருப்பதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுமாறு மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ‘’
பாஸ்கரன் சொன்னான், எண்ணே ! நீ மட்டும் காலையிலேயே எங்கூட வந்து இந்த கலெக்டருக்க கைய வெட்டி வீசிருந்தன்னா இந்த கலெக்டரு அறிக்கையெல்லாம் வெளியிட்டிருப்பானா ?
அக்கினி நடுங்கிப் போனான். எலே செத்த செவமே ! வாய வச்சிக்கிட்டு சும்மா கெடயாம்டே ! ஏற்கனவே வாங்குனது பத்தாதா ? இதுக்கே ஓந்தான் ரெத்தங் குடிச்சாத்தான் வர்மம் மாறும் ... இதுல என்னய இழுத்து உட்டுராத... ஒன்னய கெஞ்சி கேக்கேன் நல்லாருப்ப ... பேசாம இரிடே !
ஏட்டையா வந்தார்.
ரைட்டர் சார் ! பின்னாடி பழையாத்துல தண்ணி திகுதிகுன்னு ஏறிக்கிட்டே வருகு ! இன்னும் அஞ்சடி ஏறுனா நம்ம ஸ்டேசன் போக்கும் மொதலும்... கன்னியாகுமரி அத்தத்துல போயிதான் தேடணும்.... என்ன செய்யலாம் ?
அதுக்குன்னு பில்டிங்க தூக்கியா மாத்த முடியும் ? நடக்கது நடக்கும்! இந்த சர்க்கிளு எழவுடுப்பானையும் காணல... புதுப்பெயக்களோட கெடந்து ஒரே உபத்திரவம்... டிரெய்னிங்க முடிச்சிக்கிட்டு ஆட்டிக்கிட்டு வந்துருவானுவோ ! அப்புறம் நம்ம அவனுவளுக்குப் பாடம் எடுக்கணும் ! அப்பறம் நம்மகிட்ட வந்து அது சூத்த ! இது சொள்ளை’ன்னு சொல்லிக்கிட்டு நடப்பானுவோ !
ஏட்டைய்யா கேட்டார், மாம்பட்ட ரெய்டு போனவன இன்னுங் காணலியே ! ஆத்தோட போய்ட்டானா ?
விருதுநகர்க்காரம்லா.... ஆயுசுலயும் தண்ணியப் பாத்துருக்க மாட்டாம்... இங்க வந்து மழையப் பாத்ததும், காணாதவங் கஞ்சியக் கண்டா, ஓயாம ஊத்திக் குடிப்பானாம்’ங்குற கதையா எங்கயாவது நின்னு வாயப் பாத்துக்கிட்டு நிப்பானாயிருக்கும்...
வெளியில் புல்லட் சவுண்டு கேட்டது. ஸ்டேசனுக்குள் கப் சிப் ....
அங்கே சுந்தரமும் , சவடால் கோவிந்தனும் நடந்தே திட்டுவிளைக்கு வந்தார்கள். நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. எஸ்.டி.டி பூத் ஒன்று திறந்திருந்ததைக் கண்ட கோயிந்தனுக்கு ஒரு யோசனை உதித்தது. கடைக்குள்ளே அமர்ந்திருந்த பெரியவரிடம் போய், ‘அந்த மஞ்ச புக்க தாங்க தாத்தா! என்றான்.
அவர் கோபத்தில், எலே நா ஒனக்கு தாத்தாவாலே ?
சரி அண்ணாச்சி ! டைரக்ருடைரிய தாரும்! என்றான் கோவிந்தன்.
அவர் டெலிபோன் டைரக்டரியை எடுத்துத் தந்தார். அவ்வளவு பெரிய புத்தகத்தை ஊதித்தள்ளிவிடும் லாவகத்தில் கையாண்டதில் முழுப்புத்தகமும் கோயிந்தனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
முதல் போன் டயல் செய்தான்..... ரிங் அடித்தது,
எதிர்முனையில் ஹலோ என்று கேட்டதுதான் தாமதம், ஹலோ சுசீந்திரம் போலி டேஷன் ! நா டி.எஸ் .பி பேசுதேன்...
சார் ! இது சுசீலா ரைஸ்மில்லு சார் !
அடுத்தகால், ஹலோ சுசீந்திரம் போலி டேஷன் ! நா டி.எஸ் .பி பேசுதேன்.... அங்க கொல கேசுல பாஸ்கரன், அக்கினி ராஜின்னு ரெண்டு பெயலுவள புடிச்சி வச்சிரிக்கிதீயள்ளா ?
எதிர்முனையில் , என்னது எம்மொவன் கொல செஞ்சானா ? ஐயோ.... ஏசப்பா ! என்ற கூப்பாடு கேட்டது....
ஹலோ ! இது எந்த இடமுங்க ?
இது ஈ.பி லைன்மேனு சுந்தரத்துக்க வீடு சார்...... எம்மொவன வுட்டுருங்கய்யா....
வெளியில் நின்ற சுந்தரம் சத்தம் போட்டார், அடப்பாவிச் சண்டாளா ! இருந்து... இருந்து எனக்க வீட்டுக்கா ஃபோனப் போட்டு சொன்ன ? அவளுக்கு விசியந்தெரியதுக்கு முன்னால காரியத்த முடிச்சிரலாம்னு பாத்தா நீயே எடுத்து வெளம்பிட்டியே ? செத்தமுடிவான்....! இனி அவ வீட்டுல கெடந்து பெகளம் வெப்பாளே ! இங்கிலீசு தெரியாதுன்னா சொல்லித் தொலைய வேண்டியதானே ?
இந்தக் களேபரத்தைக் கண்ட பூத் ஓனர் எழுந்து வந்து விசாரித்தார். சுசீந்திரம் போலீஸ் ஸ்டேஷன் நம்பர் வேண்டுமென சுந்தரம் சொன்னதும், அவர் கோவிந்தனை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு சொன்னார்,
டைரக்டிரிய கேட்ட லெச்சனத்துலயே தெரிஞ்சிது! பெரிய படிப்பாளின்னு... வாயத் தொறந்து கேட்டா வாய்க்க கெடக்குற முத்து கீழ சிந்திருமா ? மூதேவி !
கோவிந்தன் அனக்கம் காட்டவில்லை... ஸ்டேஷன் நம்பரரை பேப்பரில் எழுதி கொடுக்கப்பட்டது. டயல் செய்தான் கோவிந்தன்.... மறுமுனையில் ஃபோனை எடுத்து பேசியவர் ரைட்டர், கழுத்தளவு நீரில் நின்று கொண்டு பதில் சொன்னார். ஹளோ ! சுயிந்திரம் பொலீஸ் டேசன் !
கோவிந்தன் பதட்டமடைந்தான். சார் அதுவந்து, சுந்தரம் ரைஸ் மில்லா சார் !
ரைட்டர் கடுப்பானார், யாருல அது வெளையாட்டு மயித்த அடிக்கது ? கொப்ப...ளி ! இங்கயே மனுசங்கெடந்து வெள்ளத்துல தத்தளிச்சிட்டு கெடக்கான்.... வந்தமுன்னா கரண்டைக்க கீழ ஒடிச்சிப்பூடுவேன் பாத்துக்கா ! போன வைல...
கோவிந்தன் போனைக் கட் செய்தான்.
பீரோவின் மேலிருந்த போனைக் கட் செய்த ரைட்டர், செவத்துப் பயெலுவோ ! சாயங்காலம் ஆனா தண்ணியப் போடுகது... சிக்கு ஏறுனாவோடனே ஏதாவது பூத்துல போயி நின்னுக்கிட்டு எவளுக்காவது போன போட்டு நாக்க நாக்க நீட்டுவானுவோ ! செவங்கள் !
மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்த புதிய சர்க்கிள் கேட்டார். ஏட்டையா ! இப்புடி பொசுக்குன்னு வெள்ளம் வருமுன்னு முன்னமே தெரிஞ்சிருக்கே ... ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்லா ! இனி இந்த இருட்டுக்குள்ள எப்பூடி நீந்தி கதவ கண்டுபுடிச்சி வெளிய போறது ? இன்னுங்கலியாணங்கூட ஆவலை... வம்படியா சாவப் போறேனே !
ஏட்டையா சொன்னார், இதுக்குத்தான் சொல்லுறது ... மூத்தோர் சொல்லும் , முனிநெல்லிக்கனியும் முன்னாலே கசக்கும்... பின்னாலே இனிக்கும்’னு..... நாந்தாஞ்சொன்னம்லா ! வெள்ளம் வந்தா ஓடமுடியாதுன்னு ... நீங்கதான சார் சொன்னிய நாங்கடல்லயே நீந்துவம்னு... வாங்க நீந்தி வெளிய போவலாம்....
லாக்கப்புக்குள் நீந்திக் கொண்டிருந்த பாஸ்கரனும், அக்கினியும் சிரித்தார்கள். தங்கள் தலைக்கு மேலிருந்த ஓட்டுக் கூரையில் அவர்களின் எதிர்காலம் இருந்தது.
ஏட்டையா சொன்னது உண்மைதான். புல்லட்டை ஸ்டாண்டு போட்டுவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்த சர்க்கிள் வந்தவுடன் கேட்ட கேள்வி... யோவ் ஏட்டைய்யா ! என்ன மயித்தப் புடுங்குன வேல மயித்த பாக்குறிய... வெளிய பூரா தண்ணி தேங்கி நிக்கு... ஒரு மம்பட்டிய எடுத்து வெட்டிவுட்டா என்ன கொள்ளையோ ?
ஏட்டையா சொன்னார், இன்னிக்கி ராத்திரி பூரா மழைன்னு சொல்லிருக்கு, பக்கத்துல ஆறு ஒடஞ்சிட்டுனா பூரா தண்ணியும் உள்ள வந்துரும், அதுனாலதான் எல்லா ரெக்கார்டுகளையும் தூக்கி ஒயரமான எடத்துல அடுக்கிட்டு இருக்கோம்.
ம்க்கும்... எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் வச்சிக்காரும்... வயிசுதான் ஆச்சி... புத்தி பூஜியம்.... ஸ்டேசனுக்குள்ள தண்ணி வந்தா எப்புடி தப்பிக்கணும்னு தெரியாமத்தான் போலீசு வேலக்கி வந்தீயளா ?
புது சர்க்கிளுக்கு இருபத்து ஐந்து வயது, ஏட்டையாவுக்கு இன்னும் ஆறு வருடங்களில் ரிட்டயர்மெண்ட்...
இதுயாருல ரெண்டு பேரு உள்ள கெடக்கான்? பாஸ்கரனும், அக்கினியும் பசியில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஏட்டைய்யா விஷயத்தைச் சொன்னார்.
இந்தா வந்து ரெண்டு பேரையும் பாத்துக்கிடுகென்! என்றவாறே சர்க்கிள் கக்கூசுக்குள் போனார்,
ஸ்டேஷனின் பக்கத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடி தீர்ந்ததில் ‘டமார்’ என்ற சப்தத்தோடு கரண்டு கட்டாகிப் போனது. கக்கூசிலிருந்து அய்யோ ஆத்தா ! என்றொரு சத்தம் ... ஓடிப்போய் டார்ச்லைட் அடித்துப் பார்த்தார்கள். சர்க்கிள் தரை சறுக்கித் தலைகீழாகக் கிடந்தார். பக்கத்தில் ஒரு சிலந்திப்பூச்சி ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஸ்டேஷன் இருந்தது ஒரு பழைய ஓட்டுக்கட்டிடம்... பழையாற்றின் படுகையில் அமைந்திருந்ததால் பாம்புகளும், தேளும், தெம்மாடிகளும் ஓய்வெடுக்கும் ஒரு பிரதேசமாக அது இருந்தது.
தூக்கிக் கொண்டு வந்து முன்னறையில் கிடத்தினார்கள், சர்க்கிள் கண்விழித்துப் பார்த்துவிட்டு அதிர்ந்தார்... ஆ போலீசு ! எதுக்கு சார் ! என்னயப் புடிச்சிட்டு வந்தீங்க ? அய்யோ ! எனக்கு எதுக்கு சார் போலீஸ் உடுப்பு போட்டு வுட்டீங்க ?
சரிதான் ... பொறமண்டையில அடிவாங்கிருக்கும்னு நெனைக்கேன்.... செவத்துக்கு ஓரும போயிட்டு.... ரைட்டர் சொன்னார்.
ஏட்டைய்யா, அதானே .... என்னா கெடகெடந்தான் ? இப்ப பாத்தேளா ? வெங்கப்பெயல்... இப்ப பாருங்க.... என்றவாறே ஓடிப்போய் லத்திக்கம்பை எடுத்து வந்து, தாய....ளி போலீஸ் ட்ரெஸ்ஸ போட்டுகிட்டு ஆளுவள மெரட்டி காசா வசூல் பண்ணுத....? இந்தா வாங்கிக்க என்று உடம்பு முழுவதும் வெளுத்தார்.... அய்யோ அம்மா ! என சர்க்கிளின் கதறல் விண்ணைப் பிளந்தது.
ஸ்டேஷனில் இருந்த யாரும் அசையவேயில்லை. ரைட்டர் சொன்னார், ஏட்டைய்யா ! போதும்... விசியம் வெளிய தெரிஞ்சின்னா அப்புறம் கஷ்டம்....
எப்பிடி தெரியும்...? நீரு வெளிய சொல்லுவீரா ?
ரைட்டர், நாஞ் சொல்ல மாட்டம்ப்பா !
ஏட்டைய்யா வாசலுக்குத் திரும்பி, ஓய் பாரா ! நீரு சொல்லுவீரா ?
பாரா பின்னால் திரும்பாமலே சொன்னார், நாந்தான் எதையும்பாக்கலியே ?
ஏட்டைய்யா லாக்கப் நோக்கிக் கேட்டார், எலேய்... நீங்க சொல்லுவேளா ?
அக்கினி சொன்னான், சர்க்கிளு சார் ஏன் படுத்துருக்காரு....? நாங்க தூங்கிட்டமே ! என்ன நடந்துது சார் ?
வலியில் கதறிய சர்க்கிள் மயக்கமடைந்தார். ரைட்டர் கடைக்குப் போய் புரோட்டாவும், சால்னாவும் வாங்கி வந்து எல்லாரும் சாப்பிட்டார்கள். அப்போது இரவு பத்துமணி. வெளியில் பேய்க்காற்றும் , பலத்த மழையும் பலத்த சப்தத்தோடு பெய்து கொண்டிருந்தது. வெளியில் ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வண்டிகளும் போய்க் கொண்டிருந்தன. அடித்த குளிரில் போலீஸ்காரர்களின் கண்கள் தூக்கத்தில் சொருகின...
மணி ஒன்று.... திடீரென்று ஒரு சத்தம், பழையாற்றின் மதகுகளில் ஒன்று உடைந்து ஸ்டேசனுக்குள் வெள்ளம் அலைபோலப் பாயவே ஸ்டேசனுக்குள் இருந்த அனைவரும் அந்தரத்தில் எழும்பி மிதந்தார்கள். ஒருநொடி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் குழம்பிய அனைவரும் ஆளுக்கொரு திசையில் நீந்திக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சர்க்கிள் ஃபேனில் தொங்கிக் கொண்டிருந்தார்.
சர்க்கிள் கேட்டார், ஏட்டைய்யா ! என்னாச்சி ? ஒரே இருட்டா இருக்கு... மேலல்லாம் ஒரே வலியா இருக்கே... என்னாச்சி எனக்கு?
செவத்துக்கு நினைவு வந்துட்டு..... அது ஒண்ணும் இல்ல சார் ! கக்கூசுல வழுக்கி விழுந்திட்டிய ! தூக்கிட்டு வந்து படுக்க வச்சிருந்தோம்... எல்லாரும் கண்ணசந்த நேரத்துல வெள்ளம் வந்துட்டு... நல்லா புடிச்சிக்காங்க வுட்டுராதீங்க !
இருட்டுக்குள் அவரவர் குரல்களை வைத்து மட்டுமே அவர்கள் இருக்கும் திசையை கணிக்க முடிந்தது.
ஏட்டைய்யா சத்தமாகச் சொன்னார், எலேய் பயல்களா ! லாக்கப்ப தொறக்க முடியாது... சாவி எங்க இருக்குன்னு கண்டுபுடிக்க முடியாதே... எப்பூடி வெளிய வருவிய ?
அக்கினி சொன்னான், பரவால்ல சார் ! தண்ணீயெல்லாம் வடிஞ்சி, கோர்ட்டு தொறந்தப்புறம் ஜாமீனு எடுத்து வெளிய வந்துருவோம் சார்...
தா.....ளி... இந்த சீரழிவுல ஒனக்கு எகத்தாளம்... இல்லியாடே ?
என்ன சார் சொல்லுகிய ? எல்லாருஞ் சாவப் போறோம் ... அப்புறமென்ன சார் மெரட்டிட்டு இருக்கீங்க? – இது பாஸ்கரன்.
ஏட்டைய்யா சொன்னார்.... இரு மகனே ! விடியட்டும்... ஒனக்கு இருக்கு ஒத்தடம்... அப்போதுதான் ஃபோன் பெல் அடித்தது. எடுத்துப் பேசியதில் மறுமுனையில் கோவிந்தன்.
சுந்தரமும், கோயிந்தனும் நடந்து நடந்து வந்ததில் புத்தேரி குளத்துக்கரையில் நடந்து கொண்டிருந்தார்கள். பேய்க்காற்று பிடித்து தள்ளியது. மழைவேறு... குளத்தில் தண்ணீர் சாலையின் மட்டத்துக்கு வந்து எப்போது வேண்டுமானாலும் மறுகால் பாயலாம் அல்லது குளம் உடையலாம் என்னும் சூழலில் இருந்தது. என்ன செய்வதேன்றே இருவருக்கும் தெரியவில்லை.... திரும்ப வீட்டுக்குப் போக வேண்டுமானால் இன்னும் பத்து கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும் என்றதால் புத்தேரி ஆஸ்பத்திரியில் ராத்திரிக்கு தங்கி விட்டு காலையில் போலீஸ் ஸ்டேசனுக்குப் போகலாம் என்று முடிவு செய்து சி.பி.ஹெச் மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள். அங்கே ஏற்கனவே தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள், பாதுகாப்பு காரணமாக தங்க வைக்கப் பட்டிருந்தார்கள். அவர்களோடு இவர்களும் இணைந்து கொண்டு மருத்துவமனை சார்பில் தயார் செய்யப்பட்ட சூடான கஞ்சியையும், சுண்டல் கறியும் தின்று விட்டுப் படுத்துக் கொண்டார்கள்.
போலீஸ் ஸ்டேஷன் நீருக்குள் மூழ்கிய விஷயமறிந்து கரையில் ஆட்கள் கூடினார்கள். தீயணைப்பு வண்டிக்கு தகவல் கொடுத்து வழியில் மரம் விழுந்து கிடந்ததால் தீயணைப்பு வண்டி வர வழியில்லாமல் ஆஸ்ராமத்தில் கிடந்தது. ஸ்டேசனுக்குள் நீர் மட்டம் அதிகரித்ததில் அபாயம் அதிகரித்துக் கொண்டே போனது .
அக்கினியும், பாஸ்கரனும் சேர்ந்து ஓட்டைப் பிரித்தார்கள்.
ஏட்டைய்யா சத்தம் போட்டார். லேய் ! தப்பிக்கவா பாக்குதிய ?
பாஸ்கரன் சொன்னான், சார் நீங்க தப்பிக்கணுமுன்னா எங்ககூட சேந்து நாலு ஓட்ட எளக்குங்க ! உள்ள கெடந்து சாவவா போறியா ? வாங்க ஏட்டைய்யா! என்றான்.
ஏட்டைய்யா ஒத்தாசைக்கு வந்தார், எமகாலனுவடே நீங்க....
ஏட்டைய்யா , ரைட்டர், பாரா , சர்க்கிள், அக்கினி, பாஸ்கரன் என ஆறுபேரும் வெளியேறி ஸ்டேசனின் மேற்கூரையில் அமர்ந்தார்கள், இருட்டில் ஆட்கள் அசைவதைக் கண்ட மக்கள், போலீஸ்காரர்கள் உயிரோடிருப்பதை டார்ச் வெளிச்சத்தில் பார்த்து ஆர்ப்பரித்தார்கள். சர்க்கிள் என்னவோ பெரிய கதாநாயகன் மாதிரி கூட்டத்தை நோக்கி கையசைத்தார். கையைத் தூக்க முடியவில்லை ... அப்ப்டியொரு வலி !
அப்போது வழியில் கிடந்த மரம் அகற்றப்பட்டு தீயணைப்பு வண்டி வந்து சேர்ந்தது. இங்கிருந்து பெரிய வடத்தைப் போட்டார்கள். ஏட்டைய்யா அதைக் கையில் பற்றிக் கொண்டார்.
அந்த நேரம் பார்த்து தூரத்தில் ஒரு கூப்பாடு கேட்டது. அங்கே டார்ச் லைட் அடித்துப் பார்த்ததில் ஆற்றின் மறுகரையில் ஒரு குடும்பம் கைக்குழந்தைகளோடு தங்கள் வீட்டின் மேற்கூரையில் அமர்ந்துகொண்டு தங்களைக் காப்பாற்ற வேண்டிக் கதறிக்கொண்டிருந்தது.
இந்தக்காட்சியைக் கண்ட மக்கள்கூட்டம் ஸ்தம்பித்து நின்றது. தீயணைப்புப்படை வீரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ஆற்றில் ஓடிய வெள்ளத்தின் வேகத்தை யாராலும் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை. மீனவர்களின் படகுகளைக் கொண்டு வந்தாலும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியாது என்பது எல்லாருக்கும் தெரிந்திருந்தாலும் அந்தக் குடும்பத்தைக் கைவிட யாருக்கும் மனமில்லை . அதே சமயம் அவர்களைக் காப்பாற்ற எடுக்கும் முடிவு தங்களுடைய முடிவு என்பது தீயணைப்பு படை வீர்ர்களுக்கும் தெரியும்.
ஏட்டையா சர்க்கிளிடம் கேட்டார், சார் ! நீங்கதான் கடல்லயே நீந்துரவரு ஆச்சே ! நீங்க போய்க் காப்பாத்தலாமே !
சர்க்கிள் வாயே திறக்கவில்லை. கூட்டமே பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டு நின்றது. இப்போது அவர்களின் கவலையெல்லாம் போலீஸ்காரர்களிடமிருந்து திரும்பி அந்தக் குடும்பத்தின் மீது இருந்தது.
இத்தனைக்கும் ஒரு இருபது மீட்டர் நீந்தினால் அந்த மறுகரையை அடைந்து விடலாம் என்றாலும் ஆற்றில் குதித்த மறுநொடியே ஆற்றின் போக்கில் நூறு மீட்டர் இழுத்துக் கொண்டு போய் விடும் அபாயம் இருந்தது.
மேல்கரையில் நின்ற ஆட்கள், தீயணைப்பு வீரர்கள் என்று யாரும் எதிர்பாராத தருணத்தில் ஏட்டைய்யாவின் கையிலிருந்த வடத்தைத் தன்னுடைய இடுப்பில் கட்டிக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தான் அக்கினி.... அத்தனை பேரும் திகைத்தார்கள். ஏட்டைய்யா உட்பட அக்கினியோடு அமர்ந்திருந்த அத்தனை பேரும் மிரண்டு போனார்கள்.
பாஸ்கரன் கதறினான், எண்ணே !
ஆற்றுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. அக்கினியைக் காணவில்லை.... சர்க்கிள் உட்பட அத்தனை பேரும் அழுதார்கள். கரையிலிருந்த அனைவரும் கடவுளை வேண்டினார்கள். அந்த மழையிலும் கூட தீயணைப்பு வீரர்களின் கண்ணில் நீர் வழிந்தது. பயிற்சி பெற்ற தங்களால் இயலாத ஒன்று எப்படி ஒரு சாமானியனுக்குக் கைகூடும் ? எந்த நம்பிக்கையில் அவன் இந்தக் கொடூரமான நீரோட்டத்தில் பாய்ந்தான் ? என்ற எண்ணங்கள் அவர்களின் மனதைப் பிசைந்தது.
தன் மகனைக் காப்பாற்ற வேண்டி நடைபயணம் மேற்கொண்டு , கஞ்சி குடித்த அசதியில் சுந்தரம் தூங்கிக் கொண்டிருந்தார். கோயிந்தன் அந்த வேளையிலும்கூட ஐந்தாறு பேரை பக்கத்தில் அமர்த்திக்கொண்டு வியாக்கியானம் பேசிக்கொண்டிருந்தான்.
‘’ இப்புடித்தான் ஒரு தடவ முக்கடல் அணைக்க மல உச்சியில நின்னுகிட்டிருந்தேன்... அப்போ பாத்து ஒரு பெரிய மொதலை, ஒரு ஆள இழுத்துகிட்டு நீந்திக்கிட்டிருந்து... உச்சியிலிருந்து ஒத்த சாட்டம்.... டபீர்’னு அணைல வந்து வுழுந்தேன்.... நீந்திப் போயி மொதலைக்க வாயிலயே ஒத்த சவுட்டு ... மொதல வாயப் பொளந்துட்டு ... அப்புறம் அந்த ஆள தூக்கி தோள்ள போட்டுகிட்டு நீந்தி கரைக்கி வந்தேன்..... ‘’
அந்த ஆட்கள் கோயிந்தனின் கதையை, அந்த முதலையின் இறுதி முடிவைப்போல வாயைப் பிளந்தவாறே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இங்கே கதை வேறுமாதிரி ஆனது... ஆற்றின் மறுகரையில் தத்தளித்துக் கொண்டிருந்த குடும்பம் ஆற்றின் நீரளவு அதிகரிக்கவே செய்வதறியாது அலறியது...
அப்போது கூட்டத்தில் ஒரு குரல், எலே ! அந்தா ஒரு தலை தெரியி.....
அந்தப் பகுதியில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டு கூட்டமே அங்கு திரும்பிப் பார்த்தது.... மறுகரையில் ஒரு செடியின் கிளையைப் பிடித்தவாறே அக்கினி நீந்திக் கொண்டிருந்தான். கூட்டமே ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. நாளைய செய்தித் தலைப்புகளின் நாயகனாகப் போவது தெரியாமல் அக்கினி அந்த வீட்டின் கூரையை நோக்கி மெதுவாக முன்னேறினான்....
அவனது இடுப்பில் கட்டியிருந்த கயிறு இந்த முனையில் இழுக்கப்பட்டது கண்ட ஏட்டைய்யா தன்னையறியாமல் கத்தினார்... லே மக்கா அக்கினி.... தூள் கெளப்பிட்ட !
கரையில் எஸ்.பி நிற்பதையறியாத சர்க்கிள் துள்ளிக்குதித்து விசிலடித்தார்.
அந்த வீட்டின் கூரையில் ஏறினான் அக்கினி ! அந்தக் குடும்பம் மகிழ்ந்து போனது. கணவனும், மனைவியும், இரண்டு பிள்ளைகளும், ஒருபாட்டியுமாக மொத்தம் ஐந்து பேர். மழை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததையடுத்து மணக்குடியில் சென்று இரண்டு படகுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள். அக்கினி தன் இடுப்பில் கட்டியிருந்த வடத்தை அவிழ்த்து, பக்கத்தில் நின்று கொண்டிருந்த தென்னை மரத்தைச் சுற்றி இழுத்து அந்த வீட்டின் கூரையில் இருந்த இரண்டு ஓடுகளை உடைத்து அந்த மர உத்திரத்தில் நான்கு முடிச்சுகளைப் போட்டு இறுகக் கட்டினான். ஆற்றின் இந்தப் பகுதியில் இருந்து கூடுதல் கயிறை தன்னுடைய பக்கம் இருக்கும் வடத்தின் அந்த முனையில் கட்டி தன்பக்கம் விடச் சொன்னான். தீயணைப்பு படை வீர்ர்களும் தீயாய் வேலை செய்தார்கள்.
அக்கினி ஒரு ராணுவத் தளபதி போல இயங்குவதை மாவட்ட எஸ்.பி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கூடவே பாஸ்கரனும்... அக்கினிராஜனா இது ?
கூடுதலாக வந்த வடத்தை தென்னை மரத்தில் கொஞ்சம் உயரமாகச் சுற்றிக் கட்டி விட்டு மறுகரையில் இருந்த யாராவது ஒரு தீயணைப்பு படை வீர்ரைக் கயிற்றைப் பிடித்து கொண்டே ஆற்றைக் கடக்க உத்தரவிட்டான். துணிச்சலான ஒரு வீரன் முன்வந்தான். அவனது இடுப்பில் இன்னொரு வடத்தைக் கட்டி , பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டு, அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டே அவன் ஆற்றைக் கடப்பதை கூட்டம் பதைபதைப்போடு பார்த்துக் கொண்டு நின்றது. அவன் மறுகரையை எட்டினான். ஏற்கனவே தென்னைமரத்தில் தான் கட்டிய கயிற்றை அவிழ்த்து அவனது கையில் கொடுத்த அக்கினி , வீரன் கொண்டு வந்த கயிற்றை வாங்கி அந்தத் தென்னை மரத்தில் கட்டிவிட்டு , வீரனிடம் இந்த முனையை அந்தப்பக்கத்தில் இருக்கும் தீயணைப்பு வண்டியின் பின்பக்கத்தில் கட்டுமாறு சொன்னான்.
வீரன் மறுபடி ஆற்றைக் கடந்தான். இப்போது ஒரே ஒரு வடம் ஆற்றின் கரையிலிருந்து அக்கினி கட்டி வைத்திருந்த தென்னை மரத்தைச் சுற்றிக் கொண்டு மீண்டும் ஆற்றின் மறுகரையில் நின்ற தீயணைப்பு வீரர்களின் கையில் இருந்தது. அதைக்கொண்டு போய் தீயணைப்பு வண்டியில் பின்பக்கமாகக் கட்டினார்கள். கயிற்றைப் பிடித்துத் தொங்குபவர், தீயணைப்பு வண்டி முன்னோக்கிப் போகும்போது ஆற்றைக் கடக்கலாம் என்பது ஏற்பாடு. கயிற்றின் மறுமுனையை இன்னொரு தீயணைப்பு வண்டியில் கட்டி அது தானியங்கி இழுவை இயந்திரத்தில் மாட்டப்பட்டு கயிற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கும். முதலில் இரண்டு வீரர்கள் அந்தப்பக்கம் சென்று இரண்டு குழந்தைகளைக் கொண்டு வந்தார்கள். அப்புறம் அந்தக் கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் பெரும் சிரமத்துக்கிடையே கடந்தார்கள். பாட்டியை முதுகில் தூக்கிக் கொண்ட அக்கினி சொன்னான்.
ஆச்சி ! ஒனக்கு ஆயுசு கெட்டியா இருக்கணும்னா , என்முதுக கெட்டியாப் புடிச்சிக்கா ! இல்லைன்னா கன்னியாமரி கடற்கரைலதான் போயி கெடப்ப ! வெளங்கிச்சா ?
பாட்டி ஆமோதித்ததையடுத்து கிழவி சுமக்கும் படலம் ஆரம்பித்தது. கிழவி கனத்துக் கிடந்தாள். அக்கினி கேட்டான், ஆச்சி டெய்லி புரோட்டா திம்பியா? எந்தாக் கனங் கனக்கா பெயமொவ ? ஆச்சி சிரித்தாள், கயிறு குலுங்கியது.
ஒருவழியாக கரையை அடையும்போது அக்கினி குனிந்து கீழே பார்த்தான், சர்க்கிள், ஏட்டைய்யா மற்றும் பலரை டாப் ஆங்கிளில் கண்டான். அவர்கள் இன்னும் ஸ்டேஷன் கூரையிலேயே அமர்ந்திருந்தார்கள். பாஸ்கரன் ஒரு ஓரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். விடிந்து விட்டது.
அக்கினி கரையை அடைந்ததுதான் தாமதம். மக்கள் ஓடிவந்து அவனைத் தூக்கிக் கொண்டாடினார்கள். எஸ். பி வந்து கைகுலுக்கி வாழ்த்தினார். கலெக்டரும் வந்துவிட்டார்.
‘நான் கேல்விப் பற்றேன்... அக்கினியைப் பற்றி....’ ரெம்ப சந்தேசம்! என்னோட காடிலே உங்கலே டிராப் பன்றேன் ! என்றார் கலெக்டர். கலெக்டர் ஒரு இந்தியாக்காரர். தமிழ்நாட்டுக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டிருந்தது. தமிழ்தான் கொஞ்சம் ததிங்கினத்தோம்!
அப்போது ஒரு குரல் கேட்டது, சார் ! அவன் ஒரு அக்கியுஸ்டு ! ரைட்டர் கதறினார்.
கலெக்டர் எஸ்.பி.யிடம் கேட்டார். அவங்கே ஏன் அங்கே ஓக்காண்டிருக்காங்கோ ! இங்கே இடமில்லே ? அங்கேதானே முன்னாடி ஸ்டேசன் இருந்திச்சு ?
தீயணைப்புபடை வீரர்கள் பதறிப்போய் ஏணியைப் போட்டு போலீஸ்காரர்களை மீட்டார்கள். சர்க்கிளின் முகம் வெளிறியிருந்தது.
ஏட்டைய்யா போய் கலெக்டரிடம் சொன்னார். ஐய்யா ! நேத்து ஓங்காபீசுல வந்து பெகளம் வச்சது இவுனுவதான் !
கலெக்டர் பார்த்தார், யாரு அக்கினியா ? இல்லியே ! அவனோட மூஞ்சி ஊசி மாதிரி இருந்திச்சு !
பாஸ்கரன் அழைத்து வரப்பட்டு தலைகுனிந்து நின்றான்.
கலெக்டர், ஆ ! இவன்தான் நேத்தி வந்து கூச்சல் போட்டான்....
ஏட்டைய்யா நடந்த கதைகளைச் சொன்னார்.
கலெக்டர் வாய்விட்டுச் சிரித்தார். அரே அக்கினி பைய்யா ! இனிமேல் அப்டியெல்லாம் பன்னூக்கூடாது ! நோ வரீஸ் ! லீவ் தெம் ஃப்ரீ !! என்று எஸ்.பி.யிடம் சொல்லிவிட்டு அக்கினியின் கழுத்தில் மாலை ஒன்றைப் போட்டுவிட்டு தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு சொல்லிவிட்டுப் போனார்.
எஸ்.பி அக்கினியின் கைகளைப் பிடித்து சொன்னார், தம்பி ! அரசாங்க சம்பளம் வாங்குற நாங்களே கையக்கட்டி நின்னப்போ இத்தனை பயங்கரமான வெள்ளத்துல குதிச்சி ஒரு குடும்பத்த காப்பாத்துன ! உனக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியலை ! நீ எத்தனாவது படிச்சிருக்க ?
பதினோண்ணாப்பு சார் !
சரி வரும் திங்கள்கிழமை என்னை வந்து அலுவலத்தில் பார் ! என்று சொல்லிவிட்டு மற்றொரு போலீஸ் ஜீப்பில் அக்கினியையும், பாஸ்கரனையும் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டு கிளம்பினார் எஸ்.பி.
அக்கினியும் பாஸ்கரனும் ஜாலியாக ஜீப்பில் அழகியபாண்டியபுரம் நோக்கிப் பயணித்தார்கள்.
புத்தேரி ஆஸ்பத்திரியில் கண்விழித்த சுந்தரமும், கோயிந்தனும் வானொலியில் செய்தி ஒன்றைக் கேட்டார்கள். அதில் செய்தி இவ்வாறு ஒலி பரப்பப் பட்டது.
‘’அழகியபாண்டிய புரம் ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் .சுந்தரத்தின் மகன் அக்கினிராஜன், கலெக்டரின் கையால் ...... கீ.......................டப் !
பேட்டரிக் கட்டைகள் தீர்ந்து ரேடியோ மண்டையைப் போட்டது.
அய்யோ ! இறைவா ! கலெக்டரின் கையால் அடித்துக் கொல்லப்பட்டானா ? பாதியில் நின்றுபோன செய்தி வாக்கியம் பல்வேறு சந்தேகங்களை சுந்தரத்தின் தலைக்குள் புகுத்தியது.
கக்கூசில் வழுக்கி விழுந்த தன்னுடைய முதுகில் லத்திக் கோடுகள் எப்படி வந்தன என்று சர்க்கிளுக்கு எப்படித் தெரியாதோ, அதுபோலவே தன்னுடைய மகன் அக்கினிக்கு அடுத்த வாரம் போலீசில் சேர அழைப்பு வரும் என்பது சுந்தரத்துக்குத் தெரியாது.
ஏட்டையா வீட்டில் தன்னுடைய மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். ஒம்மொவன் வயசுதானிருக்கும் அந்த சர்க்கிளு பெயலுக்கு.... என்னா எகத்தாளம் ? எங்கிட்ட அடாபுடான்னான் ! வெளுத்துட்டேன் ! சர்க்கிளுன்னா என்ன ? ரெண்டு மாணியவா தூக்கிட்டு நடக்கான் ? எனக்க அனுபவந்தான் அவனுக்க வயிசு ! நாம்போலீசுல சேரும்போது அவனுக்க அப்பனுக்கே கலியாணம் ஆயிருக்காது ! மொண்ணப்பெயல் ! வயசுக்குத் தகுந்த பேச்சு பேசிருந்தா அந்த சின்னப் பயலை நா ஏன் அடிக்கப்போறேன்?
-பிரபு தர்மராஜ்
0 Comments